அம்மா கொடுத்த விளக்கம்

0
2675

நான் கடந்த ஜனவரி மாதம் ஆலயத்திற்கு வந்து அம்மாவுக்குப் பாதபூஜை செய்து என் குறைகளை அம்மாவிடம் கூறினேன்.

அம்மா நான் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளேன். இந்த நிலையிலும், நான் அம்மாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறேன். ஆனால் எனக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அம்மா! என் மனப்பூா்வமான பிரார்த்தனை நிச்சயம் நிறைவேற்றித் தரப்படுமா அம்மா? என்று நான் கேட்டேன்.

அதற்கு அம்மா கூறினாள். மகளே! நீ உன் மனவேதனையால் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய். உனது இந்தக் கேள்விக்குச் சற்று விளக்கமாகவே பதில் சொல்கிறேன் கேள்! என்று சொல்லத் தொடங்கினாள்.

மகளே! தட்டுகிறவனுக்கும் கதவு திறக்கப்படாமல் இல்லை. மனப்பூா்வமான பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாமல் இல்லை. ஆனால் இதில் பாதி உண்மைதான் இருக்கிறது.

வீட்டின் உள்ளே இருப்பவன் விரும்பினால்தானே வெளியே நின்று தட்டுகிறவனுக்கு கதவு திறக்கும்?

மனதை எங்கோ அலையவிட்டு நாவால் எதையாவது வேண்டுகிறபோது அந்த வேண்டுகோள், அந்தப் பிரார்த்தனை ஒருபோதும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது என்பதே உண்மை.

நீ எவ்வளவுதான் மனப்பூா்வமான பிரார்த்தனை செய்த போதிலும் உன் உள்மனதை ஆராய்ந்து பார்ப்பதே என் வழக்கம்.

உன் பிரார்த்தனை உடனே நிறைவேறவில்லை என்பதற்காகப் பிரார்த்தனை செய்வதை நிறுத்தவே கூடாது.

நீ படைக்கப்பட்ட நோக்கமே என்னிடம் வந்து ஜக்கியம் அடைவதற்காகத்தான். அதுவரையில் நீ என்னை வணங்கி வருவதே உன் கடமை. நீ என்னை வணங்குவதால் உனக்குத்தான் அளவற்ற நன்மை ஏற்படுகிறது. உன் பாவ அழுக்குகள் எல்லாம் கழுவப்பட்டு உன் ஆன்மா துாய நிலையை அடைகிறது.

உன் பிரார்த்தனை நிறைவேறவில்லையாயின் உன்னிடம் அதைவிட செயலை நான் நாடியுள்ளேன் என்றெண்ணி உன் மனதைத் திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் உன்னுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளவும் தாமதம் ஏற்படலாம். அப்போது தான் உனக்குச் சோதனை ஏற்படுகிறது. அந்தச் சோதனையில் நீ என்னை வழிபாடு செய்வதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? உன்னுடைய முந்தைய வழிபாட்டால் யாதொரு பலனும் ஏற்படாமல் போய்விடும்.

அம்மாதான் எல்லாம் அறிந்தவள் ஆயிற்றே! அவளுக்கு நம்முடைய வார்த்தைகளின் மூலம் எடுத்துச் சொல்லித்தானா விளங்கிக் கொள்வாள்? அவளாக விளங்கிக் கொள்ள மாட்டாளா? என்றெல்லாம் நீ கேட்கலாம்.

ஒன்றை நிச்சயப்படுத்திக்கொள்! உன்னுடைய எண்ணங்களை நிறைவேற்றித் தருவது என் விருப்பத்தைப் பொறுத்தே!

ஆனால் மகளே! நீ உன்னுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டு, நான் மட்டும் உன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியன்று.

கதவை தட்டினால் தானே வெளியே ஆள் நிற்பது வீடடின் உள்ளே இருப்பவனுக்குத் தெரியும்?

அவன் விரும்பின் ஒருவேளை திறக்கலாம். ஆனால் கதவையே தட்டாமல் இரவு முழுவதும் வாயிற்படியிலேயே நின்று கொண்டிருந்தால் கதவு திறக்கப்படுமா?

அதுபோல்தான் மகளே! என் மனக்கதவு திறக்க வேண்டுமென்றால் நீ உன் மனக்கதவைத் திறந்து வை! உன் மனக்கதவைத் திறந்து வைத்துப் பிரார்த்தனை செய்!

ஒவ்வொரு தடவையும் நீ என்னிடம் பிரார்த்தனை செய்யும் போது உன் சுயநலத்திற்காகப் பிரார்த்தனை செய்யாதே! அனைவருடைய நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்! ஊரார் பிள்ளைக்கு நீ உணவு கொடுத்தால் உன் பிள்ளை தானாக வளரும்.

அதுபோல பிறா் கஷ்டங்களையும் சோ்த்து நீ என்னிடம் பிரார்த்தனை செய்! அப்போது உன் கஷ்டங்கள் விலகிப் போகும். உன் பிரார்த்தனையை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன்.

அடுத்த முறை நீ என்னை சந்திக்க வரும்போது உன் கஷ்டங்கள் விலகிப் புது ஆளாக வருவாய். போய் வா மகளே! என்று கூறி அனுப்பி வைத்தாள்.

நானும் அம்மாவிடம் ஆசிபெற்று வந்துவிட்டேன். அம்மா எனக்கு நல்ல பதிலையும் ஒரு படிப்பினையும் கற்றுக் கொடுத்து விட்டாள்.

இப்போது நான் வீட்டிலேயே கூட்டுப்பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். அதன் பலனாக என்னுடைய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னைவிட்டு விலகிப் போய்கொண்டிருப்பதை நான் உணருகிறேன்.

அனைத்துப் புகழும் அம்மாவிற்கே!

(சக்திஒளி- ஜீன் 1999 இதழிலிருந்து)

நன்றி -(சக்தி சுசீலா, வடுகபாளையம், பொள்ளாச்சி )

( சக்திஒளி -செப்டம்பா்-2013 )

]]>