‘‘அன்னை ஆடிய சித்து”

0
2161

அன்னையின் சித்து விளையாட்டுச் சிலருக்குப் புதிராக உள்ளது. எதற்காகச் சிலருக்கு மட்டும் சித்து விளையாடுகின்றாள்? என்று அனைவரும் அறிய விரும்புகின்றார்கள்.

அன்னை, சித்தாடல் மூலமாகச் சிலருக்குப் பரிசாகப்
பொருள்களை அளிக்கின்றாள்; சிலருக்கு அரிய காட்சிகள் கிடைக்குமாறு செய்கின்றாள்; ஒரு சிலருக்கு அவர்தம் வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய பொருள்களைச் சித்து மூலம் காட்டுகின்றாள்; அப்பொருள்களைத் தொட்டு வணங்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது; ஒரு சிலருக்கு எலும்பு, வண்டு போன்ற உயிருள்ள பொருள்களைப் படைத்துக் கொடுக்கின்றாள்.

தன்னால் எதையும் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும் என்பதை உலகத்துக்கு உணர்த்தவே இந்தச் சித்துக்கள்! அன்னையின் ஆக்க சக்தியால் பக்தர்கள் தம் பிறப்பின் காரணத்தை அறிந்து கொள்ளவும், அதன் வாயிலாக அவள் அருளைப் பெறவும், அதுவே இவ்வாழ்க்கையின் இலட்சியம் என்ற உணர்வைப் பெறவும் முடிகின்றது. இந்த இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே ஆன்மிக வழியில் செல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. அன்னையின் அருளின்றி அணுவும் அசையாது என்பதை நாமெல்லாம் உணர்ந்து கொண்டு பிறவிப் பயனை எய்த வேண்டும்.

அன்னை தன் அருள்வாக்கின் போதும், அடிகளார் தன்னிலையில் இருக்கும்போதும் பல சித்து விளையாடல்கள் தினமும் நடக்கின்றன. என்னுடைய சில மாதகால அனுபவத்தில் நான் கண்ட சித்துக்களை உங்களிடம் சொல்லி அவ்வின்பத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நான் தொழில் துறையில் ஈடுபட்டிருப்பவன். ஏதேனும் இரசாயனப் பொருளை உற்பத்தி செய்யலாம் என்று விரும்பி அன்னையின் அருளைப் பெற விழைந்தேன். அன்னையிடம் அருள்வாக்குக் கேட்கச் சென்றேன். அன்னையின் அருகில் வணங்கி அமர்ந்ததும், அன்னை என்னிடம் வேப்பிலை ஒன்றை வழங்கினாள். அது கற்பூரமாக மாறியது. அது பெரிய தூய்மையான வெள்ளை நிறமுடைய வாசம் உள்ள கற்பூரப் படிகக் கட்டியாகும். நான் வியப்புற்று இருந்தேன், அன்னை கூறினாள்.

‘‘மகனே! நீ இரசாயனத் தொழில் செய்ய அனுமதி கேட்டுச் செல்ல குறிப்பு
எழுதிக்கொண்டு வந்துள்ளாய்! அதனால் நீ கேட்கும் முன்பே உனக்கு என் அருளையும் ஒரு இரசாயனப் பொருளையும் கொடுக்கிறேன். இந்தக் கற்பூரமும் ஒரு இரசாயனப் பொருள்தானே! மக்களுக்குப் பயனுள்ளவாறும், ஏழைகட்கு நியாயமான விலையில் கிடைக்குமாறும், தரத்தில் மிக உயர்ந்ததாகவும் நூதன விஞ்ஞான முறையிலும் முதன் முறையாக இந்தியாவில் பல இரசாயனப் பொருட்களை உண்டாக்கவும் வழி செய்து தருகின்றேன்” என்று கூறி அருளினாள்.

ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 3 (1982)
பக்கம்: 15-16

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here