அந்தக் காலத்தில் அந்தணர்கள் தம் குடும்பங்களில் நிரந்தரமாகவே ஓம் குண்டம் வைத்து அக்கினி வழிபாடு செய்வது உண்டு.நல்ல காரியம் ஆனாலும்,மரணம் ஏற்பட்டாலும் அந்த வீட்டில் நிரந்தரமாக உள்ள அந்த அக்கினியைக் கொண்டே எல்லாக் காரியமும் நடத்தப்படும்.அப்படிப்பட்ட குலமரபுக்கு “அக்கினி  ஹோத்திரம் ” பெயர் இருந்தது.

அந்த அக்கினி ஓம குண்டமும், அவர்கள் செய்த மந்திர ஜெபமும், அவர்கள் புத்தியைக் கூர்மையாக்கிற்று. பல தெய்வ சக்திகள் அவர்கள் குடும்பங்கட்குப் பாதுகாப்பு அளித்தன. அந்த வழிபாட்டின் பயன்களையெல்லாம் அவர்கள் சந்ததியினர் முயற்சியில்லாமலே பெற்றார்கள்.காலப்போக்கில் எல்லாமே விடுபட்டுப் போயின.

 

விளக்கேற்றி வையுங்கள்

நாம் அம்மாவின் பக்தர்கள் நம் வீட்டில் காலை, மாலை என்ற இரண்டு வேளைகளிலும் அம்மாவை விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள்!

உங்களுக்கு வசதி இருக்குமானால் பூசை அறையில் 24 மணி நேரமும் விளக்கேற்றி வையுங்கள். அதே சமயம் விளக்குக்குப் பாதுகாப்பும் இருக்கட்டும்!

எங்கெங்கே விளக்கு எரிகிறதோ அந்தந்த வீடுகளில் தெய்வ சக்தி வாசம் புரிகிறது. அத்துடன் நீங்கள் படிக்கின்ற அந்த 1008, 108 மந்திர ஒலிகள் தீயசக்திகள் வாசம் செய்யாமல் விரட்டி அடிக்கும் வல்லமை பெற்றவை.

தீயசக்தினால் துன்பங்கள்

பங்களா கட்டிக் கொண்டு வெளிப்பார்வைக்கு ஓகோ என்று வாழ்பவர்களின் குடும்பங்களைத் தீய சக்திகள் எப்படி எப்படி எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றன என்பதை அவன், அம்மாவின் கரிக்கோலம் சென்றபோதும், சில குடும்ப நல வேள்விகளின் போதும் அனுபவ பூர்வமாகவே தெரிந்து கொண்டான்.அனுபவம் இல்லாதவன் இவற்றை நம்பமாட்டான்.

கும்பாபிடேகத்தில் வேள்விப் பூசை

எந்தக் கோயிலில் எந்தக் கும்பாபிடேகம் நடந்தாலும் அங்கே உயிர்ப்பான பூசையாக விளங்குவது வேள்விப் பூசை. அந்த வேள்வி நடைபெறும் வேள்விச் சாலை 36 தத்துவங்களின் வடிவமாக விளங்குவது! சைவ சமயம் 36 தத்துவங்களைக் கொண்டு உயிர், உலகம். இறைவன் என்பன பற்றிச் சொல்கிறது.

வேள்விக் குண்டங்கள்

வேள்விச் சாலையில் ஒன்பது வகையான யாக குண்டங்களை அமைத்து வழிபட வேண்டும் என்பது சைவ ஆகம விதி. இந்த ஒன்பது குண்டங்களை “நவ குண்டங்கள் “என்ற திருமந்திரம் கூறுகிறது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு வகையான யாக குண்டம் அமைத்து ஒன்பது அக்கினிகள் வளர்க்கப்படும். 

அக்கினியை ஒரு தத்துவமாகக் கொள்ள வேண்டும்;  நாம் கருதுவது போல வெறும் நெருப்பு மட்டும் அல்ல! வெளியே இருக்கிற அக்கினியோடு நம் உள்ளே இருக்கிற ‘ஞானம் ‘என்கிற அக்கினியையும் ஒன்று கலந்து ஞான யோக நெறியில் நின்று செய்யப்படுகிற ஒன்றே வேள்வியாகும். அகப்பூசையும், புறப்பூசையும் இரண்டும் கலந்த பூசை முறை இது ஆகும். 

நவ குண்டங்கள் ஏன்?

வேள்விச் சாலையில் ஒன்பது வகையான யாக குண்டங்கள் ஏன்? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

உலகப் பொருள்கள் அனைத்தையும் சைவர்கள் எட்டு வகையாக பிரித்துச் சொல்கிறார்கள்.

1.நிலம் 2. நீர் 3. தீ 4. காற்று 5. ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் ஜந்து 6. சூரியன் 7. சந்திரன் 8.ஆன்மா எனும் மூன்று என எட்டு வகைப் பொருள்களிலும் இறைவன் ஊடுருவியிருக்கிறான். எனவே இந்த எட்டு வகையான பொருள்களையும் தனித்தனியாகக் குறிப்பதற்கு எட்டு வகையான குண்டங்கள். இவற்றோடு இவற்றுக்கு அப்பால் இறைவன் தனித்தும் நிற்பதால் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பிரதானமான யாக குண்டம் ஒன்று ஆக ஒன்பது வகை யாக குண்டங்களை அமைத்துச் சைவர்கள் வேள்விப் பூசை செய்வார்கள்.

நவ குண்டங்களின் வடிவம்

நவ குண்டங்கள் ஒன்று போலவே இருப்பது இல்லை. அவற்றின் அமைப்பும் வடிவமும் மாறுபட்ட நிலையில் அமைக்கப்படும். அவையானவை:

1. சதுர வடிவான நாற்கோண குண்டம்

2. யோனி குண்டம்

3. பிறை வடிவில் ஒரு குண்டம் 

4. முக்கோண குண்டம்

5. வட்டமான குண்டம்

6. அறுகோண குண்டம்

7. பதுமம் (தாமரை) வடிவ குண்டம்

8. எண்கோண குண்டம்

 எட்டுத் திசைகளிலும் எது எது எங்கே அமைய வேண்டும் என்ற விதி உண்டு. இந்த ஒன்பது குண்டங்களில் வளர்க்கப்படுகிற அக்கினிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவை:

1. ஆகவனீயம் 2. விருத்தாக்கினி 3. தட்சிணாக்கினி 4. யெளவன அக்கினி 5. காருக பத்திய அக்கினி 6. பால அக்கினி 7. கேவலாக்கினி 8. சாமான்ய அக்கினி 9. சிவாக்கினி என்ற பெயர்கள் உண்டு.

நவ குண்டங்களின் உட்பொருள்

1. இறைவன் பஞ்சபூதங்கள் ஜந்தாகவும் சூரியன், சந்திரன், ஆன்மா என்ற மூன்றாகவும் எட்டுவகை உடம்பாக இருக்கிறான்! அதை உணர்த்த எட்டு குண்டங்கள்; இறைவனுக்குப் பிரதானமான தனித்த குண்டம் ஒன்று ஆக ஒன்பது குண்டங்கள்.

2. அட்ட மூர்த்தமாக இருக்கிற இறைவன் நம் உடம்புக்குள்ளேயும், பஞ்ச பூதங்களாகவும், சூரிய, சந்திரனாகவும், ஆத்மாவாகவும் இருக்கிறான் என்கிற தத்துவப் பொருளை உணர்த்துகிற எட்டுக் குண்டங்கள்.

3. நம் உடம்பில் சக்தி வாய்ந்த ஆதாரமான மையங்கள் உண்டு. இவற்றை ஆறு ஆதாரங்கள் என்று சித்தர்கள், யோகியர்கள் சொல்வார்கள். இவற்றில் ஆறு குண்டங்கள் ஆறு ஆதாரங்களைக் குறிப்பன. ஏழாவது நம் உடம்பில் சகஸ்ர தளம் அல்லது ஆயிரம் இதழ்த் தாமரை என்ற பகுதி தலையில் உண்டு. இவற்றை ஞான பூமிகள் ஏழு என்பர் வேதாந்திகள்.

அந்தச் சகஸ்ர தளம் கீழ் நோக்கிய நிலையிலும் மேல் நோக்கிய நிலையிலும் இருப்பதைக் குறிக்கும் இரண்டு நிலைகள் உண்டு. உலகியல் வசப்பட்டு காமத்திலும், காசு ஆசையிலும் மூழ்கிய நமக்கு அது கீழ் நோக்கியு நிலையில் உள்ளது. அவற்றைத் துறந்த யோகிகள் குண்டலினி சக்தியை மேலே ஏற்றிக் கொண்டு போய் அந்தச் சகஸ்ர தளத்தை மேல் நோக்கி அமையுமாறு பார்த்துக் கொள்வார்கள். ஆக சகஸ்ரதளத்தின் இரண்டு நிலைகள்.

மூலாதாரத்துக்கும் சுவாதிட்டானத்துக்கும் இடையில் உள்ள யோனி என்ற பகுதி ஒன்று.

ஆக நவகுண்டங்கள் என்பன, நம் உடம்பில் உள்ள ஆதாரங்கள் 6, சகஸ்ர தளத்தின் நிலை2, யோனி என்ற பகுதி 1- ஆக ஒன்பதையும் குறிப்பன. 

அகப்பூசை

இந்த ஒன்பது குண்டங்களில் யோகிகள், குண்டலினி சக்தியை எழுப்பி, தவக்கனல் மூலமாக அக்கினியை எழுப்பி, இறைவனைச் சோதியாகக் காண்கிறார்கள். பல தெய்வ சக்திகளை அடைகிறார்கள். சித்தர்களும், யோகியர்களும் உடம்புக்குள்ளே இருக்கிற இறைவனை அகப்பூசை செய்து வழிபடுகிறார்கள்.

புறப்பூசை

நம்மாலெல்லாம் அப்படி அகப்பூசை செய்ய முடியுமா?  அதனால் தான் ஒன்பது வகையாக குண்டங்களை வைத்து, அக்கினி வளர்த்து, சோதியை எழுப்பி, அந்தச் சோதியை யாக குண்டத்தில் தரிசிக்க வழி சொல்லி வைத்தார்கள் நம்நாட்டு யோகிகள்! எனவே நாம் செய்யும் இந்த வேள்விகள் புறப்பூசை!  யோகிகள் செய்வது அகப்பூசை.

வேள்விகளின் ஆற்றலைப்புரிய வைத்த அன்னை

இந்த வேள்விப் பூசையால் பல அற்புதமான பலன்களை நாம் பெறமுடியும். சென்னை ஆன்மிக மாநாட்டு வேள்வியால் மழை பெய்த அற்புதத்தையும், புஞ்சை புளியம்பட்டி, திருப்பூர் கும்பாபிடேக வேள்விக்குப் பின்னர் அந்தப் பகுதிகளில் மழை பெய்த அற்புதத்தையும், யாகங்களில் வைக்கப்பட்டுப் பூசை செய்யப்பட்ட கலச, விளக்குகளை வாங்கிய பக்தர்கள் பலர் நன்மை பெற்று வருவதையும் மருவத்தூர் அன்னையின் பக்தர்கள் அனுபவ ரீதியாகவே புரிந்து கொண்ட வியங்கள்!

பிற்காலத்தில் இந்த வேள்விகளில் சிரத்தை குறைந்து விட்டதாலும், ஆங்கிலக் கல்வி மோகத்தாலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் வேள்விகளின் மகிமை நமக்குப் புரியாமலே போய்விட்டன.

அம்மா தான் இங்கே அவதார நோக்கம் கொண்டு வந்து பழைய பூசைகளின் மகத்துவத்தை நமக்குப் புரிய வைத்தாள்! அனுபவ ரீதியாக உணரவும் வைத்தாள். பழமையில் உள்ள நல்ல வியங்களுக்கெல்லாம் அம்மா தற்போது உயிர்ப்பு கொடுத்துக் கொண்டு வருகிறாள்.

                                                                                  ஓம் சக்தி!

நன்றி

சக்தி ஒளி ஏப்ரல் 2009

பக்கம்31- 35

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here