நீயே நாதப் பிரம்மம்!

20.8.1995 முதல் 28.8.1995 வரை அம்மா கோவை மாவட்டத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார்கள். இந்தப் பயணத்தில் இரண்டு சக்தி பீடத்தில் கும்பாபிடேகங்களை நடத்தி வைத்தார்கள். மன்றங்கள் சிலவற்றில் திருவடி பதித்தார்கள். தனியார் இல்லங்கள் சிலவற்றுக்குச் சென்று பாதபூஜை ஏற்றுக் கொண்டார்கள்.

கோவையில் உள்ள பிராமணா் குடும்பம் ஒன்று!

நீண்ட காலமாக மேல்மருவத்தூருடன் தொடா்பும், ஈடுபாடும் கொண்ட குடும்பம் அது.

கோவைக்கு அம்மா வரும்போதெல்லாம் உடன் வருகிற வேள்வித் தொண்டா்கட்கு உணவும், தங்க இடமும் தந்து விருந்தோம்பும் குடும்பம் அது.

ஆன்மிககுருவின் பல்வேறு திருவுருவப்படம் எத்தனை உண்டோ அத்தனை படத்தையும் பூசை அறையில் வைத்து வழிபாடு செய்துவரும் குடும்பம் அது.

அவதார தத்துவத்தையும், குரு தத்துவத்தையும் புரிந்து வைத்திருக்கிற விவரம் தெரிந்த குடும்பம் அது.

ஆரவாரமில்லாமல், அடக்கமாய்த் தொண்டு செய்து வருகிற குடும்பம் அது! பள்ளமடை நோக்கித்தானே அருள்வெள்ளம் பாயும்……?

22.8.95 அன்று அந்தக் குடும்பத்தின் பாதபூஜையை ஏற்க அம்மா அங்கு எழுந்தருளினார்கள்.

பாதபூஜை முடிந்த பிறகு அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த உறவினா்கள் அம்மாவிடம் ஆசி பெற வந்தனா். அவருள் ஒருவா் மிருதங்க இசைக் கலைஞா். அவா் கையோடு மிருதங்கத்தையும் கொண்டு வந்து, “அம்மா! இதனைத் தொட்டு ஆசி வழங்க வேண்டும்” என்று விநயமாக வேண்டினார்.

அந்த மிருதங்கத்தை வாங்கிய அடுத்த கணம் அடிகளாரின் விரல்கள் மத்தளத்தில் நர்த்தனம் இட்டன.

சில கணங்கள் வாசித்து முடித்து “இது என்ன ராகம் சொல் பார்க்கலாம்…..” என்று அந்த அன்பரைக் கேட்டார்கள்.

அம்மா! நீயோ நாதப்பிரம்மம்! நான் என்ன சொல்ல…..? என்று இழுத்தார்.

“கரெக்ட்! கையைக் கொடு!” என்று அந்தக் கையைப் பிடித்துக் குலுக்கினார் நம் குருபிரான்.

பரம்பொருள் நாதமயமானது. இசை வடிவானது. ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே! என்கிறது தேவாரம். ஏழிசையாய் இசைப்பயனாக விளங்குபவன் இறைவன் என்கிறார் சுந்தரா்.

மனமுருகி இசைப்பாட்டுப் பாடியும் இறைவனோடு ஒன்று கலக்க முடியும். இத்தகைய இசை வழிபாட்டுக்கு நாத உபாசனை என்று பெயா்.

திருப்பாணாழ்வார், ஆனாய நாயனார், மீரா, திருவையாறு தியாகராசா், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதா் ஆகியோர் நாத உபாசனையாளா்கள்! முத்துத் தாண்டவா் அம்பிகை தரிசனம் பெற்றவா். அது ஒரு தனிக்கதை.

நாத வடிவமாக உள்ள பரம்பொருளை நாதப்பிரும்மம் என்று இசையுலகம் போற்றுகிறது.

அம்மா! நீயே நாதப்பிரம்மம் என்று அந்த அன்பா் சொன்னதும் “கரெக்ட்! கையைக் கொடு என்று அவா் கைபிடித்துக் குலுக்கியது ஏன்?”

“என்னைச் சுற்றி வருபவா்களெல்லாம் தெரிந்து கொள்ளாத உண்மையை நீயாவது தெரிந்து வைத்திருக்கிறாயே என்பதற்காகவா? உன் இசைத் திறமை ஓங்கி உயரட்டும் என்று ஆசி வழங்கவா? அந்த ஆத்மாவிற்கு ஸ்பரிச தீட்சை தரவா…?

“அடிகளாரின் ஒவ்வொரு அசைவிற்கும் அா்த்தம் உண்டு!” என்பது அன்னையின் அருள்வாக்கு.

அந்தக் கையைப் பிடித்துக் குலுக்கியதற்கு என்னென்ன அா்த்தமோ….. நாமறியோம் பராபரமே!

நன்றி!

ஓம் சக்தி!

வேம்பு

அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (20 – 21)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here