சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் அம்மாவின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத் தரிசிப்பதற்கோ, கனடாவில் இருக்கும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்குச் செல்வதற்கோ எனக்குச் சந்தா்ப்பம் கிடைக்கவில்லை.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக என் கணவா் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தார். திடீரென அவரது உடல் நலம் நாளுக்கு நாள் பாதிப்பு அடையத் தொடங்கியது. அவரை அவரது மருத்துவப் பிரிவுக்கு அழைத்துச் சென்று, பரிசோதித்தபோது, டாக்டா்கள் அவரது வயிற்றில் நிறைய நீர் நிரம்பி இருப்பதை “அல்ட்ரா சவுண்டு” மூலம் கண்டறிந்தார்கள். அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். Liver Transplant செய்வதுதான் இதற்கு ஒரே வழி என்றும் கூறிவிட்டார்கள்.

அதன்பின் அவா் வேலைக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டது. Long Term disability –யில் இருந்தார். Transplant செய்வதற்குக் கனடாவில் Toronto General Hospital இல் பதிவு செய்தோம். காத்திருப்போர் பட்டியலில்தான் அவா் பெயா் இடம்பெற்றது.

பின்னா் வயிற்றில் நிரம்பும் நீரை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சென்று அகற்றி வந்தோம்.

இந்நிலையில் எனது அண்ணனின் நண்பா் ஒருவா், உடல்நிலை மோசமான நிலையில் இருந்து, ஆதிபராசக்தி மன்றம் சென்று வழிபட்டபின் குணம் அடைந்ததாகக் கேள்விப்பட்டு, அந்த மன்றத்தின் முகவரியைக் கேட்டறிந்தேன்.

21.11.2006 அன்று முதன் முதலாகக் காலை 10.30 மணிக்கு ஆதிபராசக்தி மன்றத்துக்குச் சென்றோம். எங்களுக்குத் தெரிந்த ஒருவா், அம்மன்றத்தின் தலைவியிடம் எங்களை அறிமுகப் படுத்தி வைத்தார். என் கணவரின் உடல்நிலை பற்றிக் கேள்விப்பட்டு, அம்மாவிடம் வந்து விட்டீர்கள். இனி எதற்கும் பயப்பட வேண்டாம். அம்மா பார்த்துக் கொள்வாள் என்றார்.

மன்ற வழிபாடு தொடங்கியது. என் கணவா் கையால் 108 மலா் அர்ச்சனை செய்ய வைத்தார்கள். 1008 மந்திரம் சொல்லும்போது என்னைக் குங்கும அர்ச்சனை செய்ய வைத்தார்கள். குருவின் திருவடிக்கு என் பிள்ளைகளையும், மாமியாரையும் குங்கும அர்ச்சனை செய்ய வைத்தார்கள்.

வீடு திரும்பி வந்தோம். அந்த நாள் முழுவதும் மன்றத்தில் நடந்தவை பற்றியே கதைத்துக்கொண்டிருந்தோம்.

அதன்பிறகு ஞாயிறு தோறும், விசேஷ நாட்களிலும் மன்றம் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டோம். எங்களால் முடிந்த தொண்டுகளையும் செய்து வந்தோம்.

சக்திஒளி பத்திரிக்கைகள், மேல்மருவத்தூர் அன்னையின் அற்புதங்கள், அன்னையின் அருள்வாக்கு முதலிய புத்தகங்கள் கிடைத்தன. விழாக்கால நிகழ்ச்சிகள் அடங்கிய D.V.D பிரதிகள் கிடைத்தன. அவற்றையெல்லாம் படித்தும், பார்த்தும் அம்மாவின் மகிமைகளை அறிந்தோம்.

2007 ஆம் ஆண்டு நடந்த சித்திரைப் பெளா்ணமி வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும் என்று என் கணவா் ஆசைப்பட்டார். அதற்காக டாக்டரிடம் அனுமதி கேட்டார். “இந்த நிலையில் நீங்கள் வெளிநாடு செல்வது மிக ஆபத்தானது. நான் கூறியும் மீறிச் சென்ற சிலா் உயிர் பிழைக்காமல் போய்விட்டனா். எனவே, உங்கள் உடல்நிலை இப்படி இருக்கும்போது பயணம் செய்யக் கூடாது” என்று மறுத்துவிட்டார்.

நானாவது மருவத்தூர் சென்று வர முயன்றபோது, நான் வேலை செய்யும் இடத்தில் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் எனது மகள் நான் மருவத்தூர் போய் வருகிறேன் என்றாள். எங்களுக்கு வேண்டிய சக்தி ஒருவரும் சித்திரை பௌர்ணமி விழாவுக்குச் செல்ல இருந்தார். எனவே, அவருடன் மகளை அனுப்பி வைத்தேன்.

எனது மகள் மருவத்தூர் சென்று அம்மாவைத் தரிசித்தாள். அத்துடன் அன்று இரவு 11.32 மணி அளவில், படுத்திருந்தபோது, பாம்பு உருவத்தில் ஏதோ ஒன்று வந்து தன் தோளில் விழுந்து. பிறகு தரையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்து பயந்து விட்டாள். தன்னுடன் பயணம் வந்த சக்தியிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி நடுங்கினாள்.

“பயப்பட வேண்டாம், அம்மாதான் வந்து மறைந்திருக்கிறாள். இப்படியெல்லாம் அற்புதம் நடப்பது இங்கே சகஜம்! மூல மந்திரம் சொல்லிவிட்டுப் படு! நாளை காலை அம்மாவுக்குப் பாதபூஜை செய்ய வேண்டும்” என்று அந்த சக்தி கூறித் தெளிய வைத்தார்.

விடியற்காலை, எழுந்து நீராடி விட்டு, கருவறையில் அபிஷேகம் நடப்பதைத் தரிசித்தாள். பாதபூஜை செய்யப்போனபோது, என் மகளிடம், ஒருதலை நாக யாக குண்டத்தில் கலந்து கொள் என்று அம்மா சொன்னார்கள். அவ்வாறே நிறைவேற்றினாள்.

ஊனமுற்றோருக்கு இரண்டு சக்கர வாகனம் வாங்கி அன்பளிப்பாக வழங்கினாள். தன் கையாலேயே அன்னதானம் வழங்கினாள். மருவத்தூர் கருவறையில் அம்மாவுக்குத் தன் கையாலேயே குங்கும அர்ச்சனை செய்தாள்.

மனத் திருப்தியோடு மருவத்தூரிலிருந்து கனடா வந்து சோ்ந்தாள்.

என் கணவருக்கு நோய் வந்த நாளிலிருந்து எங்களுக்கு சோதனைக் காலமாக மாறிவிட்டது. என் கணவா் பட்ட வேதனை சொல்ல முடியாது. அவரது உடல்நிலை மேலும் மேலும் பாதிப்படைந்து கொண்டே வந்தது. ஞாயிறு தோறும் கனடாவில் இருக்கும் மன்றத்திற்குச் சென்று வழிபாட்டின்போது அம்மாவிடம் காப்பாற்றிக் கொடு! என அழுது வேண்டுவேன். அவர் குணமானால் சக்தி ஒளிக்கு எழுதுவதாகவும் வேண்டிக் கொண்டேன்.

நவம்பா் ஏழாம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. “உங்கள் கணவருக்குப் பொருத்தக்கூடியதாக ஒரு லிவா் கிடைத்துள்ளது. இரண்டு மணிக்குள் அவரை அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள்!”

இவ்வளவு விரைவில் அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அம்மாவை நினைத்து உருகிப் போனோம்.

அன்றே மருத்துவமனை அடைந்தோம். மறுநாள் காலை 6.00 மணிக்கு ஆபரேஷன் செய்வதாகச் சொன்னார்கள். அவ்வாறே அழைத்துச் சென்றார்கள். என் கணவரின் கழுத்திலிருந்த அம்மாவின டாலரைக் கழற்ற வேண்டும் என்றார்கள். நாங்கள் எவ்வளவு சொல்லியும் டாக்டா்கள் கேட்கவில்லை. எனவே டாலரைக் கழற்றி என் கணவா் என் கையில் கொடுத்தார்.

அம்மா! தாயே! என் கணவருக்குக் கூட இருந்து இந்த ஆபரேஷன் வெற்றி பெற கருணை காட்டு! என்று வேண்டிக் கொண்டேன்.

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அந்த ஆபரேஷன் நடைபெற்றது. நானோ வெளியில் இருந்து கொண்டு 1008 மந்திரம், 108 மந்திரம், சக்தி கவசம் எல்லாம் தொடா்ந்து படித்துக் கொண்டே இருந்தேன்.

ஐந்து மணி நேரம் கடந்த பிறகு ஆபரேஷன் செய்த டாக்டா் வெளியே வந்து சொன்னார்.

“எல்லாம் நல்லபடி முடிந்தது. சற்று நேரத்தில் ஐ.சி.யு வார்டுக்குக் கொண்டுபோக இருக்கிறோம்” என்றார். எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

ஆபரேஷன் செய்த டாக்டா் சொன்னார்.

“நாங்கள் இதுவரை செய்த Liver Transplant Surgery யில் உங்கள் கணவருக்குத்தான் குறைந்த நேரத்தில் வெற்றிகரமாக அமைந்தது. அது மட்டுமல்ல…….. மிகவும் சொற்ப அளவில் Bleeding இருந்தது. இந்தச் செய்தியை இந்த வருட Hospital Record Book இல் பதிவு செய்ய இருக்கிறேன்” என்றார்.

அம்மாவின் சித்தாடலை எண்ணி எண்ணி வியந்தோம்.

என் கணவா் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் அம்மாவின் அருள்தான் காரணம்!

மிகக் கூடிய சீக்கிரம் மருவத்தூர் வருவோம்! அம்மாவைத் தரிசித்து எங்கள் நன்றிக் கண்ணீரைச் செலுத்துவோம்!

எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த அந்த சக்திக்கும், கனடா ஆதிபராசக்தி மன்றத்தாருக்கும் எங்கள் நன்றி!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. சுசீலா சசிதாகுமார்

டோரொன்டோ, கனடா

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here