1. வடிவமற்றதாய், குணமற்றதாயிருக்கும் பாதத்துவத்தோடு உறவாடுவது கடினம், ஆனால் அந்தப் பரம்பொருளுக்கு ஒரு வடிவத்தைக் கற்பித்து, அதைத் ‘‘தாயே” என்று வணங்கி உறவாடத் தொடங்கிவிட்டால் தம்முடைய உணர்வோடு குலாவும் பொருளாகி விடுகிறது அது. அப்பாலுக்கு அப்பாலாயிருக்கும்

‘‘உச்சிதனை முகர்ந்தால் – கருவம் ஓங்கி வளருதடி! மெச்சியுனை ஊரார்…. புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

என்று தகப்பன் சொல்லமாட்டான். தாய்தான் சொல்லுவான். அவ்வளவு கருணை நிறைந்தது தாயுள்ளம். நாம் என்ன குற்றம் செய்தாலும் அவள் மன்னிக்கக் காத்திருக்கிறாள். நாம் காலால் உதைத்தாலும், உதைந்த காலுக்கு ஒரு தோடா போட்டு மகிழ்பவள் தாய். சகிப்புத் தன்மையும் எல்லையற்ற அன்பும் தாய்க்கிருக்கிற படியால், அச்சமின்றி அவளோடு நாம் பழகலாம்.

2. இறைவனைத் தாயாகக் கருதி ஊடாடுகிறவர்களுக்குச் சோதனைகளும் அதிகமாக ஏற்படுவதில்லை. தனயனுக்குத் தாயிடமிருக்கும் உறவு பாதுகாவல் நிறைந்த உறவு. அதில் ஆபத்துக்களும் அபாயங்களுமில்லை. மெல்ல கரைகிறது; ஆனந்தம் மேலிடுகிறது.

3. இந்த உறவை இறைவனிடத்திலே இணைத்து, இறைவனைத் தாயாகக் கற்பனை செய்து அவளோடு நாம் ஊடாடும்போது, நம் உணர்வு பெருகுகிறது. நம் ஆணவம் மெல்ல பொருள் இப்பாலுக்கு இப்பாலாக நெருங்கி நம்மை ஆட்கொள்ளுகிறது.

4. இறைத் தத்துவத்துக்கு நாமமில்லை, உருவம் இல்லையென்று நம் முன்னோர்களுக்குத் தெரியும். ஆனால், நமது புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாத அந்தத் தத்துவத்தோடு நெருங்க வேண்டுமே? அதற்காக ஒரு தந்திரம் செய்தார்கள். அப்பொருளுக்கு நாமத்தையும் உருவத்தையும் கற்பித்தார்கள். அதோடு நிற்கவில்லை. மனித வாழ்க்கையில் நாம் நேரடியாக அனுபவிக்கிற, தாய் உறவை ஏணியாகக் கொண்டு எட்டிப் பிடிக்க முடியாத வஸ்துவை உணர்வினால் எட்டிப் பிடித்தார்கள். அவ்வாறு எட்டிப் பிடித்த பிறகு, கற்பனையும் பாவனையும் அவசியமில்லாமல் போய் விடுகிறது. கற்பனையை உதறித்தள்ளிவிட்டுப் பரதத்துவத்தோடு ஒன்றிவிடலாம்; திருமூலரைப்போல்,

‘‘கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே”

என்று ஒடுங்கி விடலாம்.

5. ஆனால், இறைத்தத்துவத்தை உணரும் வரை கற்பனையின் உதவி நமக்கு வேண்டியிருக்கிறது. அதை சக்தி தேவியாகக் கற்பனை செய்து வழிபடும் சமயத்தையே சாக்தம் என்று சொல்லுகிறோம்.

சக்தி வழிபாடு எவ்வளவு சுகத்தைக் கொடுக்கிறது, எப்படி அபயம் அளிக்கிறது என்பதை ஒரு பாடல் காட்டுகிறது. எம பயத்திலிருந்து என்னைக் காப்பாற்று என்று கோமதித் தாயைப் பார்த்துக் கேட்கிறார் ஒரு பக்தர்.

‘‘கேடா வருமனைக் கிட்ட வராதே தூரப் போடா! என ஒட்டி, உந்தன் பொற்கமலத் தாள்நிழற்கீழ் வாடா! என அழைத்து வாழ்வித்தால், அம்ம, உனைக் கூடா தென்றுயார் தடுப்பார், கோமதித் தாய் ஈஸ்வரியே”

திருநெல்வேலி அழகிய சொக்கநாதப்பிள்ளை என்ற பக்தர் பாடிய பாடல் இது, இப்படியெல்லாம் தாயிடத்திலே துணிந்து வரங்கேட்கலாம், உரிமையோடு கேட்கலாம், இடித்துக் கேட்லாம், அடித்தே கேட்கலாம். கொடுக்க மாட்டேன் என்று சொல்லத் தாய்க்கு மனம் வராது.

6. தமிழகத்திலே பல்லாயிரக்கணக்கான ஆண்; டுகளாய்த் தாய் வழிபாடு பழக்கத்தில் இருந்து வந்து இருக்கிறத. கி.பி.80- இல், அதாவது, 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட Perlplus of the Erythrean See என்ற கிரேக்கப் பயண நூலிலும், கிறிஸ்து பிறந்து 75 ஆண்டுகள் வரை வாழ்ந்த Pliny என்ற கிரேக்க ஆசிரியருடைய நில நூலிலும் தமிழகத்தில் சக்தி வழிபாடு இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

7.தொல்காப்பியத்திலும், சங்ககாலத் தமிழ் இலக்கியத்திலும், தெய்வத் தாய்க்கு கொற்றவை என்றும் ஐயை என்றும் நாமம் சூட்டியிருக்கிறார்கள். கொற்றவையின் கோலத்தைச் சிலப்பதிகார வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் வருணிக்கிறார்:

‘‘ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்து கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால், வானோர் வணங்க, மறைமேல் மறையாகி, ஞானக் கொழுந்தாய், நடுக்கின்றி யேநிற்பாய்”

காட்டெருமைத் தலைமேல் நின்றவன் மகிஷாசுரமர்த்தினிதான் என்பது அடுத்த பாட்டில் தெளிவாகிறது.

‘‘வரிவளைக்கை வாள் ஏந்தி மாமயிடன் செற்றுக் கரியதிரி கேட்டுக் கலைமிசைமேல் நின்றாயால், அரி, அரன், பூ மேலான் அகமலர்மேல் மன்னும் விரிகதிர் அம்சோதி விளக்காகி யேநிற்பாய்”

இப்பாடலில் கொற்றவையை லஷிமியாகவும் பார்வதியாகவும் சரஸ்வதியாகவும் போற்றுகிறார் இளங்கோவடிகள். மரக்கால்மேல் நின்று வாட்கூத்து ஆடுகிறாள் கொற்றவை. அதைக்கண்டு அவுணர்கள் அழிந்துபடுகிறார்கள், வரனோர்கள் மகிழ்கிறார்கள் என்றும் சிலப்பதிகார ஆசிரியர் கூறுகிறார்.

9. சாக்தத்திலேயிருந்த மெய்ப்பொருளை மாத்திரம் ஏற்றுக்கொண்டு, சைவத்தையும் சாக்தத்தையும் சமயப்படுத்திவிட்டார்கள். தமிழ்நாட்டிலேயிருந்த ஞானிகள், சிவனை உமையொரு பாகனாக்கி, அவனுக்கு அர்த்தநாரி வடிவத்தைக் கொடுத்து, இந்தக் கொள்கையை மேலும் வலியுறுத்திவிட்டார்கள். தீயில் இருந்து எப்படிச் சூட்டைப் பிரிக்க முடியாதோ, அப்படியே சிவத்தத்துவத்தினின்றும் சக்தித் தத்துவத்தைப் பிரிக்க முடியாது என்று முடிவு கட்டினார்கள். இதையே திருமந்திரத்திலும்,

‘‘அண்ண லிருப்பது அவளக் காத்துனே பெண்ணின் கல்லாளும் பிரான் அக் காத்துனே எண்ணி யிருவர் இசைந்தங் கிருந்திடம் புண்ணிய வாளர் பொருளறி வார்களே.” என்று சொல்லியிருக்கிறது.

இறைவன் அம்மையப்பனாகக் காட்சியளிக்கிறார் என்ற கருத்தை நாயன்மார்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள். இந்தக் கருத்தையே கம்பரும் ஒரு அரிய கவி பாடியிருக்கிறார்.

‘‘தாய்தன்னை யறியாத கன்றில்லை, தன்கன்றை ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகி, ஐய, நீஅறிதி எப்பொருளும், அவை உன்னை நிலையறியா மாயை இது என்கொலோ! வாராதே வாலல்லாய்.”

‘‘உலகின் தாய்” என்ற இறைத் தத்துவத்தை வருணித்துவிட்டு, ‘‘ஐயனே” என்று விளக்குகிறார். தாய்த் தத்துவமும் தகப்பன் தத்துவமும் பின்னிக் கிடந்த நிலைமையே மேற்சொன்ன பாட்டில், கம்பர் சுட்டிக்காட்டுகிறார்.

தொடரும்….

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 23-25

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here