அம்மன் அருளால் நெல் அறுவடை செய்தேன்

நான் ஒரு ஏழை விவசாயி. மேல்மருவத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள பாளையூரில் குடியிருந்து வருகிறேன். 1978ஆம் வருஷம் நான் செய்யூர் சென்றிருந்த போது அங்கு என் நண்பர் ஒருவரிடமிருந்து மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் செய்யும் அற்புதங்களைப் பற்றி கேள்விப் பட்டேன். அவ்வருஷம் மேல் மருவத்தூரில் நடக்கப்போகும் ஆடிப்பூர விழாவுக்கு போய் பார்க்கும்படி சொன்னார். அதே மாதிரி அவ்விழாவுக்கு நானும் என் மனைவியும் சென்று வந்தோம்.

பின்னிட்டு 3-11-78 மேல்மருவத்தூர் சென்று அருள்வாக்குக் கேட்டேன். அம்மனிடம் என் மூத்த குமாரத்திக்கு மகப்பேறு வேண்டினேன். என்னுடைய இரண்டாவது குமாரத்தி அறுவை சிகிச்சைப் பற்றியும் கேட்டேன். அம்மன் சொன்னபடி செய்தேன். அவள் அருளால் என் மூத்த குமாரத்திக்குக் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது குமாரத்திக்கு நோய் நீங்கியது.

எனக்கு இப்போது அம்மன் பேரில் நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டு விட்டது. அடிக்கடி ஆலயம் சென்று அருள்வாக்கும் கேட்டு வந்தேன். அம்மன் ஒரு தடவை ரூ 301/- கட்டி கலா பூஜை செய்யும்படி இட்ட கட்டளையை சிரத்தையுடன் பணம் கட்டி செய்தேன். அதன் பலனாக என் குடும்பம் முன்னேறியது.

பாளையூர் அடுத்த தாங்களத்தூர் கிராமத்தில் எனக்கு சொந்தமாகச் சுமார் இரண்டு ஏக்கர் நிலமுண்டு. அதில் நெல் சாகுபடி செய்திருந்தேன். தாங்களத்தூரில் எனக்கு சாய்கால் இல்லாததால் அக்கிராமத்திலுள்ள சிலர் அறுவடைக்குத் தயாராக இருந்த என் நிலத்தில் பிரவேசித்து பலவந்தமாய் அறுவடை செய்ய முயன்றார்கள். இது தகவல் தெரிந்து நான் அம்மனிடம் விரைந்தோடி அருள்வாக்கின் போது என் குறையைச் சொல்லி முறையிட்டேன். அம்மன் கருணை கூர்ந்து சொன்னதாவது ‘‘மகனே பயப்படாதே! நீ தைரியமாக போய் என் நிலத்தில் அறுவடை செய். யாராவது உனக்கு இடைஞ்சல் செய்தால் அவர்களை ஊதிவிடுவேன்” என்று சொல்லி அம்மன் சைகையால் ஊதி காண்பித்தாள்.

அம்மன் ஆணையின்படி ‘‘ஓம் சக்தி” ‘‘ஓம் சக்தி” என்று சொல்லிக் கொண்டே மாலையூரிலிருந்து ஆட்களை அழைத்துச் சென்று, நெல் அறுவடை செய்து மகசூலை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன். எனக்கு தீங்கு செய்ய எண்ணிய சுமார் 20 நபர்கள் நான் அறுவடை செய்யும்போது சுமார் 50 அடி தூரத்தில் நின்று கொண்டு ஏதோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்களே யொழிய நிலத்தில் பிரவேசிக்கவில்லை.

ஆசிரியர் குறிப்பு:-

மருவத்தூரில் செல்வந்தர்கள் மட்டுமே பயனடைகிறார்கள் என்ற தவறான பிரச்சாரம் செய்பவர்கள் கவனத்திற்கு இக்கட்டுரை இதை எழுதியவர் மிகச் சாதாரணமான குடும்பத்தார்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 36

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here