மருவத்தூர் அன்னையே!

 

1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 24-ஆம் நாள் ஞாயிறன்று பிற்பகல் சென்னையிலிருந்து திருக்கோவிலூர் முகாமுக்குக் காரில் சென்றேன். அதுசமயம் தமிழ்நாடு காவல் புலனாய்வுத்துறை உணவுப் பிரிவின் துணைத் தலைவராய் (டி.ஐ.ஜி) பணியாற்றி வந்தேன், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் சோத்துப்பாக்கம் சாலைச் சந்திப்பை நான் அடைந்த போது மாலை ஆறு மணிக்கு மேலிருக்கும். திடீரென எனது காரின் ஊதுகுழல் (ஹார்ன்) தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. காரை நிறுத்தி, கார் ஓட்டுநர் அந்த ஒலியை நிறுத்த எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை.

‘‘அச்சிறுப்பாக்கம் அருகில்தான் உள்ளது. காரை அங்கு ஓட்டிச் சென்று, ஊதுகுழலைப் பழுது பார்த்து ஒலியை நிறுத்தலாம், புறப்படு” என்று ஓட்டுனரிடம் கூறினேன். அதன்படி ஓட்டுனர் காரை மேலும் ஓட்டிச் சென்றார். சோத்துப் பாக்கம் ஊரின் எல்லையிலுள்ள மேல்மருவத்தூர் வந்ததும் காரின் ஊதுகுழலின் ஒலி தானே நின்றது. உடனே, நானும் காரை அங்கேயே நிறுத்தும்படி ஓட்டுனரிடம் கூறினேன். பின்னர், காரை விட்டுக் கீழே இறங்கி நாலாபுறமும் சுற்றிப் பார்த்தேன்.

மாலை மயங்கும் நேரம். கதிரவன் மேல் திசையில் மறைந்து எங்கும் இருள்சூழும் வேளை, நெடுஞ்சாலையின் இடப்புறத்தில் ஒரு குளக்கரை தெரிந்தது. வலப்புறத்தில் ஒரு சிறிய கொட்டகை காட்சியளித்தது. அதனுள் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஏதோ ஒன்று என்மனத்தை அதன்பால் ஈர்க்க, என் கால்கள் தாமே அவ்விளக்கு ஒளியை நோக்கி நடந்தன. அருகில் சென்று பார்த்தேன்.

சுயம்பு வடிவில் அன்னை பீடமிருந்தது. அதன் மீது பூவும், பொட்டும் இடப்பட்டிருந்தன. அருகில் விளக்கு ஒன்று ஒளி வீசிக் கொண்டிருந்தது. எங்கும் அமைதி நிலவியது. மெய் மறந்து, சிறிது நேரம் நான் அங்கு நின்று வணங்கினேன். எல்லையற்ற சக்தி ஒன்று அங்கிருப்பதாய் என் உள்ளுணர்வு உணர்த்திற்று. அத்திருக்கோயிலை அடுத்து ஒரு புற்றும் இருக்கக் கண்டேன. அப்புற்றைச் சுற்றி வேலிகாத்தான் மரங்கள் அடர்ந்து நின்றிருந்தன. யாவற்றையும் தனியே சுற்றிப்பார்த்து, வணங்கி விட்டு என் வழியே சென்றேன். இதுதான் மேல்மருவத்தூரில் ஏற்பட்ட முதல் அனுபவம்.

அன்றிலிருந்து அவ்வழியே என்று சென்றாலும் நான் அத்திருக்கோயிலில் சிறிது நின்று வணங்கி விட்டே செல்வேன். அவ்விதம் ஒரு நாள் காலையில் நான் அங்கு வழிபாடு செய்யச் சென்ற போது, அருள்திரு. பங்காரு அடிகளாரைச் சந்தித்தேன். அன்று அவர்களோடு அன்புடன் அளவளாவும் அரும் வாய்ப்புக் கிடைத்தது. தாம் ஒரு பள்ளி ஆசிரியர் என்றும், சில ஆண்டுகளுக்கு முன் தம்மீது அருள்வந்து ஆதிபராசக்தி நம்மை ஆட்கொண்டு விட்டதாயும், இங்குச் சுயம்பு வடிவில் அன்னை மறந்திருப்பதை மக்கட்கு அறிவிக்க வேண்டுமென்ற அன்னையின் அருளாணைப்படி நாம் அச்சுயம்புவின் மேல் ஒரு சிறிய கீற்றுக் கொட்டகை போட்டு, அதில் ஒரு விளக்கையும் ஏற்றி, அன்றாடம் வழிபட்டு வருவதாயும் கூறினார்கள்.

‘‘சுயம்பு உருவில் இருக்கும் பெருமாட்டி அந்தர்யாமியாய் மறைந்து நின்று அருள் செய்தால், அதனைப் பெற்று அனுபவிக்கக் கூடியவர் ஒரு சிலரேயாவர். எனவே, மக்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொள்ள விரும்பிய அன்னை, அதற்குரிய வழியைக் காணத் தொடங்கினாள். எல்லையற்றதாய், எங்கும் நிறைந்ததாய், அறிவே உருவான தாய், ஆனந்தவடிவினதாய், நிற்கும் இறைப்பொருள், எல்லைக்குட்பட்ட தாய், குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டுமே, ஒரு காலத்தில் மட்டுமே இருக்கக் கூடியதாய், அறியாமை நிரம்பித் துயரத்தில் மூழ்கி இருக்கும் உயிர்களுடன் தொடர்பு கொள்ள முற்பட்டால், இவ்வுயிர்கள் அதனைப் புரிந்து கொள்ளவும் இயலாது; அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் இயலாது. இதற்காகவே அன்னை ஆதிபராசக்தி ஓர் அற்புதமான வழியை மேற்கொண்டாள். எங்கும் நிறைந்துள்ளவள் என்றாலும் ‘‘விறகில் தீப்போலவும், பாயில்படுநெய் போலவும்” உள்ளாள் அப்பெருமாட்டி, விறகில் உள்ள தீ வெளிப்பட்டுப் பயனளிக்க விறகை கருவியாகக் கொள்வது போல், அன்னை பராசக்தி வெளிப்பட்டுத் தன்னை அடைந்தவர்கட்குப் பயனளிக்க அருள்திரு.பங்காரு அடிகளாரைக் கருவியாகக் கொண்டு விட்டாள். இந்த முடிவுடன் அப்பெருமாட்டி, அடிகளார் மூலம் அருள்வாக்கு வழங்க முற்பட்டது 1970ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் ஆகும்.” என்று மதிப்பிற்குரிய தொண்டன் தமது ‘‘மேல்மருவத்தூரில் அற்புதம்” என்னும் நூலில் தெளிவுறக் கூறுகிறார்.

பலவகையில் பக்தர்களுக்கு அருளி, அண்மையில் அடக்கம்எய்தி, பெங்களூரில் சமாதி கொண்டுள்ள மகான் வலிபா அவர்களை ஒருசமயம் நான் மேல்மருவத்தூருக்கு அழைத்துப் போனேன். திருக்கோயிலை வலம் வந்து வணங்கிவிட்டு, சென்னை திரும்புகையில், ‘‘இவ்விடத்தில் ஒப்பற்ற சக்தி நின்று நிலவி அருள்பாலிக்கின்றது. ஆகவே, இதனைச் சிக்கெனப் பற்றி பக்தி செலுத்திவா, பெரும் பயனை நீ அடைவாய்,” என்று எனக்கு அறிவுரை வழங்கினார்கள் தவத்திரு வலிபா அவர்கள், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றுமாக இருக்கிறாள் மருவத்தூர் அன்னை என்பதனை மகான் வலிபா அவர்களின் உள்ளுணர்வு உணர்த்திற்று போலும்!

சிலகாலம் நான் நுங்கம்பாக்கம் ஏரிக்காலனியில் இராஜாஜி தெருவில் குடியிருந்தேன். ஒருநாள் காலையில் மருவத்தூரிலிருந்து ஒரு தொண்டர் என் இல்லம் வந்தார். வந்தவர் என்னிடம், ‘‘அருள்வாக்கில் அன்னை எனது மகன் பரமகுரு இல்லத்தின் பின் தோட்டத்தில் ஒரு அகத்தி மரம் இருக்கிறது; அது குடும்பத்திற்கு நல்லதல்ல் அதனை உடனே வெட்டி வெளியே எறிய வேண்டும்; என ஆணையிட்டாள். அதனை உங்களிடம் கூறும்படி எனக்கும் கட்டளையிட்டாள் அன்னை” என்று கூறினார். அப்படி ஒரு அகத்தி மரம் என் இல்லத்தில் பின் தோட்டத்தில் இருப்பதை நான் அறியேன். எனவே, உடனே வீட்டின் பின்னால் சென்று பார்த்தால் நாங்கள் வியக்கும் வண்ணம் ஒரு அகத்தி மரம் அங்கே நின்று கொண்டிருந்தது. அக்கணமே, அதனை வேருடன் வெட்டி எடுத்து வெளியே எறியச் செய்தேன். வந்த தொண்டரிடம் நன்றி கூறியபோது, அன்னை உங்களை அருள் வாக்கிற்கு வரப் பணித்துள்ளாள்.” எனச் சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

அடுத்து வாய்ப்புக் கிட்டியதும் நான் மருவத்தூர் சென்றேன். அன்று அருள் வாக்குத் தினம் என்பதை நான் அறியேன். எல்லாம் அன்னையின் அருள்! திருக்கோயிலில் நான் நேராகச் சென்று வழக்கம்போல் வழிபாடு முடித்து நின்றதும், ‘‘அன்னை அழைக்கிறாள்” என்று ஓர் அன்பர் வந்து கூறினார். உடனே, நான் அன்னையிடம் சென்றேன். அன்புடன் என்னை வரவேற்ற அன்னை, ஒரு வேப்பிலையைக் கொடுத்துத் தின்னுமாறு கூறினாள். நான் அதனைத் தின்றதும், வேப்பிலை எவ்வாறு இருந்தது மகனே?” என வினவினாள் அன்னை ‘‘வேப்பிலை கசக்கவில்லையே!” என்றேன். ‘‘மிக்க நல்லது” எனக்கூறி, என் நலம், எனது குடும்ப நலம், கருவை சமாதிக் கோயில் திருப்பணி வளர்ச்சி முதலிய விபரம் யாவும், விளக்கமாய்ச் சொல்லி அருளாசியுடன் விடை கொடுத்து அனுப்பினாள். மனநிறைவோடு நானும் அங்கிருந்து அன்று சென்றேன். பின்னர் ஒரு சமயம் அருள்திரு. பங்காரு அடிகளார் மூலம் எனது சென்னை இல்லத்திற்கும் மனமுவந்து வந்து எங்களுக்கு அருளாசி வழங்கினாள் மருவத்தூர் அன்னை.

மருவத்தூர் ஆடிப்பூர விழாவிலும், மற்றும் பல விழாக்களிலும் நான் பங்கேற்றதுண்டு. வரவரக் கூட்டம் பெருத்துவிட்டதால் அங்குப் பாதுகாப்பிற்காகக் காவலர் தேவையென அன்னை கருதுவதாய் நான் அறிந்தேன். உடனே, மறுவிநாடியே மருவத்தூரில் ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தேன். அந்த நிலையத்தை என்னைக் கொண்டே திறப்பு விழா நடத்தி வைத்தாள் அருள்மிகு மருவத்தூர் அன்னை! என்னே அவளது அருளாற்றல்! ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் விளையாட்டாகவே செய்து வருகிறாள் அப்பெருமாட்டி! சத்தியத்தின் வடிவமான அவள் கூறுவது யாவும் சத்திய தேவ வாக்கே! தன்னை உணர்ந்து” தலைவனை அறிந்த தத்துவ ஞானிகள்.

‘‘முள்ளை விளையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்; பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்”

என்கிறது திருமந்திரம், அப்படியெனில், ஆதிபராசக்தியின் அருட் சக்தியினுடைய மகத்துவம் பற்றிக் கேட்பானேன்?

நம் நாட்டில் ஆதிசக்தியின் வழிபாடு மிகவும் பழமையானது. மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வு ஆராய்ச்சியின் போது கிடைத்த அன்னையின் மண் உருவங்கள் சக்தி வழிபாட்டுத் தத்துவத்திற்கு இலக்கணம் வகுக்கின்றன. தொல்பொருள் அறிஞர்களின் கணக்குப்படி ஏறத்தாழ கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்பே சக்தி வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று சக்தி வழிபாடு ஒவ்வொரு கிராமத்திலும், சிற்றூரிலும், நகரத்திலும் நடந்து வருவது நாம் அன்றாடம் காணும் காட்சியாகும்.

இது சக்தி யுகம்!

அண்ட சராசரங்கள் அனைத்தையும் தெய்வமாகக் கண்டனர் நம் முன்னோர். எல்லையற்ற பரம்பொருளை எல்லாம் வல்ல சக்தியாய் வழிபட்டனர். நிலத்தின் திண்மை, நீhpன் குளுமை, நெருப்பின் வெம்மை, காற்றின் வேகம், ஆகாயத்தின் ஓசை, யாவும் சக்தியே. ‘‘பராசக்தியின் உதவியில்லாவிட்டால் பரமசிவனால் அசையவும் முடியாது,” என்கிறார் ஆதிசங்கரர். ஆகவே, ஆதிசக்தியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அறிவை ஆட்படுத்தி, ஆணவத்தை அடக்கி, உணர்வை அன்பாக வெளிப்படுத்தி, இறை அனுபவத்தில் அமிழ்ந்து, அச்சக்தியை வழிபட்டால் தியானித்தால் நாம் பல்வேறு நலன்களையும், பலன்களையும் அடைவது திண்ணம்.

நமது வழிபாட்டிற்கும், தியானத்திற்கும் இலக்காய், ஆதாரமாய் விளங்குவதுதான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் ஆலயம். ஆலயம் என்பது ஆன்மா லயிக்கும் இடமாகும். மனம், வாக்கு, காயம் மூன்றையும் அடக்கி ஒடுக்கி, உள்ளொளியை நாடி, உண்மையைத் தேடி, அறிவை அறிந்து, ஆன்மாவை லயிக்கச் செய்யும் ஒப்பற்ற இடமாய்த் திகழ்வதுதான் இவ்வாலயம்.

இதில் நாம் அன்றாடம் வழிபட்டு வந்தால், ‘‘பக்திப் பெருக்குண்டாம், பராசக்தி அருளுண்டாம் உள்ளத் துருக்கமுண்டாம், உயர்ந்த குணங்களுண்டாம் ஊக்கம் மிகவுண்டாம், ஒழுக்க நெறியுண்டாம் அறிவுத் தெளிவுண்டாம், ஆற்றல் திறனுண்டாம் திட நம்பிக்கையுண்டாம், திருவின் வரவுண்டாம்”

இங்ஙனம், இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய எல்லா நலன்களும் ஆதிபராசக்தியின்

‘‘அருள் வௌ;ளம் வற்றாது அளிக்கின்ற கேணி, மருள்சூழ் மடநெஞ்சை மேலேற்றும் ஏணி, கருமமாம் கடல்தாண்டிக் கரையேற்றும் தோணி, தருமமாம் பயிரோங்கித் தழைக்கின்ற காணி, உருளும் உலகிற்கு உறுதியா உதவும் அச்சாணி, உலுக்கும் ஊழினை மாற்றி எழுதும் எழுத்தாணி, ஓம் சக்தி மருவத்தூர் அன்னை கடைக்கண்களே!”

என வழிபட்டால் நாம் முக்தி பெறலாம். ஆகவே சக்தி வழிபாடு செய்து முக்தி பெற நாம் முயல்வோமாக!

ஓம் சக்தி!   நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 5 (1982) பக்கம்: 33-37]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here