பஞ்ச பூதங்களை வழிபடுவது எப்படி?

இயற்கையை வணங்கு! இயற்கையை வழிபடு! இயற்கைக்கு நன்றி செலுத்து என்றெல்லாம் அன்னை அவ்வப்போது வற்புறுத்தி இருக்கிறாள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

இயற்கை என்பது என்ன? பஞ்ச பூதங்கள், அவற்றிலிருந்து உற்பத்தியாகும் அனைத்துமே இயற்கை. நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐந்தும் பஞ்ச பூதங்கள் எனப்படும். இவற்றையே பஞ்ச தெய்வங்களாகப் போற்றி வழிபடுவது பண்டைய வழக்கம். இப் பஞ்ச தெய்வங்களை வழிபடுவது எப்படி? வணங்குவதெப்படி? என்பது குறித்து நம் அன்னை ஒரு தைப்பூச விழாவின் போது வேள்விக் குழுத் தொண்டா்கள் சிலருக்கு அருளினாள்.

பஞ்ச பூதங்களை வணங்கும் முறை பின்வருமாறு

  1. முதலில் நம் இரண்டு கைகளையும் சிரசின் மேல் கூப்பி வைத்துக்கொண்டு “ஓம் சக்தியே! நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச தெய்வங்களும் அருள் புரிய வேண்டும் ஓம்சக்தியே!” எனச் சொல்லி வணங்க வேண்டும்
  2. அடுத்து நம் இரண்டு கட்டை விரல்களையும் கீழ்நோக்கி இருக்கும்படி சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மேல் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் இடைவெளி வழியாக ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண் வழியாக பூசை அறையிலுள்ள ஓம் சக்தி விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கின் ஜோதிப் பிழம்பைப் பார்த்தபடி “ஓம் சக்தியே! அருவுருவான தெய்வங்கள் அனைத்தும் அருள்புரிய வேண்டும் ஓம்சக்தியே!” எனச் சொல்லி வணங்க வேண்டும்.
  3. அடுத்து நின்ற இடத்தை விட்டு நகராமல் நம் இரு கால்களையும் மண்டியிட்டு நம் சிரசு பூமியில் படுமாறு வைத்து “ஓம் சக்தியே! பூமாதேவியே! எங்களைக் காத்தருள்புரிய வேண்டும் ஓம் சக்தியே” எனச் சொல்லி வணங்க வேண்டும். நம் இரண்டு கைகளும் தரையில் பதிந்திருக்க வேண்டும்.
  4. பின்னா் மண்டியிட்டு அமா்ந்த நிலையிலேயே நிமிர்ந்தபடி இடது கையை இடது மார்பில் பதித்தபடி வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையை வலப்புற மார்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக்கொண்டு “ஓம் சக்தியே! இதயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் ஓம் சக்தியே!” எனச் சொல்லி வணங்க வேண்டும்.
  5. அடுத்து இடக்கையை மார்பிலே வைத்துக்கொண்டு வலக்கையை மட்டும் எடுத்து கீழ்வரும் முறைப்படி வரிசையாகச் சொல்லி வணங்க வேண்டும்.
  • இரண்டு கண்களையும் தொட்டு “ஓம் சக்தியே! நல்லதையே பார்க்க வேண்டும் ஓம்சக்தியே!” என்று சொல்ல வேண்டும்.
  • இரண்டு காதுகளையும் தொட்டு “ஓம் சக்தியே! நல்லதையே கேட்கவேண்டும் ஓம் சக்தியே!” என்று சொல்ல வேண்டும்.
  • சிரசின் மேல் கையை வைத்து “ஓம் சக்தியே! நினைவு நல்லதாக இருக்க வேண்டும் ஓம்சக்தியே!” என்று சொல்ல வேண்டும்.
  • மூக்கின் மேல் கையை வைத்து “ஓம் சக்தியே! நல்லதையே சுவாசிக்க வேண்டும் ஓம் சக்தியே!” என்று சொல்ல வேண்டும்
  • உதட்டின்மேல் கையை வைத்து “ஓம் சக்தியே! நல்லதையே பேச வேண்டும் ஓம் சக்தியே!” என்று சொல்ல வேண்டும்.
  • இறுதியாக நாக்கின் மேல் கை விரலை வைத்து “ஓம் சக்தியே! நல்லதையே ருசிக்க வேண்டும் ஓம் சக்தியே!” என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு சொல்லி வணங்கி முடித்து நேராக எழுந்து நின்று தன்னைத் தானே சுற்றிக் கொள்ள வேண்டும். இது தன்னிலுள்ள ஆன்மாவைச் சுற்றி வந்து வணங்குவதாகும்.

அன்றாடம் காலை, மாலை இரு வேளையும் குரு போற்றி 108, வேண்டுதற் கூறு, 1008, 108 படித்து வழிபட்ட பிறகு வழிபாட்டின் அங்கமாக பஞ்சபூத வழிபாட்டையும் சேர்த்துக்கொள்வது சிறப்பு.

இந்த வழிபாட்டில் அன்னை சில முத்திரைகளையும் சேர்த்து வழங்கியிருப்பதாக விபரம் தெரிந்த சொல்கிறார்கள்.

பணம் சம்பாதிக்க எப்படியெல்லாம் பாடுபட்டு அலைகிறோமோ அதுபோல தெய்வ அருளைச் சம்பாதிக்க அலைகிற ஆன்மாக்களுக்கு பல வழிமுறைகளை அம்மா காட்டிவருகிறாள். அவற்றுள் பஞ்சபூத வழிபாடும் ஒன்று.

“தெய்வம் காட்டும் ஊட்டாது” என்பது பழமொழி.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்த நம் பெண்கள் இந்த வழிபாட்டு முறைகளையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

எந்தக் காரியம் செய்தாலும் அதற்கு ஒரு பலன் உண்டு. பௌதீக உலகத்தில் உள்ள சட்டம் இது.

அன்றாடம் வழிபாடு செய்வதற்கும் ஒரு பலன் உண்டு. அந்தப் பலனை யாரும் குறுக்கிட்டுத் தடுக்க முடியாது.

அவதார புருஷா்கள் வரும்போது அந்தந்த யுக தா்மத்தக்குத் தக்கபடி வழிபாட்டு முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று ஒரு கொள்கை உண்டு.

அம்மாவின் அவதார காலத்தில் அருளப்பட்ட வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுவோர் ஆன்ம வளா்ச்சியும், முன்னேற்றமும் பெறலாம்.

நல்வினை உள்ளோர் இவற்றையெல்லாம் பின்பற்றி நலம் பெறுக.

ஓம் சக்தி!

நன்றி

அன்னை அருளிய வேள்வி முறைகள்

பக்கம் (482- 483)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here