ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்; அடைக்க முடியாதவள்:

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அருள்வாக்குச் சொல்பவள் சிவசக்தி அல்லள். இவள் எல்லாம் வல்ல பரம்பொருள். இவள் சகுணப் பிரம்மம் அல்ல. நிர்க்குணப் பிரம்மம்!

இதனையும் ஒருமுறை அன்னை குறிப்பால் தெரிவித்த சம்பவம் ஒன்று உண்டு.

இன்று கருவறையில் ஒயிலாக அமர்ந்து அருள்பாலிக்கிறாளே அம்மா……?

இவளது விக்கிரகம் கரிக்கோலமாகப் புறப்பட்டு ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்தது. ஜலவாசம், தான்ய வாசம், புஷ்ப வாசம் எல்லாம் முடிந்த நிலையில் ஒரு கார்த்திகைப் பௌர்ணமியன்று (25.11.1977) விக்கிரகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அன்று விடியற்காலை வேள்விப் பூசை நடத்தப்பட்டது. அந்த வேள்விக் குண்டத்தின் அருகே அமர்ந்து வேள்விப் பூசை செய்யும் பேற்றை அரிசன வகுப்பைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கு அன்னை வழங்கினாள்.

இந்து சமய வரலாற்றிலேயே – ஏன் இந்த நாட்டின் திருக்கோயில் வரலாற்றிலேயே காண முடியாத – கேட்டறியாத ஓர் ஆன்மிகப் புரட்சியை அன்னை அன்றே அமைதியாக – ஆரவாரம் இல்லாமல் தொடங்கி வைத்தாள்.

கருவறையில் ஒரு வேள்வி! கருவறைக்கு எதிரே இருந்த முன் மண்டபத்திலும் ஒரு வேள்வி! என இரண்டு வேள்விக் குண்டங்கள் அமைத்து வேள்விப் பூசை நடத்தப்பட்டது.

தமிழ் மந்திரங்களோடு நடைபெற்ற அந்த வேள்வியை அன்னையே முன்னின்று மேற்பார்வையிட்டாள். வேள்விக்கு எஜமானர் என்று அப்போது யாருமே இல்லை. வேத விற்பன்னர்கள் இல்லை. ஆகம சாத்திரம் வல்ல பண்டிதர்கள் இல்லை. வேத மந்திர கோஷங்கள் இல்லை. ஏதும் அறியாத அடிமட்டத் தொண்டர்களை வைத்துச் சொல்லிக் கொடுத்து அந்த மாபெரும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டாள்.

வேள்வி நடைபெற்றபோது முடிகிற தருணத்தில் நல்ல மழை பிடித்துக் கொண்டது. நூற்றுக் கணக்கான பக்தர்களும் சில செவ்வாடைத் தொண்டர்களுமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இடவசதியோ குறைவு. மழையில் ஒதுங்கவோ இடம் இல்லை!

தாயே! ஆர அமர உட்கார்ந்து இவற்றையெல்லாம் தரிசிக்க முடியாதபடி இந்த மழை வந்து கெடுத்து விட்டதே! என்று தொண்டர்கள் அன்னையிடம் கூறி முறையிட்டனர்.

அன்னை அன்று சொன்னாள்.

“மகனே! இந்த நிகழ்ச்சிக்குத் தேவர்கள் எல்லாம் வந்தனர். தெய்வங்கள் எல்லாம் வந்தன. சித்தர்கள் எல்லாம் வந்தனர். அவர்கள் ஆனந்தத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை! அதனால்தான் இந்த மழை! இதோ நிறுத்தி விடுகிறேன் மகனே! என்று சொல்லியவாறே தலையை ஒருக்களித்து வானத்தை நோக்கி ஒரு பார்வை பார்த்தாள்! என்ன அதிசயம் அந்தப் பார்வையினாலேயே சட்டென்று மழை நின்றுவிட்டது!

அன்றைய நாள் முழுவதும் எங்களிடையே இதுவே பேச்சாக இருந்தது.

மறுநாள் முக்கியப் பொறுப்பாளர் ஒருவர் வந்தார். விக்கிரகம் நிறுவப்பட்ட அந்தச் சமயத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோமே என வருந்தினார்.

கும்பாபிடேகமே நடக்கவில்லை.. அதற்குள் அலங்காரம் எல்லாம் அம்மாவுக்கு செய்கிறீர்களே….. என்று கருவறைத் தொண்டர்களிடம் கேட்டார்.

எங்களுக்கு என்ன தெரியும்? எல்லாம் அம்மாவே இருந்து நடத்திக் கொண்டாள். அவள் உத்தரவுப் படித்தான் செய்கிறோம். அம்மாவிடமே கேளுங்கள்! என்றார்கள் தொண்டர்கள்.

அது சரி! கும்பாபிடேகம்தான் இல்லை. விக்கிரகப் பிரதிஷ்டையின்போது பீடத்தின் அடியில் நவரத்தினம் வைக்க வேண்டுமே..?

யந்திரத் தகடு வைக்க வேண்டுமே…….? எல்லாம் வைக்க வேண்டுமே….. வைத்தீர்களா……? என்று கேட்டார்.

நவரத்தினங்களுக்குப் பதிலாக நவதானியம் வைக்கும்படி அம்மா சொல்லிவிட்டாள். யந்திரத் தகடு பற்றி அம்மா எதுவும் சொல்லவில்லை என்றார்கள்.

அது கேட்டு அவருக்கு மேலும் வியப்பாகிவிட்டது. சரி! நான் போய் யந்திரத் தகடு செய்து எடுத்து வரலாம் என்று பார்க்கிறேன்! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் அவ்வாறு குறைபட்டுக் கொண்டதைப் பற்றித் தொண்டர்கள் அன்னையிடம் முறையிட்டனர்.

அன்னை அப்போது சுயம்பு அருகில் நின்றிருந்தாள்.

தன் கையாலேயே கற்பூர ஆரத்தியை விக்கிரகத்துக்கு முன்பு காட்டினாள். அப்பொழுது அன்னையின் கையிலிருந்து கற்பூரம் சுயம்புவின்மேல் விழுந்தது. உடனே அங்கிருந்த பச்சைப் பசேல் என்றிருந்த வேப்பிலைக் கொத்து குப்பென்று தீப்பிடித்து எரிந்தது. கருவறையிலிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியும் பரவசமும் அடைந்தார்கள். பச்சை வேப்பிலை பற்றி எரிகிறதே..

என்ன அதிசயம்……..!

அப்போது பஞ்ச பாத்திரத்திலிருந்த நீரை அதன்மேல் தெளித்தாள். அடுத்த கணம் கரிந்து போயிருந்த அந்த வேப்பிலையெல்லாம் இப்போது பச்சைப் பசேல் என்று ஆகிவிட்டன.

அந்த இலைகளைக் கிளரச் சொல்லி, பாதி கரிந்தும், பாதி பச்சையாகவும் ஒரே ஒரு வேப்பிலை இருக்கும்! அதை எடு! என்றாள்.

அவ்வாறு கிளரப்பட்டபோது ஒரே ஒரு வேப்பிலை பாதி கரிந்தும் பாதி பச்சையாகவும் இருந்தது.

“மகனே! இதுதான் எனக்குச் சக்கரம்! இதுதான் எனக்கு எந்திரம்! இதனைச் சிலைக்கும் பீடத்திற்கும் நடுவே வைத்துவிடு! எனக்குச் சக்கரம் போட உலகில் எவனும் இன்னும் பிறக்கவில்லை மகனே!” என்றாள்.

இவ்வாறு அன்னையின் சிலைக்கு அடியில் அந்த வேப்பிலையே சக்கரமாக – எந்திரத் தகடாக வைக்கப்பட்டது.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு தேவதைக்கும் குறிப்பிட்ட மந்திரங்கள் உண்டு! எந்திரம் உண்டு! சக்கரங்கள் உண்டு.

கோயில் கும்பாபிடேகத்தின்போது அந்தச் சக்கரத்தையும், நவரத்தினத்தினங்களையும் பீடத்தின் அடியில் வைப்பது வழக்கம்.

சக்கரங்களிலேயே மிக மிக உன்னதமானது, மிக மிக உயர்ந்தது ஸ்ரீ சக்கரம்! எல்லாத் தெய்வங்களும், எல்லாத் தேவதைகளும் அதில் அடக்கம். அது கருதியே அதனைச் “சக்கர ராஜம்” என்று குறிப்பிடுவர். அண்டமும் பிண்டமும் அதில் அடங்கும். பல தெய்வ ரகசிங்களையும் உள்ளடக்கியது அந்த ஸ்ரீ சக்கரம்! அப்படியிருக்க.. என்னைச் சக்கரத்தில் அடைக்க உலகில் எவனும் இன்னும் பிறக்கவில்லை என்கிறாளே…….

அப்படியானால்…… இவள் ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்! ஸ்ரீ சக்கரத்திலும் அடைக்க முடியாதவள் என்றுதானே அர்த்தம்….?

தமிழில் ஏன் அருள்வாக்கு?

இவளே எல்லாம் வல்ல பரம்பொருள்! இவள் மதம் கடந்தவள். சாதி, மதம், இனம், மொழி என்ற எல்லை கடந்தவள்.

அப்படி இருக்க பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தி தமிழில் ஏன் அருள்வாக்கு அளிக்கிறாள்…….?

அன்னையே இதற்கு ஒரு காரணம் சொன்னாள்.

“தாய்ப்பாசம் உள்ள மண் தமிழ் மண்! இயற்கையை நம்புகிற மண் தமிழ் மண்! அதனால்தான் இங்குத் தமிழில் அருள்வாக்கு அளிக்கிறேன்!” என்றாள்.

எனக்கும், சைவ சித்தாந்தம் படித்த ஒருவர்க்கும் ஒருநாள் அன்னையின் அருள்வாக்கு பற்றி வாதம் நடந்தது. சென்னை பெரம்பூரில் ஒரு மாலைப்பொழுது நடந்தது.

சிலநாள் கழித்து அன்னை அருள்வாக்கில், அது பற்றிக் குறிப்பிடும்போது, “Men may come and Men may go!” என்ற அர்த்தம் கொண்ட 13 மொழிகளில் உள்ள வாக்கியங்களைச் சொல்லிக் காட்டினாள்.

நரிக்குறவன் ஒருவனிடம் அவன் மொழியிலேயே அருள்வாக்கு அளித்தாள்.

ஜப்பான் நாட்டுக்காரர் ஒருவரிடம் ஜப்பான் மொழியில் பேசினாள்.

தெய்வங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொள்ளும் ஒரு பாஷை உண்டாம்! ஒரு பெண்மணிக்கு அந்த பாஷையில் அருள்வாக்கு அளித்தாள்.

இந்தக் கலியுகத்தில் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி என்னும் பரம்பொருளே அவதாரமாகி வந்து விளையாடுகிறாள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் விஷ்ணுவின் வெளிப்பாடுகள்.

அருள்திரு அடிகளார் ஆதிபராசக்தி அவதாரம்.

இது அம்ச அவதாரமா..? பூர்ண அவதாரமா…..? என்று குறிப்பிட்டுச் சொல்லும் ஞானம் எமக்கு இல்லை….

ஒவ்வொரு அவதாரத்துக்கும் குறிப்பிட்ட நோக்கங்கள் இருக்கும். இந்த அவதாரத்திற்கு மூன்று நோக்கங்கள் உண்டு.

1. தெய்வ நம்பிக்கை, தெய்வ பக்தி, ஆன்மிக உணர்வு ஊட்டுவது.

2. அடித்தள மக்களை ஆன்மிக வழியில் உயர்த்துவது.

3. பெண் குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துவது

இங்கே மதம் காலம் காலமாகச் சூத்திரர்களையும், பெண்ணினத்தையும் ஒதுக்கி வைத்தது என்ற பழிச் சொல் ஒன்று உண்டு!

காலம் காலமாக இருந்து வந்த இந்தக் களங்கத்தை ஆதிபராசக்தி அவதாரம் துடைத்து எறிந்து விட்டது.

தொடரும்…………
சக்தி ஒளி – அக்டோபர், 2008 பக்கம் (43 – 47).