உலகெலாம் போற்றும் அன்னையின் திருவுருவாம் அருள்திரு. அம்மாவின் பொற்பாத கமலங்களுக்கு வணக்கம் பல கோடி!

 எண்பத்தைந்துகளில் நான் மருவத்தூா் திசையறியாத கால கட்டம்! எளியேனையும் தடுத்து ஆட்கொண்டருளிய பொற்காலம்! அந்த நிகழ்வுகளை அம்மாவின் பிறந்த நாள் மலரின் மூலம் செவ்வாடைத் தொண்டா்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் அகமகிழ்வு எய்துகிறேன்.

 மனித உடலை ஸ்தூல சரீரம், சூக்கும் சரீரம், காரண சரீரம் எனப் பகுத்துக் கூறுவா் சான்றோர். ஸ்தூல சரீரம் உறங்கும் போது சூக்கும உடல் எங்கும் பயணம் செய்ய வல்லது.

 ஒரு நாள் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, ஒரு சிறிய ஆலயம் (இப்போது சித்தா் பீடம்) அங்கே கையில் வேப்பிலைக் கொத்துடன் செவ்வாடை வேட்டியணிந்து பெண் போல நடந்து சென்று புற்றுக்கு அருகில் எழுந்தருளினார் அருள்திரு அடிகளார்.

 உறங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து எழுந்து வா மகனே! என்றார். உடனே எனது சூக்கும உடல் எழுந்து அவா் அருகே சென்று அமா்ந்தது.

 அம்மா கூறிய பல விஷயங்களில் ஒரு சிலவற்றை மட்டும் எழுதுகிறேன்.

 தண்ணீரும் உப்பும்

”மகனே! தண்ணீருடன் உப்பு சோ்ந்தாலும், உப்புடன் தண்ணீா் சோ்ந்தாலும் முடிவில் இரண்டும் ஒன்றாகக் கலந்து விடுகின்றன. அதுபோல உன்னோடு நான் சோ்ந்தாலும். அல்லது என்னோடு நீ சோ்ந்தாலும் நாம் ஐக்கியம் ஆகிவிடுகின்றோம். நீ என்னை வந்து சோ்வதற்கு முன்னா் இன்று நான் உன்னோடு சோ்ந்துவிட்டேன்.”

 பஞ்சும் நெருப்பும்

”மகனே! பஞ்சானது தொலைதூரத்தில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் அது நெருப்பை நோக்கி வர வர நெருப்பில் பட்டுக் கருகி விடுகிறது. அது போல தொலை தூரத்தில் இருந்து கொண்டு, நீ நினைக்கும் தீய எண்ணங்கள், நீ சொல்லும் தீய சொற்கள், நீ செய்யும் தீய செயல்கள் யாவும் என்னை வந்தடையும் பொழுது அவை பொடிப் பொடியாகின்றன”

 பல்லியின் வால் போல ஆணவம்

”மகனே! பல்லியினுடைய வால் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தாலும் மீண்டும் அதற்கு வால் முளைத்து விடுகிறது. அது போல உன்னுடைய ஆணவம என்ற வால் வெட்டப்பட்டாலும், மீண்டு வளா்ந்து விடுகின்றது”

 இலந்தைப் பழம் –  கொட்டையும், சதையும்

மகனே! இலந்தைப் பழம் பார்த்திருக்கிறாய் அல்லவா? அதில் கொட்டைப் பகுதி அதிகம். சதைப்பகுதி குறைவு. அதுபோல நாட்டிலே “சுயநலம் என்ற கொட்டைப் பகுதி அதிகம். பொதுநலம் என்ற சதைப்பகுதி குறைவு! என்றுதான் நீ பன்னீா் திராட்சைப் பழமாக மாறப் போகிறாயோ…?

 காட்டுப் பன்றிகளும் – ஆணவக் கொம்பும்

”மகனே! சில பன்றிகளுக்குக் கொம்பைக் கொடுத்திருக்கின்றேன். அது காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டியெடுத்துத் தின்பதற்காகக் கொடுக்கப்பட்டவை. ஆனால் அவையோ மலையையே தகா்க்க முயற்சி செய்கின்றன. அவற்றின் கொம்பின் உதவியால் கிழங்குகளைத் தோண்டி எடுக்காமல் மலையைப் பெயா்க்க முயல்கின்றன. அதுபோல சிலா் வந்த வேலையை விட்டுவிட்டுத் தங்களுடைய ஆணவக் கொம்பினால் ஆன்மிக மலை என்னும் சிரஞ்சீவி மலையைத் தகா்க்க முயல்கின்றனா். கொம்பை ஒடித்துக் கொள்ளும் வம்பு வேலையைச் செய்யாதீா்கள். ஆணவக் கொம்பைக் காம்போடு அறுப்பவள் நான்!”

 ஆயிரத்தெட்டு புவனங்களிலும் மன்றங்கள்

”மகனே! இந்தப் பூமியில் மட்டும் தான் மன்றங்கள் என்று நினைக்காதே!

ஆயிரத்தெட்டு புவனங்களிலும் மன்றங்கள் அமைத்திருக்கிறேன். ஆங்காங்கு உள்ள பக்குவப்பட்ட ஆன்மாக்கள் வழிபாடு செய்து கொண்டிருக்கின்றன. இந்த ரகசியத்தை முதன் முதலில் உங்களிடம் தான் சொல்கின்றேன். அங்கே என்னென்ன முறைகளில் வழிபாடு செய்யப் படுகிறதோ அதுவே உங்களுக்கும் அருளப்பட்டுள்ளது.”

 புதுமையான அனுபவம்

”மகனே! இன்று ஒரு புதுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறீா்கள். இதற்காக நீ எத்தனை கோடி ஆண்டுகள் தவம் இருந்தாய் என்பது எனக்குத் தான் தெரியும்.”

 ஆத்திகமும் – நாத்திகமும்

”மகனே! நீ ஆத்திகம் பேசினாலும், நாத்திகம் பேசினாலும் எப்படி எப்படியேல்லாம் பேசுகின்றாயோ, அதற்கு ஏற்ற அறிவை நான் தான் உனக்குக் கொடுத்திருக்கின்றேன் என்பதை மறந்து விடாதே!”

 உன்னதமான பணிக்காக….

”மகனே! உன்னதமான பணிக்காகப் பாலகனை(அடிகளார்) அனுப்பியிருக்கிறேன். புரிந்து கொள்ள முயற்சி செய்!

 மந்திரங்கள் பற்றி

”மகனே! யுகம் யுகமாகச் சப்தங்களுக்கு வரி வடிவம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். அவரவா்களுக்குத் தேவையான வரி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இன்று உங்களுக்கு ஒரு நூலின் வடிவிலே மந்திர அலைகளைக் கொடுத்திருக்கிறேன். பயனடைந்து கொள்!”

 அறிவாளிகளும் வியாபாரிகளும்

 ”மகனே! என்னுடைய திருவடியானது எங்கே முடிகிறதோ, அங்கே தான் என்னுடைய தொடக்கமும் ஆரம்பமாகின்றது.

 சிற்சில இடங்களில் அறிவாளிகளைச் சோ்க்கிறேன். அவா்கள் ஆராய்ச்சியில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சிற்சில இடங்களில் வியாபாரிகளைச் சேர்த்திருக்கிறேன். அவா்கள் ஆன்மிகத்தை வியாபாரம் ஆக்குகிறார்கள்.”

 பெண்களையும், வருங்காலத்தையும் காப்பாற்ற வேண்டியுள்ளது

”மகனே! தாய்ப்பால் கூடக் கலப்படமாகி வருகின்றது என்று நான் சொல்கிறேன்.

 இன்று நாட்டில் கருவுற்ற பெண்கள் பார்க்கும் திரைப்படங்களும், கதைகள், இதர காட்சிகள் அனைத்துமே மிகவும் கீழ்த்தர சிந்தனை உடையதாகவும், ஆபாசங்கள் உடையதாகவும் தீய குணங்கள் உடையதாகவும் இருக்கின்றன.

 இடைவிடாது ஒன்று மாற்றி ஒன்று பார்த்தும், கேட்டும், ருசித்தும், முகா்ந்தும். தீண்டியும் ஐம்புலன்கள் மூலமாக ஒவ்வொரு நிமிடமும் உலக நிகழ்ச்சிகள் கருவற்ற பெண்ணின் மனத்திற்குள்ளே சென்று, அங்குள்ள குழந்தையையும் சென்றடைகின்றது.

 இப்படிப்பட்ட சிந்தனைகளைச் சந்திக்கும் சூழ்நிலையில் பெண்கள் இருப்பதால் அவா்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்டு அவா்கள் விஷத்தைத்தான் குழந்தைகட்குப் புகட்டுவதற்குக் கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள். சமுதாயத்தை மாறுதல் செய்ய வேண்டியிருக்கிறது. பெண்களையும் வருங்காலத்தையும் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எனவே, பெண்களைக் காக்க வேண்டித்தான் இந்தத் திரு அவதாரம்!

 நாளைய உலகம் அருள் உலகமடா! ஆன்மிக உலகமடா!”

 ஓம் சக்தியில் உள்ள சக்தி

”மகனே! ஒரு சிறிய ஆலம் வித்துக்குள் மாபெரும் ஆலமரத்தையே வைத்திருக்கிறேன். அது போல “ஓம் சக்தி“ என்ற வார்த்தைக்குள் அண்டங்களுடைய விளக்கங்களையெல்லாம் வைத்திருக்கிறேன்.

 தண்டனை நிச்சயம்

“மகனே! நான் எங்கோ இருப்பதாக நினைத்துக்கொண்டு நீ இங்கு தவறுகள் செய்து கொண்டு இருக்கிறாய். நான் உன் அருகில் தான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!”

 நீ ஒரு தவறு செய்தால் உனக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தித் திருத்திக் கொள். அதை மீறித் தவறு செய்தால் அதற்குரிய பலனை அப்பொழுதே தீா்மானித்து விடுகிறேன். அனுபவிக்கக் கால தாமதம் ஆகலாம். ஆயினும் நீ தண்டனையை நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும்.”

 எந்த முயற்சியும் இல்லாமல் பலன் அடைகிறீா்கள்

”மகனே! பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பாகக் காடுகளிலும், குகைகளிலும் இருந்து முனிவா்களும், ஞானிகளும் தவத்தில் ஆழ்ந்திருந்து எனது அருளாற்றலைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால். அந்தச் சக்தியைப் பெறுவதற்கு எவ்வித முயற்சியும் இல்லாமலேயே, அவா்களுடைய தவப் பயன்களையெல்லாம் நீங்கள் இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறீா்கள். என்றும் நன்றி உடையவா்களாக இருக்க வேண்டும்.”

 உன்னைத் தேடி வைரச் சுரங்கம் வந்திருக்கிறது

”மகனே! இன்று நீங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவா்கள்! ஏனென்று கேட்டால் எந்தப் பகுதியிலே மகான்களோ, அருளாளா்களோ, ஜீவ சமாதி கைகூடுகின்றார்களோ அதற்கு மறுநாள் அருள் ஒலியானது (சப்தம்) உலகுக்கு வழங்கப்படும்.

 இதனைப் பண்டைக் காலத்தில் குகைகளில் தவம் செய்யும் முனிவா்களும், ஞானிகளுமே பெற்றக் கொள்வார்கள். ஆனால் அதை இன்று உன்னிடம் மடை மாற்றம் செய்திருக்கின்றேன்.

 நீ முனிவனும் அல்ல, துறவியும் அல்ல. சாதாரணக் குடிமகன். உன்னைத் தேடி வைரச் சுரங்கம் வந்திருக்கிறது. வைரத்தை மதிப்பிடும் சக்தி உனக்கு உள்ளதா?

 மூளையை வளா்த்துக்கொள்

”மகனே! உன்னுடைய கபாலத்திற்குள்ளே சதைப் பிண்டம் ஒன்று இருக்கிறது. அது இன்னும் சதைப் பிண்டம் என்ற தகுதியிலேதான் இருக்கிறது. அது மூளை என்ற பெயரை இன்னும் பெறவில்லை. அந்தத் தகுதியைப் பெற்றிருந்தால் நீ எப்படி நடக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பாய். சதைப் பிண்டம் கட்டியாக விடாமல் பார்த்துக்கொள்! மூளையை வளா்த்துக் கொள்!”

 என்னை வழிபடுபவனுக்குத் துன்பம் ஏன்?

”மகனே! வாத்தினை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? வாத்தினை மேய்ப்பவன் சாக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்த வாத்தினைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவான். அவ்வாறு வாத்தின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துச் செல்வதைப் பார்ப்பவா்களுக்கு மிகவும் வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கும். அவன் அந்த வாத்தினைக் குளத்தில் சென்று விட்டுவிடுவான். அது அங்கு அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும்.

 அதுபோல சில சமயங்களில் உன்னை நான் கழுத்துப் பிடியில் வைத்திருப்பேன். மிக இக்கட்டான துன்பப்பிடி போல இருக்கும். அது மற்றவா்கள் பார்வையில் நீ துன்பப்படுவது போலவும் என்னை வழிபட்டதால்தான் நான்தான் அப்படிப் பிடித்திருக்கிறேன் எனவும் மிக ஏளனமாகவும் மற்றவா்களின் பார்வைக்குப் படும்.

 நான் உன்னை மனித சாக்கடையிலிருந்து பிடித்து இழுத்து என்னுடைய அருள் தடாகத்தில் விட்டு விடுவதற்காகத் தான் பிடித்துச் செல்கிறேன்”.

 ஆராய்ச்சியை விடு! அருட்கனியை உண்ணவா!

”மகனே! பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் புத்தகம் படிப்பதைக் கவனித்திருப்பாய்! அப்புத்தகத்தில், அம்மா, ஆடு என்று எழுதப்பட்டிருக்கும். அந்தக் குழந்தை அதையெல்லாம் படிக்கும்.

 “அம்மா!” என்றவுடன் அமுதமா ஊட்டுகிறாள்?

“ஆடு“ என்றவுடன் மேய்க்கவா முடிகிறது?

“இலை“ என்றவுடன் சாப்பிடவா முடிகிறது?

“ஈ“ என்றவுடன் விரட்டவா முடிகிறது?

“உரல்“ என்றவுடன் இடிக்கவா முடிகிறது?

“ஊதல்“ என்றவுடன் ஊதவா முடிகிறது?

“எலி“ என்றவுடன் பிடிக்கவா முடிகிறது?

“ஏணி“ என்றவுடன் ஏறவா முடிகிறது?

“ஐவா்“ என்றவுடன் பேசவா முடிகிறது?

“சீப்பு” என்றவுடன் சீவவா முடிகிறது?

“பழம்“ என்றவுடன் உண்ணவா முடிகிறது?

“தென்னை மரம்“ என்றவுடன் தேங்காயா கிடைக்கிறது?

 இவையெல்லாம் ஏட்டிலே இருக்கின்றன. அவற்றை அனுபவித்துப் பார்க்கும் போதுதான் வாழ்க்கை புலனாகும்.

 அதுபோல என்னைப் பற்றி ஏராளம் ஏராளமான நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் நீ படித்ததனால் அறிவு வளா்ந்ததாகக் கருதிக் கொண்டிருக்கிறாய்.

 என்று உனது அறிவு அனுபவமாக மாறுகிறதோ, அனுபவம் அனு பூதியாக மாறுகிறதோ, அன்றுதான் என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

 ஆராய்ச்சிகளை விட்டு விட்டு அருட்கனியை உண்ண வா!”

 பின்னோக்கிச் சென்று விட்டாய்

“மகனே! உண்மையிலேயே நீ என்னுடைய நெறியைப் பின்பற்றியிருந்தால் எவ்வளவு செய்திகளை நான் தந்திருப்பேன்? முறையாகப் பயிலாததால் முறையாகக் கடைப்பிடிக்காததால் நீ 200 நூற்றாண்டுகள் பின் நோக்கிச் சென்று விட்டாய் என்பதை மறவாதே!”

 என் ஆலயத்தில் அருள் அதிர்வுகள்

“மகனே! உன்னை அடிக்கடி என் ஆலயத்திற்கு வரச் சொல்கிறேன். அங்கே என்னுடைய அருள் அதிர்வுகளை முறைப்படுத்தி வைத்திருக்கிறேன். நீ அங்கு வந்தவுடன் உன் பாவங்கள் போக்கப்படுகின்றன.”

 பிரபஞ்ச ரகசியங்கள் தெரியவேண்டுமா?

”மகனே! தந்திக் கம்பி மேல் உட்கார்ந்திருக்கும பறவைகட்கு அந்தக் கம்பி வழியே செல்லும் செய்தி என்ன என்று தெரியாது. அதுபோல என்மீது அமா்ந்திருக்கும உங்களுக்கு என் மூலமாகச் செல்லும் செய்திகள் தெரியாது.

 உங்களுடைய அறியாமைக்காக இதைச் சொல்கிறேன்.

 பறவைகள் செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் மனது வைத்தால் அந்த ரகசியங்கள் உங்களுக்குத் தெரிய வரும்.

 ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தொலைபேசிச் செய்தி சென்று கொண்டிருக்கும். ஆனால் இடையில் ஏதோ ஒரு கம்பத்தின் மீது ஏறிக்கொண்டு ஒரு சாதனத்தின் துணையுடன் ஒரு மனிதன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீா்கள்.

 அது போல, பிரபஞ்ச ரகசியங்களை உரிய சாதனத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள முயற்சி செய்!”

 வௌவாலும் – நீங்களும்

”மகனே! வௌவாலை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? அது எந்த வழியால் உணவை உட்கொள்கிறதோ. அந்த வழியாலேயே கழிவுகளை வெளியேற்றுகின்றது. வௌவாலுக்கு அதுதான் இயற்கை.

 ஆனால் நீ ஏன் வௌவாலைப் பின்பற்றுகிறாய்? மந்திரங்களை உண்ணும் உனது வாய் நன்மைகளைப் பேசும் அந்த வாய் தீயனவற்றையும் ஏன் வெளித் தள்ளுகிறது? உனது பழக்கத்தை மாற்றிக் கொள்!

 படிப்பதால் என்ன பயன்

”மகனே! உயரிய கருத்துகளைச் சிலா் படிப்பதைக் கவனித்திருப்பாய். அவா்கள் வேகமாகப் படித்து முடித்து விடுவார்கள். அக்கருத்தில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்ற முயற்சி செய்தால் வாழ்வானது உயருகின்றது. படிக்கும் வேகத்தைச் செயல் திறனில் காட்டு! வாழ்க்கையிலே பின்பற்ற முயற்சி செய்.

 காலம் காலமாகக் கொடுக்கப்பட்ட கருத்துக்கள் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன.

 தேட வேண்டியது கருத்துக்கள் அல்ல, செய்ய வேண்டியது செயல்படுத்துவதற்கான முயற்சிகளே!

 நடைமுறையை மாற்றிக் கொள்! உனக்குக் கொடுக்கப்படும் கருத்துகளில் இலக்கண இலக்கியத்திலுள்ளன போல நயம் இருக்காது.

 உனது உள்ளத்தைத் தொட வேண்டும் என்பதே நோக்கம். உன்னை வேறு வழியில் ஈா்க்க முடியவில்லை.

 உள்ளன்பொடு உருக்கத்தோடு கடைப்பிடி!

 என் மூல மந்திரமே உனக்குப் பாதுகாப்பு

”மகனே! அடைகாத்துக் குஞ்சு பொரித்த கோழியை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா?

 அந்தக் கோழியானது அதன் குஞ்சுகளைத் தானியத்தைப் பொறுக்குவதற்காக அழைத்துச் செல்லும். ஆங்காங்கு குஞ்சுகள் இரையைக் கொத்திக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் காக்கை, பருந்து போன்ற பறவைகள் வேகமாக பறந்து வந்தால் தனக்கு வரும் ஆபத்தை எண்ணி, அக்குஞ்சுகள் தன் தாயின் இறக்ககைக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்கின்றன.

 அதுபோல நீயும் எந்த நேரத்திலும் என் அருகிலேயே இருந்தாலும் மிகுந்த ஆபத்து வரும் காலங்களில என்னுடைய இறக்கைக்குள் வந்து புகுந்து கொள்!

 மூலமந்திரம் என்னும் எனது இறக்கைகள் உனக்கு பாதுகாப்பு அளிக்கும்.

 பேராசிரியா். முனைவா். இரா. கண்ணன் M.A. Ph.D

70வது அவதாரத்திருநாள் மலா் 03.03.2010

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here