மனிதன் காட்டில் வாழும்பொழுது மிருகமும் மனிதனும் ஒன்றாக இருந்து செயல்படும்போது ஒற்றுமை இருந்தது. அதைவிட்டு மனிதன் நாட்டுக்கு வந்த பிறகு விஞ்ஞானத்துறை என்று ஏற்பட்டுவிட்டது. விஞ்ஞானத்தால் என்ன கண்டோம்? விஞ்ஞானம் ஒரு பாகம் என்றால் அதில் கால் பாகம் தான் நன்மை தந்தது. முக்கால் பாகம் தன்னைத்தானே அழித்துக் கொள்கிற தீமைகளை

உருவாக்கிவிட்டது. செல்லும், தொலைக்காட்சியும் சில நேரங்களில் தொல்லையும் கொடுக்கிறது. சோதனையும் கொடுக்கிறது. நன்மையும் கொடுக்கிறது. அதிலும் தீமை தருகிறது.

விஞ்ஞானம் ஒரு அளவிற்குத் தேவைதான். அது அளவு மீறிப்போகிற போது, பணம் என்ற ஒரு சேமிப்பை செலவும் செய்து, பணம் என்ற உழைப்பையும் வீணடித்து, பணம் இருக்கிறது என்ற சந்தோஷத்தையும் இழந்து உள்ளத்தை அழித்துக் கொள்ளும் நிலை உள்ளது.

அதே போன்று விஞ்ஞானத்துறையிலே புதுப்புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் பொழுது, புதுப்புது துறைகளை ஏற்படுத்தும் பொழுது, புதுப்புது வலிகளும், புதுப்புது நோய்களும் வருகின்றன. இந்த நோய்க்கு என்ன மருந்து என்று கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் திணறுகிறார்கள்.

தியானம் என்பதும் யோகா என்பதும் எல்லாம் இயற்கை உடைய நிழல்தான். அது ஒன்று கூடிச் செயல்படும் பொழுது, வருஷங்கள் மாறினாலும் கூட, நாட்கள் மாறினாலும் கூட, எண்ணங்கள் மாறினாலும் கூட இயற்கை மாறுவது கிடையாது.

இயற்கை மாறாமல் இருப்பதால் ஜந்து பூதங்களும் ஒரே நிலையில் இருக்கின்றன. மனம் ஒரே நிலையில் இருக்கும் போது மனித நேயமும் மாறுவது கிடையாது. மனிதன் எப்பொழுது மனம் மாறினானோ, திசை மாறினானோ, பாசம் மாறினானோ, அப்போதே மனித நேயம் மாறிவிட்டது. மனிதன் நிலை மாறும் பொழுது இயற்கை சீற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அழிவை ஏற்படுத்துகிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் வெய்யில் அடிக்கிறது. வெய்யில் அடிக்கிற காலத்திலே மழை பெய்கிறது. எதற்கும் உபயோகம் இல்லாமல் போகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் நிழல் உண்டு. அது கூடவே தொடர்ந்து வருகிறது. தொல்லை கொடுக்காமல் அமைதியோடு இருக்கிறது. நீங்கள் செய்யும் தொல்லைகளையும் நிழல் கண்காணித்து வருகிறது.

உன்னுடைய உயிர் கூட இயற்கை வழிபாட்டால் உண்டாக்கப்பட்ட உயிர்தான். ஒரு பொம்மலாட்டக்காரன் பொம்மைகளை ஆட்டும்போது கூடவே அதற்கு பெண் குரலுக்கு பெண் குரல் கொடுக்கிறான். ஆண் குரலுக்கு ஆண் குரல் கொடுக்கிறான். அழுகைக்கு அழுகைக் குரல் கொடுக்கிறான். ஆனால் செய்வதெல்லாம் ஒரே மனிதன்தான்.

அதுபோல ஒரே உயிர்தான் பல உள்ளங்களாகவும் பல எண்ணங்களாகவும் மாறி மாறி வருகிறது. அப்படி மாறி வருவதை நிலையாக ஒருநிலைப்படுத்துவது தான் உண்மை. அதை ஒருநிலைப்படுத்துவதுதான் பிறவி என்ற நிலையில் மனிதனுக்குத் தேவை.

மனிதன் எத்தனையோ வருஷம் பிறந்தான். எத்தனையோ வருஷம் வளர்ந்தான். தரும சிந்தனைப் புத்தகங்களும், நீதித்துறை புத்தகங்களும், நன்னெறிப் புத்தகங்களும் வந்தன. அதை எல்லாம் ஒரு புறம் கட்டி வைத்துவிட்டு தம்முடைய மனநிலையில் ஏற்படுகிற மாற்றங்கள் போலவே கால் போன போக்கில் வாழ ஆரம்பித்தான். அதன் விளைவாக காலம் போகிற போக்கிலே காலன்தான் வந்தான்.

காலம் என்பது எமன். எந்த அளவிற்கு விஞ்ஞானத்தில் வளர்கிறாயோ, அந்த அளவிற்கு அழிவு ஏற்படுகிறது. எப்பொழுது எது நடக்கும் என்பது தெரிவதில்லை. கடல் உள்வாங்குகிறது என்றால் அது அழிவுக்குத்தான். புலி பின்வாங்குகிறது என்றால் அது பாயும் வேகத்திற்கு அறிகுறி.

நாவிற்குள் இருக்கும் உணவை ருசி பார்க்கும் பொழுது, அனைத்துப் பொருள்களும் நாவிற்குள் இருக்கும் பொழுது இது திராட்சை, இது ஆப்பிள், இது கசப்பு, இது வேப்பிலை, இது கரும்பு, இது இனிப்பு என்று நாவிலே ருசி பிரித்துப் பிரித்துக் காண்பிக்கிறது. அது உள்ளே சென்ற பிறகு அது ருசி காண்பது கிடையாது.

உணவு உண்ணும்போது ருசி தெரிகிறது. அதே உணவு இரப்பையில் உள்ளே சென்றபின் நல்ல உணவுகள் இரப்பையில் இருந்து சத்துக்களாக மாறி நரம்புகளுக்கும் உடல் உறுப்புகளுக்கும் தொடர்ந்து உள்ளங்களுக்கும் நல்லதைக் கொடுக்கிறது. ஆகாத உணவு, ஆகாத நோயைக் கொடுக்கிறது.

அதுபோல நம் எண்ணங்களும் உள்ளே சென்று நல்லவை நல்ல செயல்களாகவும் தீயவை தீய செயல்களாகவும் மாறி நல்ல அல்லது தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

வாழ்க்கையில் கசப்பு, இனிப்பு, பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்று இருக்கும்பொழுது, வாழ்க்கையில் பிறந்து வரும் போது என்ன கொண்டு வந்தோம், என்ன தொண்டு செய்தோம், என்ன கொண்டு போவோம் என்று பார்க்க வேண்டும்.

தர்ம சிந்தனைகள் இருக்கும்பொழுது அள்ளிக் கொடுக்கிறோம். அப்படி அள்ளி அள்ளிக் கொடுப்பதால் மட்டுமே பலன் வந்து விடாது. கொடுப்பதை சந்தோஷமாகக் கொடுத்து, வழிகாட்டுதலிலும், பேசும் அன்பிலும், எந்த அளவிற்கு பணிவோடு, கனிவோடு செய்கிறோமோ அந்த அளவிற்குத்தான் பலன் பெருகும்.

இப்பொழுது சிறியவர்கள் துளிர்க்கின்ற 5 வயதிலும் 10 வயதிலும் இருக்கும் பொழுது வேகம் இருக்கத்தான் செய்யும். அந்த வேகத்திற்குத் தகுந்தாற் போன்று, எது அதற்கு பிடிக்கிறதோ, எது அதற்கு கிடைக்கிறதோ அந்த வேகத்திலேயே அது வளர்கிறது. அதற்கு தவறான பாதை தெரியும் பொழுது அந்தத் திசையில் செல்கிறது. பொது நலத்தில் நல்ல கருத்து அமையும் பொழுது நல்ல விளைவாக அமைகிறது.

பொதுநலத்தில் சுயநலம் கலக்கும் பொழுது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அது எப்படி கெட்டுப் போகிறதோ, அது போல் அதுவும் கெட்டுப் போகிறது. இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும். இன்பமான தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இனிப்பான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன என்று உணர்வதில்லை. அதன் விளைவு இனிப்பான சர்க்கரை வியாதி தான் எங்கு பார்த்தாலும் இருக்கிறது.

அது ஏன் வருகிறது? என்ன காரணம்? உழைப்பில்லாததாலும், ஊதியத்திற்கேற்ற உழைப்பு இல்லாததாலும், உண்மையான உழைப்பு இல்லாததாலும் வருகிறது. உயர்வுக்காகப் பாடுபடும் பொழுது, தாழ்வு மனப்பான்மை வருவதால், உயர்வு அழிந்து விடுகிறது.

வருகிற ஆண்டு மோசமான ஆண்டு. ஒவ்வொரு துறையிலும் செயல்படும் போது மிகவும் பொறுமையாக இருந்து பிறர் சொல்வதைக் பேட்டுச் செயல்படுவது நல்லது.

தொடரும்…

 

நன்றி சக்தி ஒளி பிப்ரவரி 2010 பக்கம் 25 -29

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here