உலகின் எல்லா உயிர்களிலும் கலந்திருக்கும் தன்மை வாய்ந்ததே சத்தி! இச்சத்தியே உலகை ஆக்கவும் – அழிக்கவும் – காக்கவும் ஆற்றல் பெற்ற ஒன்று ஆகும். வடமொழியில் இதனை ‘வலிமையுடையது” எனும் பொருளில் (சாக்த – வலிமை) ‘சத்தி” என வழங்குபவர். தமிழில் இதனைச் ‘சத்துப் பொருளாக இருப்பது” எனக் கொண்டு ‘சத்தி” என வழங்குபவர்.

சத்துப் பொருளாக இருப்பது எது? அதுவே ‘ஆதியாய், அநாதியாய்” உள்ளது; ‘நிர்க்குண, நிராமய, நிராலஞ்சன” மானது; ‘எல்லாமாய் அல்லதுவாய் முன் இருந்தபடி இருப்பது ‘சத்தியாய்ச் சிவமாய்த் தனிப்பர முத்தியான முதலாக இருப்பது” என்பர் அறிஞர்.

ஆதி என்பது: வள்ளுவர் இதனை ‘ஆதி” என அழைப்பார். அத்துவைதிகள் இதனைப் ‘பிரமம்” என்றும், ‘நான்” என்றும் அழைப்பர். கீதையிலே கண்ணன், ‘படைப்பதும் நானே! அழிப்பதும் நானே” எனக் கூறுகிறான். அந்த ‘நான்” எனும் பொருளாக இருப்பதும் இப்பொருளேயாகும். இதனைப் பரஞ்சோதி முனிவர், ‘வேதியாய் வேத வினைபொருளாய் வேதத்தின் நீதியாய் நீதிநெறிகடந்த நீள் ஒளியாய் ஆதியாய் ஈறாப் நடுவாய் அது கழிந்த சோதியாய் நின்றாய் என் சோதனைத்தோ நின்னியல்பே!” என அப்பரம்பொருளின் உண்மையினை விளக்குகிறார்.

ஒன்று இரண்டாதல்: ஆதிப்பொருளாக உள்ள இதனை, ‘நிர்க்குணப்பிரமம்” என அறிஞர் அழைப்பர். நிர்க்குணம் என்றால் குணமற்றது எனப்பொருள். இஃதொரு காலகட்டத்தில் சலனமடைந்து (அசைவு) ‘சகுணப்பிரமம்” எனும் குணமுள்ளதாக மாறுகிறது. மாற்றம்பெறாத நிலையில் ‘சிவம்” என்றும், மாற்றம் பெற்ற நிலையில் ‘சத்தி” என்றும் இப்பொருளை அழைப்பதும் உண்டு.

பலவாதல்: ‘பராசத்தி” என்பது பரம்பொருளின் சத்தியாகும். இதில் இருந்து ஆதிசத்தி, இச்சாசத்தி, கிரியா சத்தி, ஞானாசத்தி, குடிலாசத்தி (ஆதாரசத்தி) என ஐந்து சத்திகள் பிரிந்தன. இந்தச் சத்திகளே இன்று உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகைப் பணிகளையும் செய்வதாகக் கூறுவர். இவற்றையே சிவ தத்துவச் செயல்களாகச் சைவர்கள் எண்ணுவர்.

சத்தி – ஆதிபராசத்தி: பொதுவாகச் சத்தி என்றால் வழக்கில் – முழுமுதற் பொருளான ஆதிபராசத்தியையும் அதன் பரிவார தேதைகளையும் சிவசத்தி ஐக்கியக் கோலங்களாகப் பார்வதி உமையையும் குறிப்பதாகும். இதிலிருந்து ஓர் உண்மை நமக்குப் புலப்படுகிறது. நம்நாட்டில் ‘சத்தி வழிபாடு” என்பது இம்முத்திறத்துக் கூறுகளையும் அணைத்துச் செல்லும் வழிபாடு என்பதே அவ்வுண்மை!

கிராம தேவதைகள்: கிராமங்களில் பெரும்பாலும் காவல் தெய்வங்களாக வழிபடப்படுவதே கிராம தேவதைகள், கொள்ளை நோய்களிலிருந்து மக்கள் காக்கப்பெற வேண்டித் தொழப்படுபவை இவை. காளி, மாரி, துர்க்கை, பிடாரி, முத்தாலம்மன், இரேணுகா பரமேச்சுவரி, அங்காளம்மன் முதலானவர்கள் இவர்கள்!

சிவசத்தி ஐக்கியத் தேவியர்: சிவாலயங்களில் போற்றப்பெறும் உமையம்மையும், அத்தேவியின் பல்வேறு பெயர்களுடன் பல ஊர்களில் மதுரைமீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசிவிசாலாட்சி, பார்வதி, அபிராமி இருந்து அருள்புரியும் தேவியரும் இப்பிரிவில் அடங்குவர். இத்தேவியர் அனைவருமே சிவனின் துணைகளேயாகும். ஆகவே இவர்கள் சிவதத்துவத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர். இவர்களோடு எந்த நிலையிலும் முழு முதல் தெய்வமான ஆதிபராசத்தியைச் சேர்த்து எண்ணக்கூடாது! ஆதிபராசத்தியின் ஆயிரக்கணக்கான கூறுகளின் ஒன்றாகவே சாக்தநெறி கூறும்!

ஆதிபராசத்தி: சிவதத்துவத்திற்கு எவ்வகையிலும் கட்டுப்படாத முழுமுதல் தெய்வம் இது. தமிழ்நாட்டில் பலரும் இதன் உண்மையுராமல் ஆதிபராசத்தியைச் சிவசத்தி ஐக்கியக்கோலமாகவே எண்ணி விடுகின்றனர்! ஆதிபராசத்தியின் முதன்மைத் தத்துவமான முழுமுதல் தன்மைபற்றி, அபிராமி அந்தாதியும், திருமந்திரமும், சௌத்தரியலகரியும் பரக்கக் கூறுவதைக் காணலாம்.

அபிராமி அந்தாதி: ‘அன்னே இவன் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்! அவனே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்! ஆகையால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்; துவனேன இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே!” என்றும்

திருமந்திரம்: ‘வாயும் மனமும் கடந்த மனோன்மணி! பேயும் கணமும் பொpதுடைப் பெண் பிள்ளை! ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும் தாரமும் ஆமே!” என்றும்

சௌந்தரியலகரி: ‘சக்தியுடன் சிவன் இணையும் போதே, அவன் (சிவன்) சக்தியுள்ளவன் ஆகிறாள்! இல்லையேல் அசைவதற்கும் சத்தியற்றவன் ஆகிறாள்” என்றும்

தேவி சூக்தம்: ‘நானே உயர்ந்த அரசி! புதையல்களிலும் புதையல்! எல்லாக் கடவுளருக்கும் தலைவி! என் பிறப்பு நீரின் நடுவே! என் மூச்சே உலகத்தை உருவாக்கியது!” என்று பெரியோர் கூறுகிறார்கள்.

முடிவான உண்மை: மேற்கண்ட நூல்களின் மூலம் நாம் அறியும் உண்மை, ‘எல்லாத்தெய்வத்திற்கும் மூலமான தெய்வம் ஆதிபராசத்தியே என்பதும், ‘எல்லாவல்லமைகளையும் பெற்றவள் ஆதிபராசத்தியே” என்பதும், நாம் அத்துணை ஆற்றல் உள்ள தெய்வத்தை நேராகவே வழிபடும் பேற்றை இம்மண்ணில் பெற்றுள்ளமை கிடைத்தற்கரிய பேறே என்பதும் புரிந்து கொள்ள முடிகிற தன்றோ?

ஓம் சக்தி

புலவர்.சு.முளிரத்தினம்

நன்றி: சக்திஒளி ஜனவரி. பக் 23-24 (1982)

 ]]>

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here