சர்வமத சரணாலயம்!

அகிலத்தைப் படைத்தவள் அன்னை ஆதிபராசக்தி!

அதில் காணும் பொருளனைத்தும் அவளுடையது! வாழும் மக்கள் எல்லாம் அவளுடைய குழந்தைகள்!

என்பதனைக் சுட்டிக்காட்டிடும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு தமது அன்னையின் ஆலயத்தில் கண்ட ஒரு அற்புத நிகழ்ச்சியை அன்பர்களுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையிலும், அவனது புகழாரத்தில் இதுவும் ஒரு இதழாக இடம் பெறட்டுமே என்ற எண்ணத் துடிப்பிலும் இதை எழுதத் துணிந்து உள்ளேன். எனது தொழில் நிறுவனத்தின் விருந்தினர்களாக ஜப்பான் நாட்டிலிருந்து திரு.யாமாருச்சி திரு.டாக்காசாக்கி திரு.கட்டாயாமா என்ற உலகப் புகழ்பெற்ற இரசாயன பொறியியல் நிபுணர்கள் சென்னைக்கு வந்திருந்தனர்.

பொதுப்படையாக உறையாடிக் கொண்டிருந்த எங்களின் பேச்சு, அன்றுதான் நெற்றியில் அணிந்து இருந்த அன்னையின் குங்குமப் பிரசாதத்தால் திசை திருப்பப்பட்டு அதன் காரணமாய் அன்னையை அவர்கள் தரிசித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அதை பூர்த்திசெய்து தரும்படி ஏகோபித்த குரலில் என்னை கேட்டுக் கொண்டார்கள்.

எனவே அம்மாவின் அனுமதியை அருள்வாக்கின் மூலம் அன்றே போய்ப் பெற்றுக்கொண்டு மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அம்மூவரையும் அம்மாவின் ஆலயத்திற்கு (மேல்மருவத்தூர்) அழைத்துச் சென்றேன். முதன்முதலாக அம்மனை அவர்கள் தரிசிக்க இருப்பதால் அம்மாவுக்கு காணிக்கையாக எதைக்கொண்டு போவது என்ற பிரச்சனையில் அவர்கள் தடுமாறிக் கொண்டிருந்தபோது, எழில் கொழிக்கும் இரண்டு எலுமிச்சம் பழங்களே போதும் என்று நான் தெளிவுபடுத்தியதின் பேரில் மூன்று ஆப்பிள் பழங்களை மட்டும் எடுத்துக்கொண்டு உடன் வந்தனர்.

ஆலய வாசலில் வாகனத்தை வீட்டு நாங்கள் இறங்கியதும், ஆலயக் குழுவினர் அவர்களை கோவில் மரியாதையாக மங்கல வாத்தியம் முழங்க ஆலயத்தினுள் அழைத்துச் சென்றனர். இதற்குள் அம்மன் புத்துமண்டலத்திற்கு வந்து அருள்வாக்கு ஆசனத்தில் அமர்ந்துகொண்டது. ஜப்பானிய நண்பர்கள் மூவரும் பெயர்சொல்லி அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் பொறுப்பில் அடியேனும் உள்ளே அழைக்கப்பட்டு அம்மனுக்கு இடதுபுறமாகவும் எதிராகவும் நால்வரும் அமர்ந்தோம். கொண்டு வந்திருந்த ஆப்பிள் பழங்களை அம்மனின் எதிரில் வைத்துவிட்டு தாம் வணங்கும் முறையை அனுசரித்து வணங்கி அமர்ந்தனர்.

அம்மன் தன் கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு மண்டியிட்ட நிலையில் சிரம் தாழ்த்தி பௌத்த மத ஆசார முறையில் ‘‘புத்தம் சரணம் கச்சாமி” என்று இருமுறை கூறியது. இதைக் கண்ட அம்மூவருக்கும் ஒரே வியப்பு. தங்கள் நாட்டின் பழக்க வழக்கமுறை அம்மாவுக்கு எப்படி வந்தது என்ற ஆச்சரியம். அம்மா திரு.டாக்கா சாக்கி என்பவரை நோக்கி ‘‘மகனே! நீ பிறப்பால் ஒரு கிருஸ்துவன்! அதுவும் உண்மை கிருஸ்துவன்! உன் மதாசாரப்படி நீ செய்ய வேண்டியதை எல்லாம் உண்மையாக செய்து கொண்டு இருப்பதால் நீ செய்தவைகளை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டு விட்டேன். எனவே நீ இனி பிறவி இல்லாத உயர்ந்த நிலையை அடைந்து விட்டாய்! என்று சொன்னதும், அவர்கள் அனைவரும் அசைந்தேபோய்விட்டார்கள். ஏன்? நானும்கூடத்தான். அவர் ஒரு கிருஸ்துவர் என்பது அவரோடு பலதான் பழகிக்கொண்டிருக்கும் அவரது இருநண்பர்களுக்கும் எனக்கும் அன்றுதானே தெரிய வந்தது.

பின்னர் மற்ற இருவரையும் நோக்கி ‘‘ஜப்பானியர்கள் மிகுந்த கடவுள்பக்தி உள்ளவர்கள். அதையும் அக்கரையோடு செய்யும் பண்பு படைத்தவர்கள், கடமையே கடவுள் என்றும் நினைத்துச் செயல்படுபவர்கள். அதனால் அழிந்து போன தங்களின் நாட்டை மீண்டும் உருவாக்கிக்கொண்டு உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு முன்னேறி வருகிறார்கள்” என்றுச் சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்து ‘‘மகனே! இவர்களின் தொடர்பு உனக்கு தெய்வீகமாக கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக்கொள்” என்று அம்மா அருள்வாக்களித்தது.

காணிக்கையாக வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழத்தில் ஒன்றைத்தொட்டு, கையை விரித்து அசைவுகாட்டி, மீண்டும் மூடி திறந்த போது, அதில் ஒரு வெள்ளி தரசு மோதிரம் வந்தது. அதை திரு.டாக்கா சாக்கியிடம் கொடுத்து சுண்டுவிரலில் போட்டுக்கொள்ளச் சொன்னது. அதை அவர்போட்டுக் கொண்டபோது அது அவருக்கு அளவெடுத்து செய்ததுபோலவே அமைந்திருந்தது. அடுத்து இன்னொரு ஆப்பிளைத் தொட்டு அதே மாதிரி ஒரு தங்க மோதிரத்தை வரவழைத்து திரு.யாமாசாக்கியிடம் கொடுத்து சுண்டு விரலில் அணிந்துக் கொள்ளச் சொன்னது. அதுவும் அப்படியே அளவுக்குச் சரியாக அமைந்து இருந்தது. மூன்றாவது பழத்தைத் தொட்டு ஒரு விலையுயர்ந்த பவளக் கல்லை வரவழைத்து திரு.காட்டா யாமாவிடம் கொடுத்தது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்ட ஜப்பானியர் நண்பர்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் கரைபுரண்டோடியது. மேற்சொன்ன அருள் பரிசுகளோடும்; அருளாசிகளோடும் அம்மா அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பியக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அதன் பின்னர், தாங்கள் அனைவரும் அம்மனின் கருவரை சந்ததிக்குச் சென்று அர்ச்சனை செய்தோம். அப்பொழுது அவர்கள் தாம் செய்வதுபோல், மேல் சட்டையை கழட்டி இடுப்பில் கட்டிக்கொண்டு, தாம் செய்யும் வழிபாட்டு முறைகளை எல்லாம் அவர்களும் செய்து ஆலயத்தை காலணியில்லாமல் வலம் வந்தது அவர்களுடைய உண்மையான பக்திக்கு எடுத்துக்காட்டாகவே இருந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்பர்கள் எல்லோரும் எங்களை சூழ்ந்துக்கொண்டு அந்த அதிசயப் பொருட்களைக் காட்டச் சொல்லி கண்ணில் ஒத்திக் கொண்டனர்.

உலகத்து மக்கள் எல்லாம் அந்த ஒரு தாயின் பிள்ளைகள் என்பதையும், ஜாதி மத பேதமற்ற சர்வதேச பக்திப் புகலிடம் நமது அன்னையின் ஆலயம் என்பதையும் தமக்கெல்லாம் உணர்த்திக் காட்டலே இந்த நிகழ்ச்சியை நடத்திக்காட்டி இருக்கிறாள் என்பதே அன்று அங்கே கூடியிருந்த பக்தகோடிகளின் பேச்சாக இருந்தது.

அந்த ஜப்பானிய நண்பர்கள், நமது அன்னையை அன்றொடு மறந்துவிடாமல், அவர்கள் நாட்டுக்குச் சென்ற பிறகும் அன்னை வழிபாடு செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை நான் போகும் போதெல்லாம் காண முடிகிறது. அங்கும் அவர்கள் ஒரு வார வழிபாடு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் திறப்பு விழாவிற்கு தவத்திரு அடிகளார் அவர்களோடு நம்மை எல்லாம் அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 25-27

]]>