தோத்திரங்களும் கமலைப் பராசத்தி மாலையும்

பகுதி- 2

நூல் வரலாறு

திருவாரூரில் கோயில்கொண்ட தேவியின் பெயர் ‘‘கமலை” என்பதாகும். ‘‘கமலாட்சி” எனவும் அழைப்பதுண்டு. ‘‘ஆட்சி” – என்று பெயர் தாங்கும் சத்தியர் வரிசையில் இவ்வன்னையையும் வைத்துப் பாராட்டுவது வழக்கம். காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, நாகை நீலாட்சி (நீல யதாட்சி), கோடிக்கரை கோடியாட்சி (மச்ச புராணத்தில் குறிக்கப்பெறும் அன்னை) ஆருர்க் கமலாட்சி – என அன்னையரின் பெயர்கள் வரிசையாக வரும். இவ்வன்னையின் பேரில் பாடப்பெற்ற நூலே ‘‘கமலை பராசத்தி மாலை”யாகும்.

இந்நூல் எப்போது எழுதப்பெற்றது என்றோ, எழுதியவர் யார் என்றோ இதுவரை தெரியவில்லை. இது அபிராமி அந்தாதிக்கு முன்னோ, பின்னோ எழுந்ததாகக் கொள்ளலாம், இவ்விரண்டும் ஒன்றையொன்று சார்ந்த நூல்போல் இவற்றின் நடை அமைந்துள்ளது, பாடல்களின் தன்மை, தேவியை நெஞ்சிலே நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனை முதன் முதல் வெளியிட்ட ‘‘திருக்கோயில்” ஏட்டின் ஆசிரியர்க்குச் சத்தியுலகமும், பக்தியுலகமும் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

‘‘மாலை” என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பல செய்யுட்களில் பல்வேறு கருத்துக்களை அமைத்துப்பாடும் கவிஞர். பாடல்களின் ஈற்றடிகளை மட்டும் ஒன்றாகவே அமைப்பர். அது பலமலர்களை ஒரே நூலில் கட்டியிருப்பது போலத் தோன்றும் மாலை போல் அமைந்த பாடல் வரிசை ஆகவே இது மாலையாயிற்று. இனி பாடல்களைப் பார்ப்போம்.

சரணே சரண்:

பக்தி மார்க்கத்தில் எங்கிருக்கும் எத்தெய்வத்தையும் தன் இஷ்ட தெய்வமாகவே பாவித்து வணங்குவதும், தான் வணங்கும்தெய்வம் சிறு தெய்வமேயாயினும், அது முழுமுதல் தெய்வமே என – அம்முழுமுதல் தெய்வத்திற்குரிய அனைத்து ஆற்றலையும் ஏற்றி வழிபடுவதும், தான்வழிபடும் தெய்வமே பிறவிடங்களில் எல்லாம் இருப்பதாகப் பாவித்து வழிபடுவதும் ஒப்பமுடிந்த உண்மையாகும்.

நூலின் முதற்பாட்டில் ஆசிரியர், கமலையின் பெருமையைக் கூறுகிறார். ‘‘கமலைப் பராசத்தி” என்று கூறுவதால் இவ்வன்னையை இவர் சிவசத்தி கோலமான உமையின் அமிசத்தில் மட்டும் கொண்டு இவர் பாடவில்லை; அவளே எல்லாத் தெய்வங்கட்கும் மூலமான ‘‘பராசத்தி” எனவும் வைத்துக் கூறுகிறார். இதனைப் பாடலின் ஒவ்வொரு ஈற்றடியிலும் அறிய முடிகிறது. சத்தியின் ஆக்கக் கூறுகள் அனைத்தையும் பரிவார தேவதைகளாகக் கொண்டு – அன்னை (ஆதிபராசத்தி) இவ்வுலகை ஆளும் தன்மையை மிக அழகாகக் கூறுகிறார். இவ்வன்னையே திருமகள், நாமகள், உமாதேவி, மகேச்சுவரி, மனோன்மணி, பரை என அறுவகையினராகப் பிரிந்து இவ்வுலகை ஆள்வதாகக் கூறுகிறார். கடைசி நிலை பரை; இவளே பராசத்தி! இப்பராசக்தியின் கூறுகளே ஏனைய ஐந்தும் ஆகும். ‘‘இவருள் வேற்றுமை ஏதும் இல்லை” எனும் கருத்து இதன் மூலம் வெளியாகிறது.

திருமகள் – செல்வவாழ்க்கைக்கும் கலைமகள் – அறிவு வாழ்க்கைக்கும் மலைமகள் – வீர வாழ்க்கைக்கும் மகேச்சுவரி – அருள் வாழ்க்கைக்கும் மனோன்மணி – யோக வாழ்க்கைக்கும் பரை (பராசத்தி) – ஞான (ஆன்மீகம்) வாழ்க்கைக்கும் உரியவர்கள். இவர்கள் அனைவரும் பராசத்தியே எனப்பாடல் கூறுகிறது. ‘‘திருவும் வெண்டாமழசை; செல்வியு மாகிச் சிவனிடத்தில் மருவும் உமையாய் மகேசுவரி யாகி மனோன்மணியாய்த் தருபரையாய் உன்சரணே சரண்என்று சாரும் அன்பர் பருகும் சிவானந்தமே! தென்கமலைப் பராசத்தியே!” (கமலைப் பராசத்தி மாலை பாடல் -1)

பக்தியும் ஞானமும் ஆகும் தாய்

‘‘சத்தி தத்துவத்திற்குச் சிவதத்துவம் அடங்கியதே” என்பது சத்தி வழிபாட்டினரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அது நம்பிக்கை மட்டுமன்று கொள்கையும் ஆகும். ‘‘ஆதிபராசத்தியே சிவனையும், ஏனைய தேவர்களையும், உலகையும் படைத்தவன்” என ஆதிசங்கரர் சௌந்தரிய லகரியில் கூறுகிறார். இதனால்தான், ‘‘சத்தியாய்ச் சிவமாய்த் தனிப்பர முத்தியான முதலைத் துதிசெய்வோம்” – என்றார் ஓர் அடியார். ‘‘சிவம் சத்திதன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும், உவந்து இருவரும் புணர்ந்து இங்கு உலகு உயிர் எல்லாம் ஈன்றும்” – என்கிறது சிவஞான சித்தியார். ‘‘சிற்றிடைக்கு ஒல்கி நுடங்கும் திருவயிற்றாள் ஒருத்தி பெற்றெடுக்கும் திறல் பிள்ளைகள் மூவர்” – என்கிறார் அப்பரடிகள். ‘‘ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும் தாரமும் ஆமே” – என்கிறது திருமந்திரம், ‘‘கறைகண்டனுக்கு மூத்தவன்” – என்கிறது அபிராமி அந்தாதி. ஆகவே இந்நூலாசிரியரும், சத்திதத்துவம் உலகில் எப்படி எல்லாம் விரிந்து நிற்கிறது” என்பதைப் பின்வரும் பாட்டின் மூலம் மிக அருமையாக விரித்துரைக்கும் திறம் போற்றத்தக்கது.

பராசத்தியான மூலப்பரம்பொருளே பிரம்மப் பொருளான ஆதியாகும். இதுவே முதலில் எல்லாவிதமான சக்திகளாகவும் உருவாகிறது; பின் சிவப்பொருளாகவும் மாறுகிறது; அதன் பிறகு உலகின் பல்வேறு பொருள்களாகவும் உருவாகிறது; இதுவே ‘‘சித்தி” எனும் அருட்பொருளாகவும் உருவாகிறது; முத்திப் பெரும் பொருளாகவும் உருவாகிறது; இம் முத்தியை உலக மக்கள் எளிதில் பெற்றுய்யும் வண்ணம் இதுவே பக்திப் பொருளாகவும், ஞானப் பொருளாகவும் மாறுகிறது. இவ்வருமைத் தத்துவத்தைப் பின்வரும் பாடல் நன்கு விளக்குகிறது.

‘‘சத்தியும் ஆகிச் சிவமும் ஆய் உலகிற் சகலமுமாய்ச் சித்தியும் ஆகி அச்சித்தி ஏற்றோரும் செலற்காpய முத்தியும் ஆகி, அம்முத்திக்கு வித்தாய் முளைத்தெழுந்த பத்தியும் ஞானமும் ஆகும் கமலைப் பராசத்தியே!” (கமலைப் பராசத்தி மாலை – பாடல் 2)

இப்பாடலின் மூலம் – ‘‘சித்தி பெற்றோரும் எளிதில் அம்பிகையின் துணையின்றி முத்திபெற முடியாது” என்பதும், ‘‘முத்திபெற நமக்கு அவளே பக்தியையும், ஞானத்தையும் பரிந்தளிக்க வல்லவள்” என்பதும் இப்பாடல் மூலம் முடிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இப்பாடல், அபிராமி அந்தாதியின் 29ஆம் பாடலோடு பெரிதும் ஒத்திருப்பதை அறிய முடிகிறது.

‘‘சித்தியும் சித்திதரும் தெய்வ மாகித் திகழும்பரா சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார் முத்தியும் முத்திக்கு வித்தும்வித் தாகி முளைத்தெழுந்த புத்தியும் புத்தியி னுள்ளே புரக்கும் புரத்தையன்றே!” (அபிராமி அந்தாதி பாடல் 29)

பக்தி வழிபாட்டில் மிக முக்கியமானது – தோத்திரங்களைக் கூறி வழிபடுவதும், பஜனைப் பாடல்களைப் பாடி மெய்சிலிர்க்க ஆடுவதும் ஆகும். இவற்றில் என்ன அத்துணை முக்கியத்துவம் உள்ளது? தெய்வத்தின் திருப்பெயர்கள் அனைத்தையும் ‘‘நாமாவளி”யாக வரிசைப்படுத்தித் தொடர்ந்து மன உருக்கத்தோடு சொல்வதேயாகும். தெய்வத் திருப்பெயர்களைப் பக்தியோடும், உருக்கத்தோடும் மனம் ஒன்றிய நிலையில் சொல்வது மிகச் சாதாரணமானது அன்று. அதற்குத் தெய்வம் அருள்பாலிக்கும் தன்மையும் சாதாரணமானது அன்று. தோத்திரங்கட்கு மகிழ்ந்தும், மனம் இரங்கியும், விரைந்து அருள் புரிவது தாய்த் தெய்வத்தின் மிக உயர்ந்த கல்யாண குணங்களில் தலைசிறந்தது ஆகும். ஆகவேதான் சத்தியை, ‘‘தோத்திரப் பிரியை” என ஆன்றோரும் அழைத்தனர் போலும். இந்நூலாசிரியர் தேவியின் திருப்பெயர்களை வரிசைப்படுத்திச் சொல்லும் முறை கல்மனத்தினையும் கரைக்க வல்லது. ‘‘கல்யாணி அம்பிகை, ஆரணி, வாரணி, கெளரி, உயர் ஒலி ஆர்அணங்கு, இருங்கனத்தாய்” என அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

அபிராமி அந்தாதியிலும், ‘‘நாயகி நான்முகி, நாராயணி, கை நளின பஞ்சாயகி, சாம்பவி, சங்கரி, சரமனை, சாதிநச்சு வாயாகி, மாலினி, வராகி, சூலினி, மாதங்கி” – என மேலும் ஒருபடி மேலே சென்று உருக்கம் எழத் துதிப்பதை அறிய முடிகிறது.

இவற்றைப்போலவே காமாட்சி அம்மன் அந்தாதியிலும் அன்னையைத் ‘‘தயாபரி, சுந்தரி, தேவமனோகரி, சர்வமதகியாதி, புரந்தரி, மாபுவனேச்சுவரி, கீர்த்திமிகு சியாமளநாரி, மகேச்சுவரி, வீரி, திகம்பரி, காமாட்சி, இராசராசேச்சுவரி” எனப்பல திருநாமங்கள் அடுக்கிச் சொல்லப்படுகிறது.

மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி அந்தாதியிலும், ‘‘பகவதி பார்வதி, காமாட்சி, நாரணி, காரணி, காளி, மகிடன் தலையறுத்தாள், கவுமாரி வாராகி” எனவும் பல நாமங்கள் கூறப்படுகின்றன.

‘‘இராசராசேச்சுவரி” – எனும் நூலிலும், ‘‘மாலினி, கபாலினி, மனோன்மணி, நந்தினி, வன்னிமண்டலவாசினி, மானவதி, யோகினி, மனாதீத நாயகி, வாகிளி, மனமோகினி, சூலினி, சுவாகினி”…. முதலிய பெயர்கள் அற்புதமாக விரித்துக் காட்டப்பட்டு உள்ளன. இனி இவற்றின் அழகினை எல்லாம் பாடல்களின் மூலம் பார்ப்போம்.

‘‘கலியாணி அம்பிகை ஆரணி வாரணி கெளரிஉயர் ஒலியார் அணங்காம் இருங்களத்தாய் உன்னை உண்ணிநித்தம் நலிதீவினை அகன்று உன்திருநாமம் நவில்ப வர்க்குப் பலியா தனவும் உளவோ கமலைப் பராசத்தியே!” (கமலைப் பராசத்தி மாலை பாடல் -8)

‘‘நாயகி நான்முகி நாரா யணிகை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமனை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்(று) ஆய கியாதி யுடையாள் சரணம் அரண் நமக்கே” (அபிராமி அந்தாதி பாடல்கள் 49)

‘‘தயாபரி சுந்தரி தேவமனோகரி சர்வமத கியாதி புரந்தரி மாபுவ னேச்வரி கீர்த்திமிகு சியாமள நாரி மகேச்சுவரி வீரி திகம்பரியாய்த் தியாளஞ் செயின் அருள் காமாட்சி ராசராசேச்வரியே!” (காமாட்சி அந்தாதி பாடல் – 39)

‘‘பகவதி பார்வதி காமாட்சி நாரணி பார்புரக்கும் தகவுறும் காரணி காளி மகிடன் தலையறுத்தாள் மகவான் பணியும் கவுமாரி வாராகி மாண்புடையோர் அகமிசை வாழ்பவள் என்றே மருவூர் அடைகுவீரே!” (ஆதிபராசத்தி அந்தாதி பாடல் 32)

மாலினி கபாலினி மனோன்மணி நந்தினி வன்னிமண் டலவாசினி மானவதி யோகினி மனாதீத நாயகி வாகினி மனமோகினி சூலினி சுவாசினி சுமங்கலி சுதந்தரி துணைவிதிரி புரசுந்தரி சோதிச் சொரூபிணி சுதாமிணி அம்சினி சும்பாதி சுரமர்த்தனி சாலினி சனாதனி தருணிகல் யாணிசிவ சங்கரி சாருகேசி சாம்பவி கலாவதி தருமவர்த் தனிசனனி சாமுண்டி தேவதேவி ஏலவார் குழலியென எண்ணரிய பெயர்பூணும் ஈச்வரி போற்றிபோற்றி! இறைவிஎனை ஆண்டருளும் இராச ராசேச்வரி இமயமலை வாழுமுமையே! (இராசராசேச்சுவரி – பாடல் 11)

இப்பாடல்களை நாம் படிக்கும் போது எத்துணை மகிழ்ச்சி அமைகிறது? அவை சொல்லும் தரதத்தோ இல்லை! நாமே உணர்ந்து உணர்ந்து மகிழக் கூடிய பக்தி இன்பம் அன்றோ? இனம் புரியாத நல்லின்பம் நம்மை எங்கோ இறைவியின் திருவடியை நோக்கியன்றோ இழுத்துச் செல்கிறது! இம் ‘‘முருகியல்” உணர்வே தோத்திரங்கள் மூலம் நாம் பெறுவதாகும்.

இங்ஙனம் அம்பிகையைத் துதிக்கும் பக்தர்கட்குத் தாய் எங்ஙனம் அருள் செய்வாள் என்றும் இப்பாடலில் (பராசத்தி மாலை) குறிக்கப்பட்டுள்ளது. அது என்ன தெரியுமா? ‘‘கேட்பவை அனைத்தும் தருவாளாம் தாய்!“ ‘‘பலியானதனவும் உளவோ?” – எனக் கூறுவதைக் காணலாம். அபிராமி பட்டர், ‘‘தேவியின் நாமங்களைச் சொன்னால், அவள் நமக்குப் பாதுகாப்பு ஆவாள்” என்று மட்டுமே சொன்னார். ஆனால் இவ்வாசிரியரோ, அதற்கு மேலும் ஒருபடி மேலே சென்று, ‘‘தேவியின் நாமங்களை நினைக்கும் போதே நம் தீவினை அனைத்தும் அகலும்” என்றும், ‘‘எல்லாம் கிடைக்கும்” – என்றும் கூறுவது பாராட்டத்தக்கது.

அருளும் பராசத்தி

தந்தையைக் காட்டிலும் தாய்க்கு கொடுக்கும் தன்மையில் கருணைமிகுதி. எல்லாம் வல்ல தேவியை நினைத்து வழிபட்டால், பலன் என்ன? இதனை இந்நூலாசிரியர் மிக அழகாகக் கூறுகிறார். கல்வி, ஞானம், பல்வகைப் போகம், கட்டழகு, செல்வம், இன்பம், நல்மனைவி, வலிமை, அரசாட்சி, நன்மக்கள் பேறு, சித்தி, முத்தி – இவை அனைத்துமே ஒரு சேரக் கிட்டுமாம்.

‘‘கல்வியும் ஞானமும் பல்வகைப் போகமும் கட்டழகும் செல்வமும் இன்பமும் நன்மனையாளும் திறலரசும் நல்வள மைந்தரும் சித்தியும் முத்தியும் நாடியுனைப் பல்வகைப் பக்தி புரிவோர்க் கருளும் பராசத்தியே!” (பராசத்தி மாலை – பாடல் 26)

இதைப் போலவே அபிராமி பட்டரும், ‘‘தனம், கல்வி, மனவலிமை, தெய்வ வடிவு, நல்ல சுற்றம் நல்லன எல்லாம் தேவி வழிபாடு நமக்குத்தரும் என்கிறார்.

‘‘தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லார் இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூ ங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!” (அபிராமி அந்தாதி பாடல் 69)

ஆகவே தோத்திரங்களைப் பகதன் உருக்கத்தோடு படித்தால் உலக இன்பங்களையும், மறுவுலகப் பேரின்பமான முத்தியையும் ஒருங்கே மிக எளிமையாகப் பெற முடியும் என்பது அறிந்துகொள்ள முடிகிறது.

முடிவு

‘‘அபிராமி அந்தாதிக்கு இணையான வேறுநூல் இல்லையே” – எனும் ஏக்கம் தவிர்ப்பது ‘‘ஆரூர் கமலைப் பராசத்தி மாலை” யாகும். இரண்டு நூல்களும் ஒன்றையொன்று ஒத்துள்ளது பெரும் சிறப்புக்குரியது. இந்நூல் தோத்திர நூலின் பெருமை அனைத்தையும் கொண்டு விளங்குகிறது. இவற்றில் எது முத்தியோ தெரியவில்லை. ஒருகால் கமலைப் பராசத்தி மாலையே, அபிராமி அந்தாதிக்கு காலத்தால் முந்தியதாகவும் இருக்கலாம். இதுவே அபிராமி அந்தாதி எழக் காரணமாகவும் இருந்திருக்கலாம். பின்னால் தோன்றிய நூல், முதல் நூலின் பெருமை அனைத்தையும் உண்டு, பயிற்சி அதிகமாகிய காரணத்தால் முதல் நூலினும் சிறந்து விளங்கியிருக்கும். எது எப்படியாயினும் சத்தி வழிபாட்டில் – தோத்திர வரிசையில் வைத்து மதிக்கப்படும் தலைசிறந்த நூல்களில் கமலைப் பராசத்தி மாலையும் ஒன்று – தலைசிறந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 5 (1982) பக்கம்: 17-22

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here