மந்திர விளக்கம்” (பாகம் – 5)

போற்றித் திருவுருவில் ஏழாவதாக உள்ள மந்திரம் “ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி ஓம்” என்பதாகும்.

இதில் உண்மை, பரம்பொருள் என்ற இரண்டு சொற்கள் உள்ளன. தமிழில் உண்மை, வாய்மை, மெய்ம்மை என்ற சொற்கள் ஒரே பொருளில் வழங்கப் பெறுதல் மரபு. ஓரளவு இச்சொற்களின் இடையே வேறுபாடு இருப்பினும் இவற்றை ஒரு பொருட் பன்மொழியாக இலக்கியத்தில் வழங்குதலைக் காண முடிகின்றது.

“சத்யம்” என்ற வட சொல்லின் நேர்ப் பொருள் உடையன இம் மூன்று தமிழ்ச் சொற்களும், “சத்” என்ற பகுதியின் அடியாகச் சத்யம் பிறந்தது போல “உள்” என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது உண்மை என்ற சொல். உள் என்ற பகுதிக்கு “உள்ளே” என்றும் நிலைத்திருப்பது போன்ற பல பொருள்கள் உள்ளன என்றாலும் உள்ளே என்ற பொருளையும் நிலைத்திருப்பது என்ற பொருளையும் இம்மந்திரத்தில் உள்ள “உண்மை” என்ற சொல் தாங்கி நிற்கின்றது. உண்மை என்பது எளிதில் புலப்படாதபடி உள்ளே இருப்பது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எவ்வளவு அறிவுடையோர்களும் உண்மையைக் காண வேண்டுமாயின் நீண்ட முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது. பல சமயங்களில் புறத்தே காணப்படும் இயல்புக்கு நேர்மாறாக உள்ளே இருப்பது வேறாக இருப்பதையும் காண்கிறோம். எனவே ஒன்றின் உண்மையான நிலை என்ன என்பதை அதன் புறத்தை வைத்தோ அகத்தின் ஒரு பகுதியைக் கண்டோ முடிவு செய்துவிட முடியாது என்பதும் வெளிப்படை. ஆகவே, உண்மை உள்ளே உள்ளது என்பதன் ஆழமான பொருளையும் அது எளிதிற் காண முடியாதது என்ற பொருளையும் நாம் அறிய முடிகிறது. இதனை அடுத்துள்ள பொருள் “நிலைத்திருப்பது” என்பதாகும். உண்மை ஒன்றுதான் என்றும் நிலைத்து நிற்கும்.

இந்த இரண்டு பொருள்களும் இந்த “சத்யம்” அல்லது உண்மைக்கு இருத்தலின் இந்த இரண்டு பொருள்களும் உள்ள கடவுளையும் சத்யத்தின் வடிவம் என்று நம்முன்னோர் கூறினர். நம் காலத்தில் தம் வாழ்நாள் முழுவதையும் சத்ய சோதனையில் கழித்த மகாத்மா காந்தி ‘Truth is God’ என்று கூறிப்போனார். இறைவன் சத்தியத்தின் வடிவானாவன் என்பதை நம் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பலபடியாகக் கூறிச் சென்றுள்ளனர். “மெய்ப்பொருள்” என்று திருவாசகம் கூறுகிறது. எனவே பரம் பொருளாகிய அன்னையை உண்மையின் வடிவானவள் என்று கூறுவதில் தவறு இல்லை அன்றோ! இக்கருத்தைத் தான் லலிதா “ஸத்ய ரூபா” (818) என்று “ஸத்யஜ்ஞான ஆனந்தரூபா” (791) ஸத்ய ஆனந்த ஸ்வரூபிணீ (646) என்றும் போற்றிப் பேசுகிறது.

பரம்பொருள் என்று இங்குக் கூறப்படுவது மூலப் பொருளான பராசக்தியையே யாகும். அனைத்துக்கும் மூலமாய் இருக்கின்ற காரணத்தால் அவளைப் பரம்பொருள் என்று கூறப் பெற்றுள்ளது. பராசக்தி (572) என்ற லலிதையின் மந்திரத்திற்குப் பொருள் கூறி விளக்கம் கூறுபவர்கள் இவ்வாறு கூறுகின்றனா.

“சிவத்திடம் முதன் முதலாய் உதிக்கும் “அஹம்” என்ற உணர்வு ஆதிசக்தி எனப்பெறும். பிரகாசமான சுத்த சிவத்தை விமர்சனம் செய்வது இந்த ஆதிசக்தியே. ஆதிசக்தியை ஆதாரமாகக் கொண்டு உலகைத் தோற்றுவிக்கும் மாயைதான் பராசக்தி, ஜடசக்தி, மாயாசக்;தி என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றாள். இந்தப் பராசக்திதான் நாமரூபங்களால் பல பேதமுற்று விளங்கும் உலகின் காரணமாக உள்ளாள். இவளது தோற்றங்கள்தான் இச்சாசக்தி, ஞானசக்தி, கிhpயா சக்தி என்ற மூவரும் ஆவர்!”

எனவே உண்மைப் பரம்பொருள் என்று மந்திரம் கூறுவது மிகவும் பொருத்தமாகும். இதனை அடுத்துள்ள மந்திரம் “ஓம் உயிராய் நின்றவளே போற்றி ஓம்” என்பதாகும். இந்த அண்ட பிண்ட சராசரம் அனைத்தையும் படைத்து, காத்து அழிக்கின்ற அப்பெருமாட்டி ஒவ்வோர் உயிரினுள்ளும் உயிராய் நிற்கின்றாள் என்பதே இதன் பொருளாகும். “உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிறைசேரப் படைத்து அவற்றின் உ யிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் கோயில் என்று திருவீழிமிழலைப் பதிகத்தில் ஞான சம்பந்தர் பாடுகிறார். எனவே அன்னை எல்லா உயிர்கட்கும் உயிராய் உள்ளாள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். லலிதா சகஸ்ரம் இக்கருத்தை இன்னும் விரிவாகக் கூறுகின்றது. “ப்ராண ஈஸ்வரி” (831) என்றும், “ப்ராண தாத்ரி (832) ப்ராண சக்தியை அளிக்கவள் என்றும், “ப்ராண ரூபிணி” (784) என்றும், “ப்ராணதா (783) உயிர்ச்சக்தியை அருள்பவள் என்றும், “ஆதிசக்தி” (615) ‘அமேயா” (616) பரம்பொருளின் வடிவம் என்று காட்டக் கூடிய வடிவுடையவள் என்றும் கூறுகிற இந்த மந்திரம், எவ்வளவு நுண்மையானது என்பதை நன்கு தெளிய வேண்டும். இதனை அடுத்து உள்ள 9வது மந்திரம் “ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம்” என்பதாகும்.

உலகின் எல்லா இடங்களிலும் அன்னை ஊடுருவி நின்றாலும் மக்கள் துயர் துடைக்க மருவத்தூர் போன்ற இடங்களில் எளி வந்த தன்மையுடன் வெளிப்பட்டு நிற்கின்றாள். அவளை நாமாகத் தேடிச் சென்று அடைதல் இயலாத காரியம். அன்னையே ஒருமுறை கூறியுள்ளது இதனை வலியுறுத்தும். “மகனே! எத்தனையோ பேர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தவம் புரிகின்றனர். புற்றாகவும் மரமாகவும் மாறிவிட்ட நிலையிலும் அவர்கள் என்னை இன்னும் காண முடியவில்லை. ஏன் தெரியுமா? நானாக அவர்களிடம் சென்றால் ஒழிய யாரும் நாமாக என்னைத் தேடிக் கண்டுபிடித்தல் இயலவே இயலாது அவர்கள் மாட்டுக் கொண்ட கருணையால் என் எளிவந்த தன்மையால் (ஸௌலப்பியம்) அவர்களிடம் நானாகச் சென்றால்தான் அவர்கள் என்னை அடைய முடியும். இந்த இடத்தின் பெருமை என்ன தெரியுமா? இங்கு நானே இரங்கிவந்து உங்களுடன் பேசுகிறேன். இன்ன பணியைச் செய்க என்று உங்கட்குக் கட்டளை இடுகிறேன். எளிவந்த இந்த என் இயல்பைப் பயன்படுத்திக் கொண்டு நான் இடும் பணியை நிறைவேற்றுவீர்களேயானால் எளிதில் என்னை அடைய முடியும்” இவ்வாறு அன்னை அருள்வாக்கில் கூறினாள் ஆகலானும் இத்துணைச் சிறப்புக்கும் இடம் தருவது மேல்மருவத்தூர் ஆகலானும் “மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி ஓம்” என்ற இந்த மந்திரம் மிகப் பெரிய உண்மையை வெளியிடுவதாக அமைந்துள்ளது.

தொடரும்

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 12 (1982) பக்கம்: 17-19

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here