அன்னை ஆதிபராசக்தியிடம் தம் குறைமுடிக்க வருபவர்கள் இரு வகைப்படுவர். முதல்வகையினர் உலகியல் அடிப்படையில் ஏதாவது ஒரு பயனை வேண்டி வருகின்றனர். வறுமை போக்க வருபவர், உடல் நலம் வேண்டி வருபவர், தீரா நோயைத் தீர்த்துக்கொள்ள வருபவர். திருமணம், மகப்பேறு முதலிய வேண்டி வருபவர் என இவர்கள் பல திறத்தினர். இவ்வாறு வருகின்றவர்களில் சிலருக்கு அன்னை உடனடியாக அவர்கள் குறையைப் போக்குகிறாள். சிலருக்குச் ‘‘சிறிது காலம் பொறுத்திரு” “மகனே! கொஞ்சங் கொஞ்சமாகப் போக்குகிறேன்” என்று கூறி அவ்வாறே அவர்கள் குறை முடிக்கிறாள். அவசரப்பட்டு உடனடியாகத் தம் குறையைப் போக்க வேண்டும் என்று கேட்பவர்களிடம் அன்னை கூறும் சொற்கள் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியவை. “மகனே! இந்த வினாடியிலேயே உன் குறையைப் போக்கிவிடுவேன். ஆனால் எந்த ஒரு பிராரத்துவ வினையினால் இக்குறை உனக்கு வந்ததோ அந்த வினை சும்மா இராது. இந்தக் குறையைப் போக்கினால் வேறு விதமாக அது உடனே உன்னைத் தாக்கும். இப்பொழுது உள்ள வயிற்று வலியை உடனே நீக்கினால் தானைத் தலை வலியாக வரும். அதை நீக்கினால் முதுகு வலியாக வரும். அந்த வினை தீருகின்ற வரை ஏதாவது ஒரு வகையில் அதன் தாக்கம் உன்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கும். எனவே, கவலைப் படாமல் இரு. வினைதீருகின்ற காலத்தை நான் அறிவேன். அது தீருகின்ற காலம் வரும் வரை இந்தக் குறை உன்னை ஒன்றுஞ் செய்யாமல் தான் பார்த்துக்கொள்கிறேன்; உரிய காலம் வரும் பொழுது கறையைப் போக்குகிறேன்” என்று கூறுகிறாள்.

இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஒரு சிலருக்கு உடனடியாக முதல் தடவையிலேயே அவர்கள் குறையை அன்னை முடித்து வைப்பதன் காரணம் இப்பொழுது புரிகிறதல்லவா? அவர்களைப் பொறுத்தவரை வினை தீருங்காலத்தில் அன்னையிடம் வந்துள்ளனர். எனவே உடனடியாக அவர்கள் குறையைப் போக்கி விடுகிறாள். என்றாலும் மனித மனம் விந்தையானது. அதிலும் துன்பம் நேர்கையில் உடனடியாக எப்படியாவது அதனைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் மனிதன் விரும்புவான். ஓரிடத்தில் அதைச் செய்து முடிக்க முடியவில்லை என்றவுடன் வேறு எங்காவது சென்று தன் காரியத்தை முடித்துக் கொள்ளவே மனிதன் முயல்வான்.

எல்லாவிடயங்களிலும் இருக்கின்ற பரம்பொருள் ஒன்றுதான் என்றால் ஒவ்வோர் இடமாக ஓடி அலைவதன் நோக்கம் என்ன? காசியில் விசாலாட்சி என்றும், காஞ்சியில் காமாட்சி என்றும், மதுரையில் மீனாட்சி என்றும் சமயபுரத்தில் மாரியம்மன் என்றும் பற்பல பெயர்களைத் தாங்கி இருப்பதால் இவ்விடங்களில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன என்று கூறுகிற அறியாமை உடையவர்கள் யாரும் இரார். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களுடன் விளங்கினாலும் மூலப் பரம் பொருள் ஒன்றேயன்றோ? அப்படியானால் ஏன் ஒவ்வோர் ஊராகச் சென்று அலைய வேண்டும். வினை முடியாதவர்கள் எத்தனை இடங்கட்குச் சென்று வழிபட்டாலும் பயன் ஒன்றாகத்தான் இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் பல ஊர்கட்கும் சென்று வழிபடப் பல நாட்கள் ஆகும் அல்லவா? குறிப்பிட்ட ஊரில் சென்று வழிபடும் பொழுது இயல்பாகவே ஒருவருக்கு வினை கழியுங் காலம் வந்து விடுகிறது. உடனே அவருடைய குறை தீர்ந்து விடுகிறது. அவர் இந்த உண்மை தெரியாததால் குறிப்பிட்ட அந்த ஊரில் உள்ள தெய்வத்திற்கு மட்டுமே குறை தீர்க்கும் வன்மை உண்டு என்று நினைக்கிறார். பிறரிடம் தான் பல விடங்கள் சென்றும் தீராத தன் குறை இந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து தீர்த்து விட்டதாக பறை சாற்றுகின்றார்.

அடிப்படை உண்மை என்னவென்றால் சித்தர் பெருமக்கள் தங்கி வடிவங்களுக்குச் சக்தியைத் தருகின்ற ஆலயங்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவையாக இருக்கக் காணலாம். ஒரு சில கோவில்கள் சென்ற நாலு ஐந்து ஆண்டுகட்கு முன் கேட்பாரற்றுக் கிடந்து திடீர் என்று பெரும் புகழ் பெற்று விளங்கக் காண்கிறோம். இதன் காரணமும் மேலே கூறிய காரணந்தான் இச்சித்தர் பெருமக்கள் திடீரென்று ஏதாவது ஒரு கோவில் புகுந்து அந்த விக்ரகத்தின் மூலம் தம் சக்தியை வெளிப்படுத்தத் தொடங்கியவுடன் அக்கோயில் பிரபலம் அடைந்து விடுகிறது. இதேபோலப் பல கோவில்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தம் மதிப்பை இழந்து விடுவதும் உண்டு. அதன் காரணம் அதற்கு ஆற்றலை வழங்கிய பெருமக்கள் அதனை விட்டு வேறு இடம் போக முற்பட்டதுதான்.
கோவில்கட்கு முன்னேற்றம் பின்னேற்றம் என்று வருவது போல ஆன்மிக வழியிற் செல்ல முனைபவர்கட்கும் முன்னேற்றம் பின்னேற்றம் என்பவை உண்டு. மனிதன் மனத்துடன் பிறந்தவன். இந்த மனம் சஞ்சலமுடையது. எவ்வளவு தான் அறிவுத் தெளிவு ஏற்பட்டாலும் மனம் தன் இயல்பான சஞ்சலத்தை நீங்குவது என்பது மிகவும் கடினமான காரியம் இதனால்தான் நம் பெரியவர்கள் அறிவுத் தெளிவைவிட மன ஒருமைப்பாட்டை மிகவும் வற்புறுத்திக் கூறிச் சென்றனர்.

தியானம் செய்பவர்கள் இதை நன்கு உணர முடியும். சில நாட்களில் உட்கார்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மனம் அப்படியே அடங்கி விடுவதையும், ஒருமைப்பாட்டை அடைவதையும் அனுபவிக்க முடிகிறது. ஆனால் பல சமயங்களில் மனம் சண்டிமாடாக மாறிவிடுவதையும் உணர முடிகிறது. மனத்தை அடக்கி ஒருமுகப்படுத்தித் தியானம் செய்யும் முறை ஒன்று. இதை அல்லாமல் மற்றோர் முறையை அன்னை ஆதிபராசக்தி அருளி உள்ளாள் இம்முறையில் மனத்துடன் போராட வேண்டியதில்லை. அது போகிற போக்கில் விட்டுவிட வேண்டும். அது எங்கெங்கோ சுற்றித் திரிந்துவிட்டு மறுபடியும் ஒருமுகப்பட்டு நிற்கும் ஆனால் சிறிது நேரத்தில் மறுபடியும் சுற்றத் தொடங்கிவிடும். ஆனால் இதுபற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. ஒருமுறை மிக அழகாக அமர்ந்தவுடன் அடங்கிய மனம் இப்பொழுது கண்டிப்பு செய்கிறதே நாம் அடைந்த முன்னேற்றம் போய் இப்பொழுது பின்னேற்றம் வந்துவிட்டதோ என்று அஞ்சத் தேவையில்லை. இந்த அச்சத்தின் காரணமாக நம் நீண்ட நாட்கள் தியானத்தில் மனம் ஒருமுகப்படாத காரணத்தாலும் அன்னையைப் பற்றியே சந்தேகம் தோன்றி விடுகிறது.
உலகியல் பயன் கருதி ஓரிருமுறை அன்னையிடம் வந்தவன் தன் கருத்து நிறைவேறாத பொழுது எப்படி அன்னையைப் பற்றியே சந்தேகப்படுகிறானோ அதேபோல ஆன்மிகத்துறையில் செல்பவனும் ஐயமுற நேரிடுகிறது. அன்னை நமக்கு அருள் செய்ய மறுத்துவிட்டாளா? அல்லது அன்னை என்றே ஒரு பொருள் இருப்பது உண்மையா அல்லது நம்முடைய கற்பனைதானா என்ற முறையில் மனம் நினைக்கத் தொடங்கிவிடுகிறது. இவ்வாறு சந்தேகம் வந்தால் நாம் ஏதோ பெருந்தவறு செய்துவிட்டோம். மிகப் பெரிய பாபம் செய்துவிட்டோம். அன்னையையே சந்தேகப்படத் தொடங்கிவிட்டோம் என்று அஞ்சுவதற்கும் தேவை இல்லை.
மனத்தின் இயல்பில் இதுவும் ஒரு பகுதியாகும். அந்தச் சந்தேகம் வருவது உண்மையில் வளர்ச்சியின் அடையாளமாகும். மேலும் மேலும் தியானத்தில் தொடர்ந்து அமரும் பொழுது நாளா வட்டத்தில் இந்த சந்தேகம் கரைந்து விடுவதைக் காணலாம். இவ்வாறு சந்தேகப்பட்டுப் பிறகு ஏற்படும் உறுதி வலுவானதாய்ப் பிறர் அசைக்க முடியாததாய் நிலை பெற்று விடும்.

இம்மாதிரி நேரங்களில் “ஐயோ! கோவிலுக்கு வந்து நாம் முன்னேற்றம் அடையாமல் பின்னேற்றம் அல்லவா அடைந்துவிட்டோம்” என்று அஞ்சத் தேவை இல்லை. பின்னேற்றமே முன்னேற்றத்திற்கு அடித்தளம் என்ற உறுதியுடன் செயல்படுவது நலம்.

ஓம் சக்தி!
பக்கம்: 3-6.
நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 8 (1982).