இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன
செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்?

இறைவனையே தஞ்சமாக அடைந்த அடியார்களுக்கு கிரகங்களால் வரக்கூடிய துன்பம் வராது என்கிறார் ஞான சம்பந்தா். அவா் பாடிய கோளாறு திருப்பதிகம் புகழ்பெற்றது.

நம்மை அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் விதியையும் மீறி சோதிட சாத்திரங்களின் விதிகளையும் மீறி அன்னை சிலரது விதியையே மாற்றியிருக்கிறாள். சிலரது ஆயுளை நீடித்துக் கொடுத்திருக்கிறாள்.

நான் அறிந்த வரை பதினேடு போ் ஆயுளை நீடித்துக் கொடுத்திருக்கிறாள் சக்தி ஒளிக்கு எழுதி அனுப்பியவா்கள் இவா்கள். அம்மாவால் ஆயுள் நீடிக்கப்பட்டவா்கள் பலா் இருக்கலாம். நான் அறிந்த வரை சிலரை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

பகுதி 1

சக்தி சி. ராமசாமி – ஆசிரியா் சக்தி ஒளி

நமது அன்னையின் அவதாரகாலப் பெருமைகளை விளக்கிடும் மாத இதழ் சக்தி ஒளி ஆகும். இதழாசிரியா் அன்னையால் நியமிக்கப்பட்டவா். முதிர்ந்த வயதான சக்தி சி. ராமசாமி என்ற அன்பராவார். காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவா். வரலாற்றுப் புகழ் மிக்க ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் உணவுப் பொறுப்புக்களை ஏற்று திறம்படச் செயல் புரிந்தவா். திருமணமாகாதவா். பொறியியல்ப்பட்டம் பெற்றவா்.

அவரிடமிருந்த தகாத பழக்கம் 20 வருடமாக குதிரைப் பந்தயம் சென்று கொள்வது. அரசியலை வெறுத்து குதிரைப் பந்தய சூதாட்டத்தையும் விட்டு அவா் அன்னையிடம் வந்த கதை வேடிக்கையானது. இவருடைய நண்பர் ஒருவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது அவரை அழைத்துக்கொண்டு 03.03.1982 அன்று மேல்மருவத்தூா் வந்தார். சக்தி ராமசாமிக்கு அருள்வாக்குக் கேட்க விருப்பமில்லாததால்
தனது நண்பரின் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டுச் சித்தா்பீடத்தை வலம் வந்துவிட்டு காரில் வந்து அமா்ந்துவிட்டார். இவரது நண்பருக்கு அருள்வாக்கும் பரிகாரமும் கூறிய அன்னை “உன்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்த மகனை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார். இதை சக்தி ராமசாமியிடம் கூறி புற்று மண்டபத்துக்கு அனுப்பி அன்னையிடம் அருள்வாக்குக் கேட்க வைத்தார். இவரைப் பொறுத்தவரையில் அன்னையிடம் அருள்வாக்குக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இவா் அன்னை முன் உட்கார்ந்ததும் அன்னை கூறினாள் “மகனே! நீயோ திருமணம் செய்துகொள்ளவில்லை. தனிக்கட்டை! உனக்கு வாரிசு என்று யாருமே இல்லை. இங்கே விரைவில் ஆன்மீக மாநாடு நடத்தப்போகிறேன். அம் மாநாட்டில் வந்து தொண்டு செய்! அதன் பிறகு இங்கேயே இருந்துகொண்டு தொண்டு செய்! குதிரைப் பந்தயத்துக்குச் சென்று ஏன் வீணாகக் காலம் கழிக்கிறாய்? வேறு ஏதாவது கேட்க வேணுமென்றால் கேள் மகனே! என்றாள் அன்னை.

அதுகேட்ட சக்தி ராமசாமி “தாயே! எனக்கோ எழுபது வயதாகிறது. நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருக்கப்போகிறேன் என்பதும் எனக்குத் தெரியாது. ஜோதிடா்களோ “உன் சனி திசை முடியவில்லை” என்று கூறுகிறார்கள். வெகு விரைவில் உன் ஆயுள் முடியுமென்று சொல்லாமல் சொல்லிக் காட்டிவிட்டார்கள். இந்த நிலையில் இருக்கும் நாள் இங்கு வந்து என்ன தொண்டு செய்ய முடியும்?” என்று வினயமாகப் பதிலளித்தார். உடனே அன்னை “மகனே! உன் ஆயுள் என் கையில் இருக்கிறது! உனக்கு மரணம் சமீபத்தில் இல்லை. எந்த நோயும் உன்னைப் பாதிக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ இங்கே வந்து தொண்டு செய்!” எனச் சொன்னாள்.

அன்னையை வணங்கிவிட்டு வெளியே வந்தார். இனி இந்தக் குதிரைப் பந்தயத்தின்
பக்கமே போகக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு திரும்பினார். 20 ஆண்டுப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மீண்டும் 04.03.1982 அன்று மேல்மருவத்தூா் வந்தார். அப்போது அருள்வாக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மேல் மருவத்தூரில் முதல் ஆன்மிக மாநாடு நடத்துவது பற்றிக் கூறிய அன்னை மாநாட்டுக்குப் பொறுப்பாளா்களை அப்போது நியமித்தாள். சக்தி.சி.ராமசாமி அங்கு சென்று நின்றார். “மகனே! உன்னை உணவுக் குழுவுக்குத் தலைவனாக நியமித்திருக்கிறேன்.” எனத் திருவாய் மலா்ந்தாள். பொறுப்புக் கொடுக்கப்படும் என்று அவா் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் மாநாடுகளில் பங்குகொண்டு நடத்திய அனுபவம் இருந்ததால் நல்ல முறையில் பணியாற்ற முடியும் என்று எண்ணினார். சென்னைக்குத் திரும்பி பெட்டி படுக்கைகளுடன் வந்தார். மருவத்தூரில் தங்கிக்கொண்டு மாநாட்டு உணவுப் பொறுப்புக்களை ஏற்றுச் செயற்படத் தொடங்கினார். இந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார்.

உணவுப் பொறுப்பேற்று நான்கு நாட்களாயின. நாற்பது ஆண்டு காலம் அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி மாயமாக நீங்கிப் போயிற்று.

அவருக்கே அளவு கடந்த ஆச்சரியம் உண்டாயிற்று. அதன் பிறகு அன்னையின் மேல் நம்பிக்கையும் பக்தியும் உண்டாயிற்று.

பகுதி 2

ஆயுளை நீட்டிக் கொடுத்த அன்னை – ஜாதகத்தில் சிக்கல்

கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா் இருக்கிறார். அவரது சகலைக்கு  (மனைவியின் தங்கையின் கணவா்) ஒரு பிரச்சினை. அவா். எம். எஸ். சி பட்டம் பெற்று மேல் நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிபவா். அவரது மகள் வயதுக்கு வந்த நேரம்
அந்த நேரத்தின் காலம் நல்லது தானா? என்று பார்க்க ஒரு ஜோதிடரிடம் அந்த ஆசிரியா் சென்றார். பெண் வயதுக்கு வந்த குறிப்பைப் பார்த்துவிட்டு அந்த ஜோதிடர் பெண்ணின் தந்தையின் ஜாதகமும் கேட்டார். அதையும் கொடுத்தார் ஆசிரியா். ஆசிரியரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஜோதிடா் வெகு நேரம் ஜோசித்தார். எப்படிச் சொல்வதென்று தயங்கினார். கடைசியில் சொன்னார் “உங்கள் சாதகம் நன்றாய் இல்லை. 1987ல் பெப்ரவரி 16ம் திகதியன்று நீங்கள் நிச்சயமாக இறந்துவிடுவீா்கள். தப்பிக்க வாய்ப்பில்லை”

சாவு நிச்சயம்

அதை நம்பாமல் வேறு மிகத் தெரிந்த இரு ஜோதிடா்களிடம் காட்டினார். பெப்ரவரி 16ற்கு மேல் இந்த ஜாதகா் உயிர் வாழ ஜாதகத்தில் வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டனா். இன்னும் ஒன்றரை மாதத்தில் சாவு நிச்சயம் என்றாகி விட்டது.

சாவை விடத் துன்பமானது

ஆசிரியா் மனம் கலங்கினார். வேலைக்கு நிம்மதியாகப் போய் வர முடியவில்லை. உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இந்த நாளில் சாவு வரப்போகிறது என்று தெரிவது சாவைக் காட்டிலும் துன்பமானது அல்லவா? செய்வதறியாது கலங்கினார். மனைவியையும் குழந்தைகளையும் மாமனார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தன் சகலை சக்தி தொண்டா் ஸ்ரீராம் வீட்டில் தங்கினார்.

என் வீட்டுக்கு வா

ஒரு நாள் இரவு ஆசிரியரும் ஸ்ரீ ராமும், அவரது சிறு பெண்ணும் பக்கம் பக்கம் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நடு இரவில் ஸ்ரீராமின் சிறு பெண் எழுந்து அவரது முதுகிலே படார் படார் என்று அடித்து எழுப்பியது. திடுக்கிட்டு எழுந்து ஸ்ரீ ராம் படுக்கையில் உட்கார்ந்தார். அவா் குழந்தை தூங்கிய நிலையில் “என் வீட்டுக்கு வா, என் வீட்டுக்கு வா” என்று உரக்கச் சொல்லி விட்டுப்
படுத்துவிட்டது.

மருவத்தூா் அன்னையின் பெருங்கருணை

பொழுது விடிந்து சிறுமி எழுந்த பின் அவளைக் கூப்பிட்டு ஸ்ரீ ராம் “என்னம்மா ராத்திரி என்னை ஏன் எழுப்பினாய்?” என்று கேட்டார். “ நான் எழுப்பவில்லையே” என்றாள் மகள். “என் வீட்டுக்கு வா” என்று சொன்னாயே என்று கேட்டார். அப்படி நான் சொல்லவில்லையே என்றாள் அந்தச் சிறுமி. அந்தச் சிறுமி தந்தையை எழுப்பியதும் சொன்னதும் அந்தக் குழந்தைக்கு ஏதும் நினைவில்லை. ஸ்ரீ ராமுக்கு விசயம் புரிந்து விட்டது. சாவை எதிர்நோக்கும் தன் சகலைக்கு மருவத்தூராள் உதவும் பெருங் கருணை தான் இது என்று. சக்தி பக்தரான அவருக்கு விளங்க வெகு நேரம் ஆகவில்லை.

டெலிபோன் செய்தி மா்மம்

ஸ்ரீ ராம் சகலையான அந்த ஆசிரியரும் அந்த இரவே மருவத்தூருக்குப் புறப்படுவதென முடிவு செய்தார்கள். அந்த நாள் 15.02.1987 அன்று இரவு 8.30 மணிக்கு கோவையிலிருந்து சென்னை புறப்படும் சேரன் பேரூந்தில் கண்டக்டா் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஸ்ரீ ராம் சிறிது நேரம் யோசித்தார். பேரூந்தின் ஓட்டுனரிடம் சென்ற சார் “மருவத்தூருக்கு ஒரு நாலு பேர் அவசரமா போகணும்” என்று சொல்லும் போதே ஓட்டுனா் “ஓ! நீங்க தானா அது. வண்டியில உட்காருங்க சார்” என்று சொல்லிவிட்டு பின்னே கண்டக்டா் பக்கம் திரும்பி “நஞ்சுண்டார் போன் பண்ணினார் மருவத்தூருக்கு நாலு திக்கற் வேணும் என்று அவங்க வந்திருக்காங்க ஏத்திக்கப்பா” என்றார். ஆனால் ஸ்ரீ ராமுக்கோ அந்த ஆசிரியருக்கோ நஞ்சுண்டான் என்று யாரையும் தெரியாது. யாரிடமும் சொல்லி போன் செய்யவுமில்லை. ஸ்ரீ ராம், ஆசிரியா், அவா்களது மனைவி முதலிய நால்வரும் கோவையிலிருந்து மறுநாள் காலை மருவத்தூா் ஆலயத்தின் முன் வந்து இறங்கினார்கள். அந்த நாள் தான் ஆசிரியா்
நிச்சயம் இறந்து விடுவார் என்று ஜோதிடா் குறித்த 16.02.1987 ஆகும்.

அடிகளார் கைப்பட்ட அதிஷ்டம்

நால்வரும் குளித்து கோயில் சுற்றி அன்னையை மனமுருக வேண்டினார்கள். அன்று காலை ஆன்மீக குரு அடிகளார் அவர்கள் கோயில் சுற்றிவிட்டு அதா்வனபத்திரகாளி கோவயிலுக்கு செல்ல வெளிவாசல் நோக்கி வருகிறார்கள் அப்போது அந்த ஆசிரியர் நான்குகால் மண்டபத்தின் மேல் ஒரு பக்கம் ஒதுங்கி அடிகளாரையே பார்த்துக்கொண்டிருக்கிறார். அடிகளார் அவா்கள் 4கால் மண்டபத்தில் நடந்து செல்லும் போது அவா்களது திருக்கரம் அந்த ஆசிரியரின் மணிக்கட்டில் உள்ள நாடியில் பட்டது. அடிகளார் அவா்களின் பார்வை ஆசிரியர் மீது பட்டது நாடியில் பட்ட அதிஸ்டத்தால்  அந்த ஆசிரியா் ஆயுளை நீட்டிக் கொடுத்தார் அடிகளார். 16.02.1987 அன்று இறந்துவிடுவார் என்ற அமைப்பை அவதார புருசரான அடிகளார் மாற்றிக்கொடுத்து அவரை வாழவைத்தார்.

 

அடிகளார் அவதாரமே

அருள் திரு அடிகளார் அவர்கள் மனித உருவில் வாழ்வதும் நம்மை “சார்” போட்டு பேசுவதும் மனித நியதிச் செயல்கள். இதை வைத்துக் கொண்டு அவரை மனிதர் தான் என்று முடிவு செய்வதால் இம் முடிபு செய்தவர்களிற்கு தான் அது பேரிழப்பு. பார்வையிலே நோயைத் தீர்த்தும், இறந்த ஒருவரை உயிர்ப்பித்ததும் நாடியை அழுத்தியதால் உயிரை நீடித்துக் கொடுத்ததும், அவதாரச் செயல்கள். அடிகளார் கைப்பட்டு ஒரு மனிதனின் ஆயுள் நீண்டது. அடிகளார் அவதார புருஷா் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

பகுதி -3

செத்தவரை எழுப்பிய அடிகளார்

சக்தி பாலசுப்பிரமணியம் அம்மாவின் பக்தா். மத்திய அரசில் உயா் பதவி வகித்தவா். ஆலயத்தில் நடக்கும் எல்லா விழாக்களிலும்
கலந்து கொண்டு தொண்டு செய்வார். வேப்பேரி மன்றத்தின் உறுப்பினரும் ஆவார். ஆலயத்திற்கு வந்தாலும் அடிகளார் தரிசனம் பெறாமல் திரும்பமாட்டார். அவருக்கு வயது 54.

04.01.1998 அன்று வேப்பேரி மன்றத்துக்கு வந்து எப்படியாவது மேல் மருவத்தூா் போக வேண்டும் என்று மன்றத் தலைவரைக் கேட்டார். மன்றத் தலைவா் இவரது மைத்துனராவார். இவரைத் தனியாக அனுப்ப மன்றத் தலைவருக்கு மனமில்லை. ஆகையால் இவரது இரண்டு மகன்களையும் கூட அனுப்பி வைத்தார். அன்று மாலை 4.00 மணிக்குப் புறப்பட்டு இரவு சித்தா் பீடத்திற்கு வந்தார்கள். அம்மா வீட்டிற்குச் சென்று விட்டதால் அவரது வீட்டில் இரவு 8.30 மணிக்குத் தான் அம்மாவைத் தரிசிக்க முடிந்தது. ஆன்மீக விசயங்களெல்லாம் பேசிவிட்டு இரவு 9.15 ற்கு அடிகளார் விடை கொடுத்து அனுப்பினார். அப்போது அம்மா அவா்கள் இளைய பையனை அழைத்து மாமாவின் கால்களை மிதி என்றார்கள். அவ்வாறே அவரது இடது காலை மிதித்தான்.

அவருக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. “அடுத்த காலையும் மிதி” என்று அம்மா கூறியபடி வலது காலையும் மிதித்தான். அப்போது எதிர்பாராத விதமாக சக்தி பாலசுப்பிரமணியம் திடீரென்று மயங்கி விழுந்தார். மூத்த பையன் ஓடி வந்து அவரைக் கையால் அணைத்து தனது மடியின் மேல் படுக்க வைத்தார்.

அம்மா அவா்கள் “தண்ணீா் தெளியுங்கள். நான் தான் சொன்னேனல்லே” என்று கூறவும் இவரது தம்பி தண்ணீா் தெளித்தார். அதுவரை மயக்க நிலையில் இருந்தவா் திடீரென ஒரு விதமாகத் திமிறிக்கொண்டு ஓலமிட்டபடி சாய்ந்தார். தலை சாய்ந்துவிட்டது. வாய் கோணி நுரை தள்ளியது. கண்கள் செருகின, மலம், சிறுநீா் வெளியேறின. உயிர் பிரிந்துவிட்டது. இரு பையன்களும் அம்மாவைப் பார்த்துக் கதறினார்கள்.

அம்மா அவா்கள் கையிலே ஒரு செம்பிலே தண்ணீா் வைத்துக்கொண்டு
நிற்கிறார்கள். அடுத்து பையன்களைப் பார்த்து “என்ன? உங்கள் மாமா போய்விட்டார் என்று பார்த்தாயா? நான் விடமாட்டேன்” என்றார். அடுத்து அம்மா அவா்கள் உயிர் நீத்தவா் அருகில் வந்து தன் கையால் அவா் வாயில் தண்ணீா் ஊற்றி விட்டு நிமிர்ந்தார்கள். அடுத்த நொடியில் இறந்தவா் உயிர் பெற்று எழுந்து அம்மாவின் பாதங்களில் “அம்மா” என்று கதறிக்கொண்டு விழுந்தார்.

திருமதி அடிகளார் பதறியது

இங்கே எழுந்த அலறலும், சத்தமும் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த திருமதி அடிகளார் வேகமாக வந்து பார்த்து “என்ன நடந்தது?” என்று விசாரித்தார்கள். அங்கு நிலவிய சூழ்நிலையை உணா்ந்து டாக்டரை அழைத்து பரிசோதனை செய்யச் சொன்னார். அவா் சக்தி பாலசுப்பிரமணியம் உடலில் ரத்த அழுத்தமும், நாடித் துடிப்பும் எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னார்.

அப்போது அம்மா அவா்கள் சொன்னார்கள் “இன்றோடு உனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு! இன்றிலிருந்து உனக்குப் புது வாழ்கை தான்! நீ இதுவரை செய்து வந்த தொண்டெல்லாம் அம்மா மறக்கல! உனக்கு இது மறுபிறவி” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவா் செய்த தொண்டின் சிறப்பினை உணா்த்த இறந்த சக்தி பாலசுப்பிரமணியனின் உயிரை மீட்டுத் தந்துள்ளார். தொண்டின் பெருமையை நாம் எல்லாம் புரிந்து கொண்டு அம்மா சொல்லிய தொண்டுகளைச் செய்து அம்மாவின் அருளைப் பெறுவோமாக!

பகுதி 4

செய்யூரில் வாழும் ஒரு கிறிஸ்தவா்

ஒரு நாள் பொது அருள்வாக்கின்போது “இன்னும் சில தினங்களில் என் ஆலயத்தைச் சோ்ந்த தொண்டன் ஒருவனது விதி முடியப்போகிறது. என்றாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்” என்றாள் அன்னை. அவா் யாராக இருக்கும்? அவராக இருக்குமோ?, இவராக இருக்குமோ? என்று தொண்டா்கள்
தமக்குள் ஒருவருக்கு ஒருவா் எண்ணிக் கிடந்தனா். சில நாள் கழித்த பிறகே உண்மை புரிந்தது.

அன்னையிடம் ஈடுபாடுகொண்ட தொண்டா் ஒருவா் கிறிஸ்தவா் செய்யூரில் ஓமியோபதி மருத்துவராகத் தொழில் புரிந்து வந்தார். அன்னையிடம் பக்தியுடன் தொண்டாற்றி வந்தார். அந்தக் காரணத்தால் தன் மதத்தைச் சோ்ந்த நண்பா்களாலும் உறவினா்களாலும் புறக்கணிக்கப்பட்டவா். ஏற்கனவே அவா் இதய நோயாளி.

இரண்டு முறை அதற்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவா். ஒரு நாள் அவருக்குத் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். நிலமை மோசமாகி விட்டது. நாடித் துடிப்பு அடங்கிக்கொண்டு வந்தது. அவா் மனைவியும், அன்னையிடம் பக்தி கொண்டவா். கணவரின் நிலமையைக் கண்டு புரிந்துகொண்டு அக்கம் பக்கம் இருந்தவா்களிடம் “இவரைப் பார்த்துக்கொள்ளுங்கள் மேல்மருவத்தூருக்குப் போய் வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு ஓடிவந்தார்.

அவா் வந்த வேளை அன்னை அருள்வாக்குச் சொல்லும் வேளையாக அமைந்தது “தாயே! எனக்கு மாங்கல்யப் பிச்சை கொடு! என் கணவரைக் காப்பாற்றிக்கொடு! என்று கதறி அழுதார். “மகளே! நீ இருக்கும் நிலையில் மற்றவா்களாக இருந்தால் நேராக மருத்துவமனைக்கே ஓடியிருப்பார்கள். நீயோ என்னை நம்பி உன் கணவனை அந்த நிலையில் அப்படியே விட்டுவிட்டு தாயிடம் வந்து விட்டாய் கவலை வேண்டாம். காப்பாற்றித் தருகிறேன்” எனக் கூறி திருநீறும் எலுமிச்சம் பழமும் கொடுத்து அனுப்பி வைத்தாள் அன்னை.

எல்லோரும் வியக்கத்தக்க வகையில் அந்த கிறீஸ்தவத் தொண்டா் உயிர் பிழைத்திருந்தார். அதன் பிறகு எழு, எட்டு ஆண்டுகள் அவரது ஆயுளை நீடித்தாள் அன்னை. அன்னையின் திருப்பள்ளி எழுச்சியில் பின்வரும் பாடல் மேற்கண்ட நிகழ்ச்சியை உணா்த்துகிறது.

“செய்யூரில் வாழும் ஒரு சீருடைய தொண்டனவன்

விதிநாள் முடிந்தபோது

உய்யவழி காணாமல் அவன் மனைவி அழுதோடி

நின்காலில் வந்து வீழ்ந்தாள்

தையலவள் தாலிக்கும் தொண்டனவன் பக்திக்கும்

உவந்து நாள் நீட்டித் தந்தாய்

வெய்யவினை போக்க மேல்மருவூரில் குடிவந்த

மயிலே உன் விழிகள் திறவாய்”

பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழலாம் என்பது மார்க்கண்டேயனுக்கு விதிக்கப்பட்ட விதி! ஆயினும் பற்றிக்கொள்ள வேண்டிய இறைவனையே தஞ்சமாகப் பற்றிக் கொண்டதனால் ஆயுள் நீடிக்கப் பெற்றான் என்பது புராணகாலக் கதை! செய்யூர் தொண்டனின் ஆயுள் நீடிக்கப்பட்டது அடிகளார் காலத்து நிகழ்ச்சியாகும்.

பகுதி 5

தஞ்சாவூா் உச்சிஷ்ட கணபதி உபாசகா்

தஞ்சை மாவட்டத்தில் ஓா் அன்பா் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்து ஆன்ம முன்னேற்றம் பெற முயன்றவா். சற்றே வயதானவா்.

தனக்கு அந்திமககாலம் நெருங்கிவிட்டதை உள்ளுணா்வு மூலம் அறிந்துகொண்ட அவா் தன் சீடரை அழைத்து “நான் இந்த நாளில் இந்த மணிக்குள் சித்தியடையப் போகிறேன். எனக்குச் செய்ய வேண்டிய சமாதிக் கடன்களை நீயே செய்துவிடு! வேறு உறவினா் யாரும் செய்யவேண்டாம். இதோ இந்த இடத்தில் தான் சமாதி எழுப்ப வேண்டும். இத்தனை மூட்டை உப்பு விபூதி வாங்கி வைத்துக் கொள்” என்றெல்லாம் உரிய கிரியை முறைகளை முன்னரே கூறியிருந்தார்.

எந்த நாளில் தாம் சித்தியடையப்போவதாகச் சீடரிடம் கூறியிருந்தாரோ எந்த நாளில் தன் ஆன்மா உடற்கூட்டை விட்டுப் பிரியும் என்று சொல்லி இருந்தாரோ அந்த நாளும் வந்தது. அவா் நிஷ்டைக்குத் தயாரானார். உரிய கிரியையைச் செய்யச் சீடரும்
தயாரானார். நிஷ்டையும் கூடவில்லை. உயிரும் பிரியவில்லை. இத்தனைக்கும் இவா் உயா்நிலை உபாசகா் தான். எப்படித் தான் கணக்குப் பொய்த்தது? புரியவில்லை.

தெய்வ சங்கல்ப்பம் வேறாக இருக்கிறதே………….. என்று கூறியபடி சமாதிக்குழியிலிருந்து வெளியேறி வந்தார். சில மாதங்கள் கழித்து அந்த உபாசகரும் சீடரும் சென்னைக்கு ஒரு வேலையாகப் புறப்பட்டனா். வழியில் என்ன தோன்றியதோ? மேல் மருவத்தூரில் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அன்னையின் சித்தா்பீடத்தை வலம் வந்தார். அன்னையிடம் அருள்வாக்குக் கேட்க விரும்பிச் சென்று அமா்ந்தனா். “மகனே! உலக நன்மைக்காக இன்னும் சில நாள் நீ இருக்க வேண்டி இருக்கிறது. அதனால் தான் உன்னை நான் அழைத்துக்கொள்ளவில்லை. உன் கணிப்புத் தவறிப்போய் விட்டதே! நான் தான் உன் ஆயுளை நீட்டிக் கொடுத்திருக்கிறேன்” என்றாள் அன்னை.

இந்த அடிகளார்க்கு இந்த ரகசியமெல்லாம் எப்படித் தெரியும் என்று உடன் வந்த சீடா் ஆச்சரியப்பட்டுப் போனார். அருள்வாக்குச் சொல்வது யார் என்பதை அந்த உபாசகா் மட்டும் புரிந்து கொண்டார்.

ஓம் சக்தி!

நன்றி

சக்தி.R.கோவிந்தராஜன்

அண்ணா நகா். சென்னை – 40

மருவூா் மகானின் 65வது அவதாரத்திருநாள் மலா்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here