யாரும் கவலைப்படவில்லையே?

0
174

திருமண மண்டபம் கட்டி முடித்த பிறகு அதன் மேல் முதல்மாடி ஒன்றை 100*40 அடியில் கட்ட ஆணையிட்டாள்.
மகனே! திருமணத்தில் கூடிக்களித்துச் செல்கின்ற மக்கட்கூட்டம் வாழ்விழந்து விதவைகளாக நிற்கும் சகோதரிகளைப் பற்றி என்றாவது நினைத்ததுண்டா?

எனவே அவர்கட்கு ஓரளவு வாழ்வளிக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த முதல் மாடியை ” விதவைகள் புனர்வாழ்வு இல்லமாக” ஆக்கப் போகிறேன். தையல் இயந்திரங்கள் சிலவற்றையும், பிளாஸ்டிக் கூடைகள் முதலியன பின்னுகின்ற கருவிகளையும் இதில் வாங்கிப் போட்டு அவர்கள் தம் கைகளை நம்பி வாழ வழி வகுக்கப் போகிறேன்” எனக்கூறினாள் இப்பெருமாட்டி.

யாருக்கு மருத்துவமனை?

இந்த மண்டபத்திற்கு அடுத்த படியாக மருத்துவமனையும், தொழில் பயிற்சிப் பள்ளியும் அடுத்தடுத்து தோன்ற உள்ளன. மருத்துவமனை கட்ட வேண்டும் என்று கூற வந்த கருணைக்கடலாம் இவ்வன்னை, “மகனே! மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் முக்கிய இடம்பெறும்!

வண்டி வைத்துக்கொண்டு வரக்கூடிய வசதி படைத்தவர்கள் தெற்கே அச்சிறுபாக்கத்திற்கோ அன்றி வடக்கே மதுராந்தகத்திற்கோ சென்றுவிட வாய்ப்புண்டு.

வலி கண்டவுடன் எங்கும் மருத்துவமனையை நாடிச் செல்ல வாய்ப்பு இல்லாமல் என்னை நினைத்து, அம்மா! என்று கதறுகின்றனவர்கள் இருக்கும் இடத்தை உங்களிடம் நான் கூறுவேன்.

நீங்கள் நோயாளியை அழைத்து வரும் ஆம்புலன்ஸ் வண்டியை எடுத்துச் சென்று வலியால் வாடும் அத்தாயை அழைத்து வந்து இலவச மருத்துவஞ் செய்து, பின்னர் இலவசமாக மருந்தும் தந்து வீட்டில் மறுபடியும் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கூறினாள்.

உண்டி கொடுத்தோர்:

சோறு போடுதல், துணி வழங்கல், பள்ளிச் சிறார்க்கு உடை வழங்கல், புத்தகம், எழுத்துப்பலகை வழங்கல் என்பன இந்த அன்னை வருடத்தில் இருபது முறைக்கும் மேலாக செய்து வருகின்ற அறச்செயல்களாகும்.

எந்த விழாவாயினும் அன்னதானம் என்பது விழாவை விட முக்கியமான பணியாகும். ஆடிப்பூரம், நவராத்திரி, சித்திரா பௌர்ணமி, தைப்பூசம் போன்ற விழாக்களில் அன்னதானத்துடன் உடை வழங்கலும் தவிர்க்க முடியாத அருட்கொடையாகும்.