என்னதான் அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்திருந்தாலும் விடாப்பிடியான பக்தி வரமாட்டேன் என்கிறதே…? என்ன செய்ய?

அன்னை ஆதிபராசக்தியே மனமிரங்கி நமக்கு அந்தப் பக்தி உணர்வைக் கொடுத்தால்தான் விடாப்பிடியான பக்தியே வரும்.

அம்மா! எனக்கு உன்னிடம் நீங்காத பக்தியைக் கொடு! எனக்கு ஞானத்தைக் கொடு என்று நாம் கேட்க வேண்டும்.

பெரும்பாலானோர் பக்தி பயன் கருதிய பக்தியாகவே உள்ளது.

இருமுடி செலுத்தினால் என்ன பலன்? அங்கப்பிரதட்சணம் செய்தால் என்ன பலன்? ஆயிரத்தெட்டு படித்தால் என்ன பலன்? ஆடிப்பூரக் கஞ்சி கொண்டுவந்தால் என்ன பலன்? கலசம் வாங்கினால் என்ன பலன்? என்று பலனைத் தெரிந்து கொண்டு பக்தி செலுத்துகிறோம்.

இப்படிப்பட்ட பக்தி எல்லாம் உண்மையான பக்தி அல்ல.

ஏதோ ஒரு துன்பத்தில் இருந்து விடுபட வேண்டி ஒரு பலனை எதிர்பார்க்கிற பக்தி.

நம்மிடம் அறியாமையும், அஞ்ஞானமும் மண்டிக் கிடப்பதால்தான் தூய்மையான, உண்மையான பக்தி செலுத்த முடியாதவர்களாக கிடக்கிறோம்.

நம்மிடம் உண்மையும், தூய்மையும் கலந்த பக்தி என்ற ஒன்று சுரக்குமேயானால்

1.பழம்பிறவிகளில் செய்த பாவங்களை எல்லாம் சாம்பலாக்கி விடும்.

2.புதுப்பிறவிகளின் எண்ணிக்கை குறையும்.

3. கிரகங்கள்கூட நம்மேல் கை வைக்க அஞ்சும்.

நம் பதவிகளும், பட்டங்களும் நிரந்தரமானவைகள் அல்ல!

மனைவி, மக்களும் நிரந்தரமல்ல!

சுற்றமும், நட்பும் நிரந்தரமல்ல!

சொந்த,பந்தங்ளும் நிரந்தரமல்ல!

இடையிலே வந்தவை! இடையிலே அகன்று போய்விடுபவை!

இந்த உடம்பை விட்டு உயிர் மூச்சு பிரிந்த பிறகு எங்கே, எந்த நாட்டில்!எந்தக் குடும்பத்தில் இவனைப் பிறக்க வைப்பது என்று நம் பாவ, புண்ணியக் கணக்கை வைத்து தீர்மானிப்பவளும்.

நமக்கு உடம்பும், உயிரும் தந்து பிறவி தோறும் துணை நிற்பவளும் அன்னை ஆதிபராசக்தி ஒருத்தியே!

அவள்தான் நமக்கு நிரந்தரமான சொந்தக்காரி!
உறுதியான துணை!
இறுதியான துணை!
என்பதை அடிக்கடி நினைத்துக் கொண்டால் ஒருவேளை விடாப்பிடியான பக்தி வரலாம்.

பக்கம்:38.

சக்திஒளி 1990 டிசம்பர்.