என் உறவுக்காரப் பெண்மணி ஒருவா் நான்கைந்து வருடங்களாக எங்களுடன் மாலை போட்டு இருமுடி செலுத்தி வருகிறார். நம் ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள் எதிலும் அவா் கலந்து கொண்டது கிடையாது. வீட்டிலேயே அம்மா மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்து வந்தார்.

அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, எத்தனையோ மருத்துவா்களிடம் சென்றும் குணமடையவில்லை. ஆகவே அம்மாவுக்குப் பாதபூசை செய்து ஆசிபெற விரும்பினார். என்னை உடன் வரும்படி அழைத்தார் அப்போது எனக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அம்மாவைத் தரிசித்தால் நல்லது என்று கருதினேன்.

இருவரும் மருவத்தூருக்குப் புறப்பட்டு வந்து சோ்ந்தோம்.

அம்மாவுக்கு நான் முதலில் பாதபூசை செய்து எழுந்தேன். என் நோய்க்கு அம்மா மருந்து சொன்னாள். அடுத்து என் உறவுக்காரப் பெண்மணி பாதபூசை செய்யும்போது “அம்மா இவங்க புதிதா வந்திருக்காங்கம்மா! அம்மாவைப் பார்க்கணும்னு சொன்னாங்க! அதனாலே கூட்டிட்டு வந்தேம்மா” என்றேன்.

அதுகேட்ட அம்மா, நான் சொன்னதற்கு மறுப்புத் தெரிவிப்பது போல, தலையை இருபக்கமும் ஆட்டி, “இல்லையே…. இவங்க ஆரம்ப காலத்திலிருந்தே நம்ம பக்தைதாம்மா! இவங்களை அந்தக் கும்பாபிஷேக மண்ணிலேயே பார்த்திருக்கேம்மா!” என்றாளே பார்க்கலாம்!

அதுகேட்டு எனக்குத் தூக்கி வாரிப் பொட்டது. இவரை அம்மா எப்போது எந்தக் கும்பாபிஷேகத்தில் பார்த்திருக்கும்? என்று யோசிப்பதற்குள் அம்மா சொன்னாள்.

“இவங்களை ஒரு நாளு அபிஷேகம் பண்ணி அருள்வாக்கு கேட்கச் சொல்லு! ஆடிப் பூரத்திலே கலந்துகிட்டு பால் ஊத்தச் சொல்லு! அப்புறம் இவங்களை நீயே கூட்டிவந்து கூட்டிக்கிட்டு போ! என அன்புக் கட்டளை இட்டாள்.

பாதபூசை முடிந்ததும் என் உறவுக்காரப் பெண்மணிக்கு மருந்து சொல்லிவிட்டு, “உனக்கு நோயே இல்ல! நீ சித்த மருத்துவம் பார்த்துக்கிட்டு இருக்கேல்ல! இனிமேல் அதுவும் வேண்டாம்” என்றாள். எனக்கோ ஆச்சரியம்! அவா் சித்த மருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பதாக அம்மாவிடம் நாங்கள் இருவருமே கூறவில்லை. இருந்தும் அதை அம்மா நேரில் பார்த்ததுபோல் கூறினார்கள்.

பாதபூசை முடித்து வெளியே வந்தோம். என் உறவுக்காரப் பெண்மணியிடம் கேட்டேன்.

“நீங்க பெருந்துறை சக்தி பீடக் கும்பாபிடேகத்தில் கலந்து கொண்டீா்களா?”

“ஆமாம்! அப்போ நான் ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்தேன்” என்றார் அவா்.

25.12.1985 அன்று பெருந்துறை சக்தி பீடக் கும்பாபிடேகம் நடந்தது. அம்மாதான் அதனை நடத்தி வைத்தார்கள்.

17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தக் கும்பாபிடேகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் சின்னஞ்சிறு பெண்ணாக எங்கோ ஒரு மூலையில் கிடந்த இவரை அடையாளம் கண்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, “இவங்க ஆரம்ப காலத்திலிருந்தே நம்ம பக்தைதாம்மா! இவங்களை நான் அந்தக் கும்பாபிடேக மண்ணிலேயே பார்த்திருக்கேம்மா…!” என்று அம்மா சொல்கிறாளே என எண்ணி வியப்படைந்தேன்.

இதில் வியப்படைய என்ன இருக்கிறது? உடல் மானிடமாக இருந்தாலும் உள்ளே இருப்பவள் ஆதிபராசக்தி அல்லவா? என்று என் உள்மனம் உரைத்தது.

அவள் அறியாதது அவளுக்குத் தெரியாதது என்ற ஒன்று உண்டோ…..? ஒன்றும் இல்லை!

நாம்தான் அவளை அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் இன்னும் சரிவரப் பிடித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. அபிராமி கிருஷ்ணமூா்த்தி, பெருந்துறை, ஈரோடு

சக்தி ஒளி, நவம்பா், 2002

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here