என் மகனைக் காப்பாற்றிய பரம்பொருள் பங்காரு அம்மா!

0
1322

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகனுக்கு 10 வயதில் டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தோம். அந்தக் காய்ச்சலைக் குறைக்க மருந்தின் விலை ரூ.20,000 ஆகும் என்றார்கள்.

அந்த அளவுக்கு எங்களிடம் அப்பொழுது வசதி இல்லை . அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்தார்கள். நாங்களும் அதன்படி சேர்த்துவிட்டோம்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைய குழந்தைகள் டெங்கு காய்ச்சல் வந்து படுத்திருந்தார்கள். அந்த நிலையில் என் மகனையும் அங்கு சேர்த்தோம்.

ஒவ்வொருவரும் நாங்கள் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது, இரண்டு மாதம் ஆகிவிட்டது என்று சொன்னதைக் கேட்டு எனக்குக் கவலையாக இருந்தது. 15 நாட்களுக்கு ஒருமுறை தான் பெரிய டாக்டர் வருவார் என அங்கு இருந்தோர் கூறினர். இதைக் கேட்டு எனக்கு மிகவும் கவலையாகிவிட்டது.

அப்பொழுது தான் நான் பரம்பொருள்அம்மா அவர்களிடம் வேண்டினேன். என் மகனின் உடல்நிலை சரியாகி விட்டால் நானும், என் மகனும் சக்திமாலை அணிந்து மடிப்பிச்சை எடுத்து மருவத்தார் வருவதாக
வேண்டிக் கொண்டேன்.

மறுநாள் காலையில் எதிர்பாராதபடி பெரிய டாக்டர் வந்தார். செவ்வாடை அணிந்து நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு வந்தார். அவர்கள் எல்லோரையும் பார்த்து விட்டு கடைசியில் என் மகன் அருகில் வந்தார். அவனிடம் அன்பாகப் பேசி அவனைப் பரிசோதித்து விட்டு இவருக்கு ஒன்றுமில்லை. இரண்டு பாட்டில் குளுக்கோஸ் மற்றும் ஊசி போட்டு இவரை வீட்டுக்கு அனுப்புங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.
பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் டாக்டர் உங்கள் சொந்தமா? எனக் கேட்டார்கள். அந்த மருத்துவமனையில் சேர்ந்த இரண்டே நாட்களில் என் மகனைக் காப்பாற்றிய அம்மாவுக்குக் கோடானு கோடி நன்றி!
ஓம்சக்தி!

சக்தி என்.அபிராமி நாகராஜ், பொங்கலூர், திருப்பூர்
பக்கம் – 56.
சக்தி ஒளி
நவம்பர்-2017