ஓம் சக்தி!  ஆதிபராசக்தி! தீபாவளிப் பண்டிகை வருடா வருடம் வருகிறது. அந்த நாளில் பெற்றவர்களின் ஆசியும் பெரியோர்களின் ஆசியும் பெறுவது நல்லது. ஒவ்வொரு மனிதனும் தன் முன்னேற்றத்திற்கு நேர்மையாக வழி வகுத்து உண்மையான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களிடம் அன்பு, பண்பு, பாசத்தைக் காட்டி மனித நேயத்தை வளர்த்து உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பாக ஒவ்வொருவருக்கும் அமையும் விழா தீபாவளி விழா. உண்மையான உழைப்பும், நேர்மையான பொருள் ஈட்டலும் மனித நேயத்துடன் அவற்றை மற்றவர்க்கும் பயன்படச் செய்யும் உண்மையான தர்மமும் அந்தக் காலத்தில் இருந்தது. இப்போது உண்மை ஊமையாகிவிட்டது. உழைப்பு ஊனமாகிவிட்டது. கள்ளம் உள்ளம் புகுந்தது. கபடம் நாடகம் ஆடுகிறது. கருணை காணாமல் போனது. பாசம் வேஷமாகிவிட்டது. இதையெல்லாம் கண்காணிக்கும் இயற்கை பொங்குகிறது. எல்லா அழிவுகளும் சொல்லாமல் வருகின்றன. சொல்லாலும் வருகின்றன. ஆரம்ப காலத்தில் இயற்கையே வாழ்வின் மையமாக இருந்தது. மனிதனும் இயற்கையை வணங்கினான். பிரதிபலன் பாராத தாய்போல அதை மதித்தான். தன்னைப் படைத்த தன் தாய் தந்தையை வணங்கினான். தன்னை யாரென்று தனக்குக் காட்டிய குருவை வணங்கினான். குருவின் வழியாக தெய்வத்தை வணங்கினான். தெய்வத்தின் அருளால் மெய்ஞானம் பெற்றான். காலம் மாறியது. காட்சி மாறியது. விஞ்ஞானத்தின் மேல் மோகம் வந்தது. மெஞ்ஞானத்தை மெல்ல மெல்ல விட்டுவிட்டான். விஞ்ஞானத்தின் மேல் வீரியமாய் மோகம் கொண்டான். விஞ்ஞானத்தால் எல்லாம் கிடைத்தது. ஆனால் உணவு கிடைக்க இயற்கையின் ஒத்துழைப்பு வேண்டுமே….! அதனால் உணவுக்கு ஆதாரம் இயற்கை என்று உணர்ந்தான். அந்த உணர்வுதான் மெஞ்ஞானத்தின் அடிப்படை என்றும் உணர்ந்தான். இப்போது மெஞ்ஞானம் நோக்கி நகர்ந்து வருகிறான். முன்பெல்லாம் விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தால் அப்பா நல்லா இருக்காங்களா? அம்மா நல்லா இருக்காங்களா? பிள்ளைங்கள் நல்லா இருக்காங்களா? என்ன படிக்கிறாங்க? எப்போது திருமணம் என்று விசாரிப்பார்கள். இப்போதோ விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தால் அங்கே மழை உண்டா? வெய்யில் எப்படி அடிக்குது? உங்க ஊர்ல கடல் உள்வாங்கிச்சாமே? உங்க பக்கம் வந்த புகம்பத்துல உங்க வீடும் ஆடுச்சா? என்றெல்லாம் முதலில் விசாரிக்கும் நிலை வந்துவிட்டது. மனிதன் மனம் மாறி, மனித நேயம் மாறி, தர்மம் மாறி நடப்பதால் பருவத்தே வந்த கால மாற்றங்களும் இயற்கைச் சீற்றங்களாக மாறி மாறி வருகின்றன. மாரியும் காலநிலை மாறி மாறிப் பெய்கிறது. அவ்வப்போது பொய்க்கிறது. இயற்கை வழிபாட்டை நாம் பலகாலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன் உண்மையை பறைசாற்றும்படி இங்கு விழாக்கள் எடுக்கிறோம். இத்தனைக்குப் பிறகும் பொய்யான வாழ்வு பற்றிய சிந்தனை போகவில்லை. மெஞ்ஞான ஞானம் பற்றிய சிந்தனை போதவில்லை. தொடரும்…    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here