குதிரைப் பந்தையம் போவதை விட்டுவிட்டேன்!

அருள்திரு அடிகளாரின் ஆணைக்கு இணங்கவே இக்கட்டுரையைச் சக்தி ஒளிக்கு எழுதுகிறேன்.

1912ஆம் ஆண்டு பிறந்த நாள் கிண்டி பொறிஇயல் கல்லூரியிலிருந்து தேர்வு பெற்று 1935ஆம் ஆண்டு வெளிவந்தேன். என் படிப்புக்கேற்றபடிப் பொறிஇயல் துறையில் பணிபுரியாமல் என் தாய்மாமனுடைய மாபெரும் எஸ்டேட்டை 1935 முதல் 1966வரை மேற்பார்வை செய்து வந்தேன்.

கிண்டி, உதகமண்டலம் பங்களூர் ஆகிய இடங்களில் நடைபெறும் குதிரைப் பந்தயங்கட்குத் தவறாமல் 1950 முதல் 1982 வரைச் சென்று வந்துள்ளேன். குதிரைப் பந்தயத்தில் நான் பெற்ற வெற்றி தோல்வி, இலாப, நஷ்டம் ஆகிய கணக்கைத் துல்லியமாக வைத்திருக்கிறேன். அந்த இருபத்திரண்டு ஆண்டுகளிலும் நான் இலாபமாக அடைந்தது ரூ 8620/- மட்டுமேயாகும். கடைசியாக நான் குதிரைப் பந்தயத்துக்குச் சென்றது 28.2.82ல் ஆகும்.

மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையின் ஆலயத்திற்கு 1974ஆம் ஆண்டு முதல் சில தடவைகள் சென்று இருக்கிறேன். என்றாலும் 2-2-1982 அருள்வாக்குக் கேட்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். அன்று ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மிகக் கடுமையானதும், கொடுமையானதுமான ஒரு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த என் நண்பர் ஒருவரை அருள்வாக்குக் கேட்பதற்காக அழைத்துச் சென்று இருந்தேன். என்னைப் பொறுத்தவரை, அருள்வாக்குக் கேட்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை; அதற்காக முற்கூட்டி என் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும் இல்லை. ஆனால் நிகழ்ந்தது ஓர் அதிசயம். நோய்வாய்ப்பட்ட அன்பருக்கு அருள்வாக்குக் கூறிமுடிந்த அன்னை என்னை உள்ளே வருமாறு ஆணையிட்டாள். எந்த விதமான வினாவையும் கேட்க வேண்டும் என்ற எண்ணமே என்மனத்தில் இல்லை. அன்னையின் திருவடிகளில் விழுந்து வணங்கி விட்டு எழுந்து அவள் அருகில் அமர்ந்ததும் அன்னை ‘‘மகனே” நீயோ திருமணம் ஆகாதவன்; உனக்கு வாரிசு என்று யாரும் இல்லை. இங்கு 2-4-82, 3-4-82 இரு நாட்களிலும் நடைபெறும் மாநாட்டிற்கு வந்து தொண்டுசெய். அதன்பிறகும் இங்கே வந்து தொண்டு செய் என்று பணித்துவிட்டு வேறு ஏதாவது கேட்க வேண்டுமானால் கேள் மகனே! என்று முடித்தாள். அதைக் கேட்ட நான் ‘‘தாயே! எனக்கு 70 வயது ஆகிறது என் உடல்நிலை சரியில்லை. எத்தனை நாள் இன்னும் இருக்கப் போகிறேன் என்பதும் தெரியாது. ஜோஸ்யர்கள் என் முடிவு விரைவில் உள்ளது என்றும் கூறி உள்ளனர். இந்த நிலையில் நான் என்ன தொண்டு செய்ய முடியும்?” என்று கூறினேன். உடனே அன்னை ‘‘மகனே! உன் ஆயுள் என் கையில் உள்ளது. சமீபத்தில் உனக்கு மரணம் இல்லை. எந்த நோயும் இனி உன்னைப் பிடிக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன், நீ சென்று தொண்டு செய்” என்றாள்.

அன்னையை வணங்கிவிட்டு வெளியே வந்த யான் அந்தக் கணத்திலேயே ‘‘இனிக் குதிரைப் பந்தயம் செல்வதில்லை!” என்று உறுதி எடுத்துக் கொண்டேன், ஆலயத்திலேயே தங்கி விட்டேன். அன்றாடப் பணிகள் முதல் விழாக் காலங்களில் உணவிடல் வரை என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன்.

இன்று அன்னையின் இந்த மண்ணில் நின்று கொண்டு குதிரைப் பந்தயமே உயிராக நினைத்து நான் வீணாக்கிய 22 ஆண்டுகளைத் திரும்பி வருத்தத்தோடு பார்க்கிறேன். பயனற்ற ஒன்று உண்டு என்றால் அதுதான் இது. குதிரைப் பந்தயத்தில் புக்கிகள் சில குதிரைகளுக்கு பயிற்சி தருவார்கள். தலையான ஜாக்கிகள் என்பவர்கள் குதிரைப் பந்தயத்தில் பணம் சேர்ப்பது உண்மைதான். ஆனால் பந்தயத்திற்கு ஆடப் போகிற ஒருவர் நீண்ட காலத்திற்கு ஆடிப் பணம் சம்பாதித்தார் என்பது முடியாத காரியம் என்றே கூறிவிடலாம்.

குதிரைப் பந்தயத்திற்கு மிக அதிகப்படியான வரி விதிப்பதால் அரசாங்கம் நல்ல வருமானத்தை அடைகிறது. விடாமல் குதிரைப் பந்தயம் செல்லும் பழக்கத்திற்கு அடிமையான யாரேனும் ஒருவர் இதைப் படிப்பதன் மூலம் குதிரைப் பந்தயம் செல்வதை விட்டுவிடுவாரானால் இக்கட்டுரை எழுதியதன் பயன் நிறை வெய்திவிடும்.

ஆசிரியர் குறிப்பு:

இக்கட்டுரையாளர் மேட்டுக் குடியில் பிறந்து எழுபது ஆண்டுகள் செல்வத்தில் புரண்டாலும் 25-2-82 முதல் கோவிலில் தங்கித் தன் இடத்தைத் தானே துப்புரவு செய்து கொண்டும், தன் பாத்திரங்களைத் தானே கழுவிக் கொண்டும், தன் துணிகளை தோய்த்துக் கொண்டும் தரையில் படுத்தும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்கிறார். தற்சமயம் உடல் நிலையும் நோயில்லாமல் இருப்பதாகவும் என்னிடம் கூறியுள்ளார். அன்னையின் சித்துக்களில் இதுவும் ஒன்றாகும்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 5 (1982) பக்கம்: 42-43

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here