வேள்விப் பூசைகள் அன்னை ஆதிபராசக்தியின் ஆலயத்தில் நடைபெறுகின்ற விழாக் காலங்களில் கலசங்கள், திருவிளக்குகள் வைத்து வேள்விப் பூசைகள் செய்யப் படுகின்றன. 1008 தமிழ் மந்திரங்களுடன் இந்த வேள்விப் பூசைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வேள்விப் பூசையில் வைக்கப்பட்ட கலசங்களையும், திருவிளக்குகளையும் வாங்கிச் சென்று வீட்டிலும் வைத்துப் பூசை செய்யும் படி அன்னை நமக்கு வழி கூறுகின்றாள். அவற்றின் மூலம் நம்முடைய முன்னைய ஊழ்வினைகளால் வரும் துன்பங்களைத் தணிக்கின்றாள்.

வேள்விகளுக்கு ஆற்றல் உண்டு

அன்னையின் ஆணைபெற்று, அவள் சொல்கின்ற விதிமுறைகளை வழுவாமல் செய்கின்ற வேள்விகட்கு எவ்வளவு ஆற்றல் இருக்கின்றது என்பதனை அன்னையின் பக்தர்கள் அனுபவ பூர்வமாகவே அறிந்திருக்கின்றார்கள். நம்முடைய சிற்றறிவுக்கு விளங்கும் படியாக அனுபவத்திலும் அன்னை நமக்குப் புரிய வைத்திருக்கின்றாள்.
 
வேள்வி செய்தால் மழையும் வரும்
 
சென்னையில் மகளிர் ஆன்மிக மாநாடு நடைபெற்ற போது,”  மழை வேண்டி வேள்வி நடத்துங்கள் மழைகொடுக்கின்றேன் ” என்றாள் அன்னை. அவ்வாறே வேள்வி நடத்தப்பட்டது.
 
அன்றைய சூழலில் வானிலை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு நாட்களுக்கு மழை வருவதற்கான அறிகுறியே இல்லை என்றார்கள். சில பத்திரிகைகளும் அந்தச் செய்தியைக் குறும்புத் தனத்தோடு தமக்கே உரிய முறையில் வெளியிட்டன.
ஆனால் நடந்தது என்ன?  வேள்வி நடந்து முடிந்த மறுநாள் விடியற்காலையில் சென்னை நகரில் ஒரு மணி நேரத்துக்குக் கொட்டோ கொட்டென்று மழை பெய்தது.
 
குடி தண்ணீருக்காகச் சென்னை மக்கள் தவியாய்த் தவித்த காலம் அது !கப்பலில் இருந்து தண்ணீர் கொண்டு வரலாம் என்று தமிழக அரசே முயற்சி செய்த நாட்கள் அவை!
 
அத்தகைய இடர்ப்பாடான நாட்களில் வேள்வி ஒன்றை நடத்தச் சொல்லிய அன்னை, வேள்வி நடந்த மறுநாள் சென்னையில் மழை பொழிய வைத்தாள். பூமியைக் குளிர வைத்தாள். வேள்விக்குரிய சக்தியையும், தன் சக்தியையும் உணர வைத்தாள். உரிய முறையில் பய பக்தியோடு வேள்வி செய்தால் மழையையும் வரவழைக்கலாம் என்று நமக்கெல்லாம் புரியச் செய்தாள்.
 
முறையோடு வேள்விகளைச் செய்ய வேண்டும்.
 
வேள்விகள் முறையோடு செய்யப்படுமானால் அதனால் விளையும் பலன்கள் அற்புதமானவை! விதி முறைகள் மீறப்பட்டு வேள்விகள் செய்யப்படுமானால் அதனால் விளைவுகளும் ஆபத்தானவை!
 
அன்னையின் திருவருள் துணைகொண்டும் – ஆன்மிக குருவான நம்முடைய அடிகளார் மேற்பார்வையிலும் ஆலயச் சார்பில் வேள்விகள் நடத்தப்படுவதால் அவற்றால் விளையும் அற்புதமான பலன்கள் நமக்கு அனுபவத்தின் மூலம் தெரிகின்றன. வேள்விப்பூசை செய்வதென்பது கத்தி முனையில் நடப்பதற்குச் சமம் அதே நேரத்தில் விதிமுறைகளோடு வேள்விகள் செய்யப்படும் போது அவற்றால் விளையும் பலா பலன்கள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பல நன்மைகள் விளைவிக்கும்.
 
வேள்வியினால் விளையும் பயன்கள் நோக்கங்கள்
 
உலக நலம் கருதியும், நாட்டு நலம் கருதியும், மழை வளம் வேண்டியும், இயற்கை உற்பாதங்களில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க வேண்டியும் , பக்தர்களின் குடும்பங்கள் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டியும், பக்தர்களின் ஊழ்வினைக் கொடுமைகள் தணிய வேண்டியும் அன்னை அருளிய விதி முறைகளோடு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்விப் பூசை, கலச பூசை, விளக்குப் பூசைகள் நடத்தப்படுகின்றன.
 
கலசங்களின் விளக்குகளின் மகிமை
 
இவ்வேள்விப் பூசைகளில் வைக்கப்படுகின்ற கலசங்களும், விளக்குகளும் அளப்பரிய சக்தியை கொண்டவை; சூட்சுமமாகப் பலன்களைத் தருபவை; ஊழ்வினைக் கொடுமைகளைத் தணிக்கும் வல்லமை பெற்றவை; வரப்போகும் துன்பங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் திறன் பெற்றவை; தீராத நோய்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றவை; பில்லி சூனியங்களால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் போக்குபவை பூசையில் வைக்கப்பட்ட விளக்குகள் குடும்பங்களை விளங்கச் செய்பவை; தள்ளித் தள்ளிப் போகின்ற திருமணங்களைத் திருவருள் துணை கொண்டு கூட்டுவிக்கும் சக்தி பெற்றவை!
 
சுருக்கமாகச் சொன்னால் அன்னையின் திருவருள் துணை கொண்டு செய்யப்படும் வேள்விப் பூசையில் வைக்கப்படும் கலசங்களும், விளக்குகளும் விலைமதிப்பற்றவை! அவற்றுக்கு நம்மால் விலைபோட முடியாது!  அவ்வளவு தான் சொல்லமுடியும்.
 
இக்கலசங்களின் உள்ள தீர்த்தங்களிலும்,விளக்குகளிலும் தன் திருவருள் சக்தியை இந்த வேள்விப் பூசையின் போது அன்னை பாய்ச்சுகின்றாள்.  அதன் மூலமாகப் பக்தர்களுக்கு நன்மை தருகின்றாள்; பலன் தருகின்றாள்.
 
இத்தகைய கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் சென்று பலன் பெறுமாறு அன்னை நமக்கு அறிவுறுத்துகின்றாள். சிற்றறிவு கொண்ட நமக்கு அவற்றின் மகத்துவம் புரியவில்லை. அனுபவத்தில் புரிந்து கொண்டு மற்றவர்கள் புகழும் போது தான்! ஜயோ! நாமும் கலசமும் விளக்கும் வாங்காமல் விட்டு விட்டோமே என்று ஆதங்கப்படுகின்றோம்.
 
ஒவ்வொரு முறையும் வாங்கும்படி அன்னை ஆணையிடுவது ஏன்?
 
“ஒவ்வொரு முறையும் கிரகங்களின் போக்கில் மாற்றம் நேர்கின்றது. ஒவ்வொரு கிரகத்துக்கும் அவனவன் துன்பங்கட்கும் தொடர்பு இருக்கிறது; அவனவன் ஊழ்வினைக்கும் தொடர்பு இருக்கிறது” என்கிறாள் அன்னை.
 
“ஒவ்வொரு ஆண்டும் கிரகங்களின் ஆட்சிக்குத் தக்கவாறு இன்ப துன்பங்களும், ஊழ்வினைப் போக்கும் வந்து அமைகின்றன” என்கிறாள் அன்னை. எனவே அவ்வப்போது நடத்தப்படுகின்ற வேள்விப் பூசையில் வைக்கப்பட்ட கலசங்களையும் வாங்கிச் சென்று பயன் பெறும் படி அன்னை வழிசொல்கின்றாள்.
 
பழைய கலசம், விளக்கு இருக்கப் புதியது ஏன்?
 
“ஏற்கனவே ஒரு முறை நாம் கலசம், விளக்கு வாங்கியிருக்கிறோமே அப்படியிருக்க இனிப்புதியதாக ஒன்று எதற்கு என்று நினைப்பதில் புண்ணியம் இல்லை “என்கிறாள் அன்னை.
 
ஏற்கெனவே வாங்கப்பட்ட கலசங்களும், விளக்குகளும் அப்போதிருந்த கிரகங்களின் அமைப்புக்குத் தக்கபடி ஊழ்வினையைப் போக்குவதற்கு அமைந்தவை.எனவே, கிரகங்களின் போக்குமாறுகிற போதெல்லாம் புதியதாக கலசமும் , விளக்கும் வாங்கிப் பூசை செய்வது தான் பலன் தரும். ஆகவே புதிதாகச் கலசமும் விளக்கும் வாங்கிப் பயன் அடையும் படி அன்னை அறிவுறுத்தியிருக்கிறாள்.
 
அவ்வளவு ஏன்? அவரவர் ஊழ்வினை முடிச்சுகளுக்கேற்ப “ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் சென்று பூசை செய்” என்றும் அன்னை அருள்வாக்கில் சிலருக்குச் சொல்லி அனுப்புவது உண்டு.
 
வேள்விப் பூசையில் வைக்கப்பட்ட இந்தக் கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் செல்பவர்கள் அவற்றை எவ்வாறு வீட்டில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என்றும் அன்னை கூறியிருக்கிறாள். அந்த முறைகளில் அவற்றை வீட்டில் வைத்துப் பயபக்தியுடன் பூசை செய்ய வேண்டும். அன்னை கூறிய முறைகளை வழுவாமல் விதி முறையுடன் பூசை செய்ய வேண்டும்.
 
நன்றாக நினைவில் பதிய வைத்துச் கொள்ளுங்கள்
 
கீழ்வரும் குறிப்புகளைச் கலச,  விளக்குகளையும் வாங்கிச் செல்வோர் மனத்தில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அன்னை சொல்லிய முறைகளை எழுத்துப் பிசகாமல் கடைப்பிடித்து நடக்க வேண்டும். அன்னை சொல்லிய விதிமுறைகளைப் பின் பற்றாமல் ஏனோ தானோ என்று கருதி நடந்துவிட்டுப் பிற்பாடு அன்னையை நொந்து கொள்வது மடமை
 
தனிப்பட்ட முறையில் அருள்வாக்கில் சொல்வது
 
பக்தர்கள் தனிப்பட்ட முறையில் அருள்வாக்குக் கேட்கச் செல்லும் போது, அவர்கள் பிரச்சனை தீர வேண்டி அவர்களைக் கலசம், விளக்கு ஏதேனும் ஒன்று வாங்கிச் செல்லும் படியும், அவற்றை எவ்வாறு வைத்துப் பூசை செய்ய வேண்டும் என்பதனையும் அருள்வாக்கில் அன்னை சொல்லியிருக்கக் கூடும்.அப்படிப்பட்டவர்கள் அன்னையின் அருள்வாக்குப் படியே பின்பற்றி நடக்க வேண்டும்.
 
பொதுவான விதிமுறைகள்
 
மற்ற பக்தர்கள் அன்னை பொதுவாகச் சொல்லியுள்ள முறைகளின் படியே கலச விளக்குகளை வைத்துப் பூசை செய்ய வேண்டும்.அந்தப் பொதுவான விதி முறைகள் பின்வருமாறு:
 
எதிர்வரும் 3- 5-85 அன்று அன்னையின் ஆலயத்தில் சித்திரா பெளர்ணமி விழா சீரும், சிறப்புமாக நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது, ஆலயத்தின் எல்லைக்குள் ஜந்து இடங்களில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, ஜந்து வகையான வேள்விச் சக்கரங்கள் அமைக்கப்பட்டு வேள்விப் பூசை நடைபெற உள்ளது.
 
ஏறத்தாழ மூவாயிரத்துக்கு மேற்பட்ட அளவில் கலசங்களும், விளக்குகளும் வைத்து வேள்விப் பூசை நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட ஆன்மிக மாநாட்டு நிகழ்ச்சி போல இவ் விழா அமைய இருக்கின்றது.
 
கலசத்தையும் விளக்கையும் வீட்டில் வைத்துப் பூசை செய்வது எப்படி?
 
1. சித்திரா பெளர்ணமியன்று வேள்விப் பூசையில் வைக்கப்பட்ட கலசம், விளக்கு இவற்றை வாங்கிச் செல்பவர்கள் அவற்றைத் தங்கள் வீட்டுப் பூசையறையில் எடுத்துச் சென்று வைத்துக் கொள்ள வேண்டும்.
 
2. வட்டம், சதுரம், அறுகோணம் இவற்றில் ஏதேனும் ஒன்று வரைந்து அதன் மேல் வாழையிலையைப் பரப்பி வைக்க வேண்டும்.
 
3. அந்த வாழையிலையில் தண்ணீர் தெளித்துத் தடவிப் பிறகு பச்சரிசி வைக்க வேண்டும்; அந்தப் பச்சரிசி மேல் கலசத்தையும், விளக்கையும் வைக்க வேண்டும்.
 
4. பச்சரிசி பக்கத்தில் கொஞ்சம் மஞ்சளும்,கொஞ்சம் குங்குமமும் வைக்க வேண்டும்.
 
5. மேற்கண்டவாறு வைத்துக் கலசத்துக்கும், விளக்குக்கும் பூசை செய்ய வேண்டும்.
 
6. பூசை முடிந்த பிறகு வாழை இலையை எடுத்துவிட வேண்டும். அதே இலையை மீண்டும் பூசைக்குப் பயன்படுத்தக் கூடாது.
 
7. வாழையிலையில் வைத்த பச்சரிசியைப் பூசை முடிந்த பிறகு சர்க்கரையைப் பொங்கலாகத் தயார் செய்து தானமாக அளித்து விடலாம்; அல்லது அப்படியே அரிசியை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்து விடலாம்; அல்லது அந்த அரிசியைப் பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிடலாம். 
 
8. வாழையிலையில் பச்சரிசி மேல் வைக்கப்பட்ட கலசத்தைப் பூசை முடிந்த பிறகு எடுத்து, அந்தக் கலசத்தில் உள்ள தீர்த்தத்தைக் கொஞ்சம் கையிருப்பில் வைத்துக் கொண்டு மீதி உள்ள கலச தீர்த்தத்தை வீட்டைச் சுற்றித் தெளிக்க வேண்டும்.
 
9. ஒவ்வொரு பூசையின் போதும் முன்னாள் கையிருப்பில் வைத்துள்ள தீர்த்தத்தைக் கொண்டு தான் புதியதாகச் கலச தீர்த்தம் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்; அதனைக் கொண்டு தான் அடுத்த முறை பூசை செய்ய வேண்டும்.
 
எத்தனை நாள் பூசை செய்வது
 
10 . ஒன்பது பெளர்ணமியோ, அல்லது ஒன்பது அமாவாசையோ அல்லது 108 நாட்களோ இவற்றில் எது உங்களுக்கு முடியுமோ அந்த வகையினைப் பின்பற்றிக் கலசத்தையும் விளக்கையும் வைத்துப் பூசை செய்ய வேண்டும்.
 
11. மேலே குறித்த ஒன்பது பெளர்ண்மி, அல்லது ஒன்பது அமாவாசை, அல்லது 108 நாட்கள் என்ற முறையில் பூசை செய்து முடித்தான பிறகு அந்தக் கலசத்தையும் , விளக்கையும் என்ன செய்ய வேண்டும்? அதற்கான முறைகள் சில அன்னையால் சொல்லப்பட்டுள்ளன.
 
கடலில் செலுத்திவிட வேண்டும்
 
12.உரிய முறையில் இத்தனை நாட்கள் என்று பூசை செய்து நிறைவேற்றி முடிந்த பிறகு அந்தக் கலசத்தையோ விளக்கையோ கடலில் சென்று செலுத்திவிட வேண்டும்.
 
புதிய கலசம், புதிய விளக்கு வாங்கிய பின் கடலில் செலுத்துக
 
13. ஆலயத்தில் அடுத்துச் செய்யப்படும் வேள்விப் பூசையில் புதியதாக ஒரு கலசமோ, விளக்கோ ஒன்றை வாங்கிச் சென்று வீட்டில் வைத்துக் கொண்ட பிறகு தான் , நீங்கள் இதுவரை வீட்டில் வைத்துப் பூசை செய்த கலச, விளக்கைக் கடலில் செலுத்த வேண்டும்.
 
14. கடலில் செலுத்தப்படும் கலசம், விளக்கு ஆகியன மற்றவர்கள் கைக்குக் கிடைக்கக் கூடாது. எனவே கடலில் சிறிது தூரம் படகில் சென்று கடலின் ஆழத்தில் அவற்றைச் செலுத்திவிட வேண்டும்; இதனை நீங்களே சென்றும் கடலில் செலுத்தலாம். இல்லையேல் நம்பிக்கைக்குரிய பொறுப்பான ஒருவரிடம் கொடுத்து அனுப்பியும் கடலில் செலுத்தச் செய்யலாம்.
 
கடலில் செலுத்துவதற்கு முன்பாக 
 
15. ஆலயத்தில் வேள்விப் பூசையில் வைக்கப்பட்ட புதிய ஒரு கலசமோ, புதிய ஒரு விளக்கோ வாங்கி வீட்டில் வைத்துக் கொண்ட பிறகு தான், வீட்டில் வைத்துப் பூசை செய்த பழைய கலசம், விளக்கு இவற்றைக் கடலில் செலுத்த வேண்டும். இதனை மறக்க வேண்டாம்.
 
16. கலசத்தையும் , விளக்கையும் கடலில் செலுத்தும் முன்பாக அவற்றுக்குச் செய்ய வேண்டிய சடங்கு ஒன்று உண்டு. கலசம், விளக்கிற்கு மஞ்சள் நீர் தெளித்து, மஞ்சள் , குங்குமப் பொட்டு ஜந்து வைத்து [கலசத்துக்கு 5 பொட்டு; விளக்குக்கு 5 பொட்டு]  வைத்த பிறகு தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை காட்டி எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி சுற்றிக் கழித்த பின் ஆழமான கடலில் யார் கைக்கும் கிடைக்காதவாறு அக் கடலில் செலுத்திவிட்டு வந்துவிட வேண்டும்.
 
அன்னை ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தார்க்கு
 
அன்னை ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் ஒவ்வொன்றும்,  கட்டாயமாகச் சித்திரா பெளர்ணமி வேள்விப் பூசையில் வைக்கப்பெறும் கலசம் ஒன்றையும், உரிய கட்டணம் செலுத்தி வாங்கிச் சென்று மன்றத்திலேயே நிரந்தரமாக வைத்துக் கொண்டு பூசை செய்ய வேண்டும் என்பது அன்னையின் ஆணை.
 
மன்றத்தினரான, நீங்கள் சித்திரா பெளர்ணமியன்று வாங்கிக் கொண்டு போகும் கலசமே தாய்க்கலசம்! சித்திரா பெளர்ணமி வேள்விப் பூசையில் வைக்கப்பட்டு நீங்கள் வாங்கிச் செல்லும் விளக்கே தாய் விளக்கு!
 
இந்தத் தாய்க் கலசத்தையும், தாய் விளக்கையும் உங்கள் மன்றத்தில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மன்றத்தில் இனிமேல் எந்தக் கலச விளக்கு வேள்விப் பூசை நடத்தினாலும், நீங்கள் உங்கள் பகுதியில் எங்கேனும் சென்று குடும்பநல வேள்வி செய்யச் சென்றாலும், இந்தத் தாய்க் கலசத்தையும், தாய் விளக்கையும் மையமாக வைத்தே கலச விளக்குப் பூசை நடத்த வேண்டும். குடும்ப நல வேள்வி முடிந்த பிறகும் கலச, விளக்கு வேள்விப் பூசை எங்கேனும் நடத்தி முடிந்த பிறகும் இந்தத் தாய்க்கலசமும், தாய் விளக்கும் மீண்டும் மன்றத்துக்குள் கொண்டு வந்து நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
ஆலயத்திலிருந்து கலசங்கள் விளக்குகள் பெற்றுச் செல்க
 
சித்திரா பெளர்ணமி அன்று வாங்கிச் செல்லும் தாய்க்கலசம், தாய் விளக்கு மட்டுமன்றி நீங்கள் எப்போது கலச விளக்குப் பூசை நடத்த முனைகிறீர்களோ அப்போதெல்லாம், ஆலயத்திலிருந்து வந்து இங்கிருந்து கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் சென்று கலச விளக்குப் பூசைகள் செய்வது தான் முறை; அடிகளார் உத்தரவு பெற்றோ அன்னையின் உத்தரவு பெற்றோ மன்றத்தார் கலச விளக்கு வேள்விப் பூசைகள் செய்வது தான் முறை; தங்கள் இஷ்டம் போல எங்கேனும் கடைகளில் கலசங்களையும், விளக்குகளையும் வாங்கிச் சென்று , தாய்க் கலசம், தாய் விளக்கு வைத்துப் பூசை செய்வது முறையன்று. 
 
ஆலயத்திலிருந்து நீங்கள் வாங்கிச் செல்லும் கலசங்கள் தோஷம் இல்லாதவை. அன்னையின் உத்தரவும் அடிகளார் உத்தரவும் பெற்றுக் கலச விளக்கு வேள்விப் பூசை செய்வதே உங்கட்குப் பாதுகாப்பு தருபவை. இவற்றை மறக்க வேண்டாம்.  
 
வேள்விப் பூசையில் பல சூட்சுமங்கள் இருப்பதால்- நம்முடைய சிற்றறிவுக்கு எல்லாம் எட்டுவது இல்லையாதலால் அன்னை சொல்லுகின்ற விதிமுறைகயோடு கலச விளக்கு வேள்விப் பூசைகளைச் செய்வது தான் மன்றங்களின் தலையாய கடமை.
 
நன்றி
சக்தி ஒளி 1985 ஏப்ரல்
பக்கம் 10- 17.
 
]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here