அடிகளாரின் தொண்டன்

“அடிகளாரின் தொண்டன் எப்படி இருப்பான் தெரியுமா? அடிகளாரின் தொண்டன் உழைத்து உண்பான். ஊரார் பொருளுக்கு ஆசைப்பட மாட்டான். ஊண் உறக்கமின்றிச் சித்தா் பீடத்தைப் பற்றியும், அடிகளாரின் அவதார நோக்கம் பற்றியும் பட்டி தொட்டியெங்கும், பார்க்கும் இடம் எங்கும், போவோர் வருவோர் அனைவரிடத்தும் சொல்லிக் கொண்டே இருப்பான். மகனே!  அவன் அடிகளாரையும், அம்மாவையும் எந்த நேரத்திலேயும் வேறுபடுத்திப் பார்க்க மாட்டான்! நான் அவனைப் படாத பாடுபடுத்துவேன், ஆனால் பார் மகனே! அவனுக்குச் சந்தேகம் என்ற ஒன்று மட்டும் வருவதில்லை. மகனே! என்னுடைய உண்மையான தொண்டன் பட்டம், பதவி, புகழ், பவிசுக்கு என்றுமே ஆசைப்பட மாட்டான். அவனுக்குத் தொழில் தொண்டு மகனே!

மகனே! அவனுடைய தொழிலே தொண்டு என்றால் அதை வியாபாரம் பண்ணுவான்; அம்மா பேரைச் சொல்லிக் காசாக்கி அவனுடைய காலி வயிற்றை நிரப்பிக் கொள்வான் என்று பொருளல்ல.

அடிகளாரின் தொண்டன் நாணயமானவனாய் இருப்பான். நன்னடத்தையைக் கொண்டிருப்பான். அல்லும் பகலும் ஆன்மிக முன்னேற்றத்தைப் பற்றியே அயராது சிந்தித்துக் கொண்டிருப்பான். அவன் உழைத்துச் சாப்பிடுவான். ஒரு ரூபாய் சம்பாதித்தால் அதிலிருந்து பத்துக் காசை ஆன்மிகத்திற்காகச் செலவிடுவான். மகனே! அவன் யாருக்கும் வால் பிடிக்க மாட்டான். வஞ்சக எண்ணங்களை நெஞ்சிலே சுமக்க மாட்டான். வீண் பொழுதைக் கழிக்க மாட்டான். விளையாட்டுக்காகக் கூடப் பொய் கூறமாட்டான். கபடு, சூது, வாது அவனை நெருங்கமாட்டா!

அவன் தனது பெற்றோரை, குடும்பத்தாரை, சுற்றத்தாரை மதித்து நடப்பான், மகனே! அவன் ஒருவனுக்காக அவனுடைய அகங்காரமில்லாத தொண்டினுக்காக – அவனைச் சார்ந்த அனைவரையும் காப்பாற்றுவேன்.”

நன்றி.

ஓம் சக்தி!

மேல்மருவத்தூா் அன்னையின் அருள்வாக்கு

பக்கம் 285 – 286

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here