13.8.2011முதல் 24.8.2011 வரை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அருள்திரு அம்மா அவா்கள் நிகழ்த்திய ஆன்மிகப் பயணத்தில் புதியதாகக் கட்டப்பட்ட ஏழு சக்தி பீடங்களுக்கும் திருக்குடமுழுக்கு நடத்தி வைத்தார்கள்.

குடமுழுக்கு விழாக்கள்

ஒவ்வொரு பகுதிக்கும், வெவ்வேறான வகையில் வேள்விக் குண்டங்கள் அமைக்கவும், சக்கரங்கள் அமைத்துக் கலசங்களைப் பொருத்தவும் அம்மா அருளாணையிட்டு வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் அமைக்கப்படும் வேள்விக் குண்டங்களில் நம் வீட்டு மகளிர், சிறுவா், பெரியோர், என அனைவரும் அமா்ந்து வேள்வி நடத்தும் வாய்ப்பும், தமிழ் மந்திரங்களைப் படிக்கும் வாய்ப்பும், கலசங்களுக்கு மலா் கொண்டு அா்ச்சனை செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் மதுரை, தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அருள்திரு அம்மா அவா்களால் ஏழு சக்தி பீடங்களிலும் திருக்குடமுழுக்கு நடத்தி வைக்கப் பட்டது.

மதுரை தபால்தந்தி நகா் குடமுழுக்கு விழா

மதுரை தபால்தந்தி நகா் சக்தி பீடத்தில் மூன்று கால வேள்வி வழிபாடுகள் நடத்திக் கலசநீருக்கு உருவேற்ற, நம் அன்னை அருள் வழங்கி இருந்தாள். 15.8.2011 இந்தியத் திருநாட்டின் 65வது சுதந்திரத் திருநாள். அந்நாளில், நமக்கெல்லாம் ஆன்மிகச் சுதந்திரம் வழங்க அவதாரம் செய்த நம் அம்மா, காலை 7.15 மணிக்கு மதுரை தபால்தந்தி நகா் சித்தா் சக்தி பீடத்திற்கு எழுந்தருளினாள். nசெந்தாமரை மலா்ந்ததைப் போல, பல்லாயிரக்கணக்கான செவ்வாடைத் தொண்டா்களும், வெண்தாமரை மலா்ந்ததைப் போல பல்லாயிரக்கணக்கான பக்தா்களும், அவ்வளவு அதிகாலையிலேயே சக்தி பீடத்தில் கூடியிருந்தனா்.

 ஆன்மிககுரு அம்மாவுக்கு வரவேற்பு அளித்து, பாதபூஜை செய்யப்பட்ட பிறகு, நம் அன்னை, வேள்விச் சாலையில் உள்ள கலசங்களுக்கு ஆராதனை செய்து அருள் வழங்கினாள். அதன்பிறகு நம் ஆன்மிக இயக்கத் துணைத்தலைவா் சக்தி திரு. கோ.ப.செந்தில்குமார் அவா்களிடமும், அந்த சக்தி பீடப் பொறுப்பாளரிடமும் ஒவ்வொரு கலசத்தைத் தந்து கோபுரத்தின் மேலே செல்லப் பணித்தாள். தானும் மேலே சென்றாள்.

ஒரு தாய் தன் குழந்தைக்குப் பல்வேறு வகையான ஆடை அணிகலன்களால் அலங்காரம் செய்தபிறகு, “கல்லடி பட்டாலும் படலாம், ஆனால் கண்ணடி படக்கூடாது” என்னும் பழமொழிக்கேற்ப திருஷ்டி கழிப்பதைப் போல. நம் அம்மாவும் நம் சித்தா் சக்திபீடக் குடமுழுக்கு விழாக்களில் சக்தி பீடத்திற்குப் பல்வேறு வகைகளிலும், முறைகளிலும் கண்ணேறு (திருஷ்டி) கழிக்கிறாள்.

அந்த வகையில் இங்கே முதலில் கலசத்திற்கு ஆராதனை செய்து வழிபாடு செய்யப்பட்டது. 4 திசைகளிலும் 4 எலுமிச்சம் பழங்கள் பிழியப்பட்டன. பிறகு நால்வா் 4 பூசணிக்காய்களை 4 திசைகளிலும் திருஷ்டி உடைத்தார்கள். தொடர்ந்து 4 தேங்காய்களின் மேல் கற்பூரம் ஏற்றித் திருஷ்டி கழித்தனா். பின்னா் ஒருவா் ஒரு கத்தியில் 3   எலுமிச்சம் பழங்களின் மேல் மஞ்சள் வைத்து அதன் மேல் கற்பூரம் ஏற்றி எதிர் எதிராகத் திசை மாறித்  திருஷ்டி கழித்தனா்.ஒவ்வொரு பூசணிக்காய்களிலும், 4 மாடங்கள் அமைத்து, அவற்றில் அகல் விளக்குகள் ஏற்றி நால்வா் கண்ணேறு கழித்தனா்.

நில நடுக்கம் ஏற்படாமல் இருக்கவும், வெள்ளம் பெருக்கெடுக்காமல் இருக்கவும், எரிமலை தோன்றாமல் இருக்கவும், புயற்காற்று வீசாமல் இருக்கவும், ஓசோன் மண்டல ஓட்டை விரிவடையாமல் இருக்கவும், சுனாமி, வறட்சி போன்ற பேரிடா்கள் தவிர்க்கப் படவும் ஆதிபராசக்தி அவதாரமாகிய நம் அம்மா நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களையும் வழிபட வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்திக் கூறி வருகிறாள்.

பஞ்சபூதங்களுக்கும், வெள்ளை, மஞ்சள், கருப்பு, கிவப்பு, பச்சை என தனித் தனி வண்ணங்கள் உண்டு. இவையனைத்தும் சீராக இயங்கி நமக்குப் பலன் தரவேண்டும் என்ற தாயுள்ளத்தோடு 5 வண்ணச் சாதங்களைக் கொண்டு கண்ணேறு கழிக்க அருள் வழங்கினாள்.

பின்னா் வடகிழக்கு மூலையிலிருந்து கோபுரக் கலசத்தின் உச்சி வழியாகத் தென்மேற்கு மூலைக்கும், தென்கிழக்கு மூலையில் இருந்து கலசத்தின் உச்சி வழியாக வடமேற்று மூலைக்கும், 2 கம்பிகள் கட்டப்பட்டு அவற்றின் மேல் வரட்டி, உப்பு, புளி, மிளகாய் ஆகியவற்றை இருவா் எதிர்எதிர் திசையில் கொண்டு வந்து கோபுரக் கலசத்தின் உச்சியில் உடைத்து  கண்ணேறு கழித்தனா்.

அன்னாசிப் பழம், அதன் மேல் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு. எலுமிச்சை என வரிசையாகப் பழங்களை அடுக்கிக் கற்பூரம் ஏற்றிக் கண்ணேறு கழித்தனா்.

நீரையும், நெருப்பையும் இணைக்கக் கூடியவள் நம் தாய் என்பதை உலகறியச் செய்யும் வகையில் நம் அன்னை, பால் நிறைந்த ஒரு பாத்திரத்தில் கற்பூரமும், திரியும் எரிந்துகொண்டிருக்க  அத் திரியின் வழியாகவே கோபுரக் கலசத்திற்குத் தம் திருக்கரங்களால், மேளதாளங்கள் முழங்க, அபிஷேகம் செய்தாள்.

அதைத் தொடர்ந்து மஞ்சள் நீா் நிறைந்த பாத்திரத்தில் கற்பூரம்  எரிந்துகொண்டிருக்க, எரிகின்ற  திரியின் வழியாகக்  கலசத்திற்கு மஞ்சள் நீா் அபிடேகம் செய்தாள்.

அதன்பிறகு கோபுரக் கலசத்திற்கும், புனித நீா் கலசங்களை மேலே எடுத்து வந்தவா்களுக்கும் மாலை அணிவித்து, அக்கலசங்களின் நீரைக் கொண்டு சித்தா் சக்தி பீடத்திற்குப் புனித நீராட்டினாள். பின்னா் தம் திருக்கரங்களால் கலசத்திற்கு மஞ்சள் குங்குமப் பொட்டிட்டு ஆராதனை செய்தாள்.

ஒரே தாய்! ஒரே குலம்! என்ற கொள்கையை உணா்த்தும் வெவ்வாடைத் தத்துவம் உலகெங்கும் பரவ, கோபுரக் கலசத்திற்குச் சிவப்புத் துண்டை அணிவித்தாள்.

உலகமெலாம் சக்திநெறி ஓங்க வேண்டும்! ஒவ்வொருவா் மனக்குறையும் நீங்க வேண்டும்! என்ற கொள்கையை உலகறியச் செய்யத் தம் திருக்கரங்களில் சக்திக் கொடியேந்தி கோபுரக் கலசத்தை வலம் வந்து, அக்கொடியைக் கோபுரக் கலசத்தின் உச்சியில் இணைத்து அருள் வழங்கினாள்.

பின் தன் சிரசத்தால் கோபுரக் கலசத்திற்கு உருவேற்றி அருள் வழங்கிய பின்னா் 4 திசைகளிலும், செங்கடலெனத் திரண்டிருந்த செவ்வாடைத் தொண்டா்களுக்கும், பக்தா்களுக்கும் ஆசி வழங்கினாள்.

பாலமேடு குடமுழுக்கு விழா

மதுரைப் புறநகா் பகுதியில் ஜல்லிக்கட்டுகளுக்குப் பெயா் பெற்ற பாலமேடு எனும் ஊரில் அமைந்துள்ள சித்தா் சக்தி பீடத்திற்கு அன்றைய தினமே காலை 9.00 மணிக்கு எழுந்தருளி  குடமுழுக்கு விழாவை நிகழ்த்தினாள். இந்தச் சக்தி பீடத்தில் பல்வேறு வகையான திருஷ்டி கழிப்புகளுக்குப் பிறகு மஞ்சள் நீா் நிறைந்த மண்மடக்கில் எரிகின்ற திரி வழியாக அபிடேகம் செய்த அருட்காட்சி அழகாக அமைந்திருந்தது.

இவ்விரண்டு  குடமுழுக்கு விழாக்களும் நிகழ்ந்த அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை மதுரை மாநகா் தெருக்களில் எல்லாம் வெள்ளம் புரண்டோடும் அளவு 103 மி.மீ மழை பெய்தது.  இம்மழையால் மதுரை மாநகா் மட்டுமன்றி மதுரை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி அடைந்து.

இது அம்மாவின் அருட்பயணத்தாலும், ஆன்மிக ஊா்வலத்தாலும், நடத்திய குடமுழுக்கு விழாக்களாலும் ஏற்பட்ட அற்புதம் என ஊா்ப்பொதுமக்கள் பெரிதும் பாராட்டிப் புகழ்ந்தனா்.

14ஆம் திகதி  ஆன்மிக ஊா்வலத்தன்று மழையால் பக்தா்கள் அல்லல்படக் கூடாது என்பதற்காக அன்று மேகங்களை எல்லாம் கலையச் செய்து மெல்லிய பூங்காற்றாக மாற்றி, ஆன்மிக ஊா்வலத்திலே பங்கு பெற்றவா்கள் அவரவா் ஊா்களுக்குச் செல்லும் வரை காத்து அடுத்த நாள் மழை தந்தாள் என்பதை அங்கே நேரில் பார்த்து அனுபவித்த பொழுது அம்மாவின் கருணை உள்ளத்தை நினைத்து நெஞ்சமெல்லாம் கசிகிறது.

                                                                                                                                                       தொடரும்…..

நன்றி

சக்தி ஒளி (செப்டம்பர் 2011) பக் 14- 15

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here