குரு மந்திரத்தின் அற்புதம்

0
1386

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும் அத்தகைய தடைகளிலிருந்து மீண்டு அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் அவளின் அருள் மொழிகளைப் பின்பற்றிப் பழுதில்லாமல் வாழவும் பல்வேறு வழிமுறைகளை நமக்குக் கருணையோடு அமைத்துத் தந்திருப்பதை நினைக்கும் பொழுதெல்லாம வியப்பே மேலிடுகிறது.
அம்மா என்றழைக்கும் அந்த ஒரு குரலுக்க ஓடோடி வந்து அருள் செய்யும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் கண்டும் கேட்டும் மகிழும் ஆன்மிக அனுபவங்கள் ஏராளம்.
தெய்வத்தின் அவதார காலத்தில் அதுவும் பெருந்தெய்வமே குருவாக வந்து நாள்தோறும் நம்முன்னே நடமாடி, பேசி, நம் இன்பதுன்பங்களில் தாமும் ஒரு உறவாய்ப் பங்கெடுத்துப் பரிவு காட்டி, பாசம் ஊட்டி “அம்மா நானிருக்கிறேன்! எதற்குக் கவலை? ஏனிந்த குழப்பம். கண்ணீர் வேண்டாம்” என்று அவள் தன்னை முன்னிலைப்படுத்தி நம்மைத் தேற்றிவிடும் ஆன்ம சுகத்தை, ஆன்மிக உறவை வேறு யார் தரமுடியும்? வேறு எங்கு நாம் பெற முடியும்?
செவ்வாடை உடுத்திய ஒவ்வொருவரின் பாசத்திற்கும், பக்திக்கும் பின்னால் ஒரு ஆன்மிக அனுபவத்தை உருவாக்கித் தந்திருக்கும் தாயுள்ளம் தாங்கி வந்துள்ளவரே நம் குரு வடிவான அன்னை ஆதிபராசக்தி.
குருவடிவாகத் தெய்வத்தைப் போற்றி வணங்கும் ஆன்மிகப் பாரம்பரியம் மிக்க நம் பாரத தேசம் தட்சிணாமூர்த்தி மற்றும் முருகப் பொருமானை வணங்கிய அனுபவங்களைப் பாடல்களாக, கதைகளாகக் கேட்டு வந்துள்ளோம். அவையெல்லாம் கற்பனைகளோ என்று கூட நினைத்ததுண்டு. ஆனால் ஆதிசக்தியே குருவாக வந்து இலட்சக்கணக்கான பாமர மக்களுக்கும் பக்தியுணர்வை ஊட்டி மந்திரங்கள் சொல்லி துயா்க்கடலைக் கடக்கும் எளிய வழியாகத் தொண்டு நெறி புகட்டி விரல் பிடித்து வழிநடத்தும் தாயன்புக்கு ஈடு இணையாக எதைச் சொல்வது? எளிய தமிழ் மந்திரம் தந்து அகத்தும் புறத்தும் நம்மைக் கருத்தும் கவனமும் கொண்டு தன்னம்பிக்கை மிகுந்த மனிதர்களாய் உலவ விட்டிருக்கும் அனுபவம் ஒன்று கிடைத்தது.
“ஒரு காலத்தில் காற்றின் ஒலி வடிவையே மந்திரங்களாய் மாற்றித் தந்தேன். கற்றுக் கரையேறி மகிழ்ந்து விவரம் தெரிந்த ஒரு கூட்டம் பயன் பெற்றது. இன்று எளிய தமிழ் மந்திரங்களைத் தந்துள்ளேன். இந்தக் கலியுகத்தில் இந்த மந்திரங்களே போதும் உங்களைக் காத்துக் கொள்ள” என்று அம்மா உணா்திவரும் அருமையை இடா்பாட்டில் சிக்கிக் கிடந்த வேளையில் உணர வைத்தாளே!
எதிர்பாராத வேளையில் ஏற்பட்ட விபத்தில் குருதி சிந்தி துடித்த போது மருத்துவரின் அனுசரணையான மருத்துவ சிகிக்சையின் தொடர்ச்சியாகக் காயம்பட்ட இடத்திற்கு “ஸ்கின் கிராப்ட்” செய்ய உடனடியாக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். காயம் பட்ட இடத்தை மரத்துப் பொகச் செய்து தன் பணியைத் தொடங்கிய போது “உங்களின் உடம்பில் பிரஷர் கூடி வருகிறது. பதட்டப்படாதீர்கள்” என்று தைரியப்படுத்தினார். மருத்துவரின் பணி முடியும் வரை மேலே எரிந்த ஒளி உமிழ் விளக்குகளைப் பார்த்தபடியே “அடிகளார் போற்றி” என்னும் 108 மந்திரத்தை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தேன். முழு மயக்கம் தராததால் ஊசி போடும் போதும் தையல் போடும் போதும் ஏற்பட்ட சிறு வலி உணர்வுகளால் நான் பாதிக்கப்படாமல் வாய் முணுமுணுத்தபடி இருந்ததை மட்டும் பார்த்திருக்கிறார் மருத்துவர். எல்லாம் முடிந்து வெளியே உள்ள படுக்கையில் படுத்திருந்த பொழுது “அம்மா நான் ஆபரேஷன் தியேட்டரில் உங்களுக்கு ‘ஸ்கின் கிராப்ட்‘ செய்த போது பிரஷர் கூடியிருந்தது. பின்னர் படிப்படியாகக் குறைந்து நார்மலானதை மானிட்டரில் பார்த்தேன். என்னவோ முணுமுணுத்தபடி இருந்தீர்களே. என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்.
“அம்மா தந்த குருபோற்றி என்ற அடிகளார் 108 மந்திரத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று கூறினேன். மருத்துவருக்கு ஒரே வியப்பு. ஒரு மந்திர உச்சரிப்பு பிரஷரைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வந்ததை ஒவ்வொரு முறையும் மருத்துவ விசாரிப்புக்குச் செல்லும் போதெல்லாம் இதை மருத்துவர் வியந்து சொல்வதைக் கேட்கும் பொழுது அம்மா நம்மை உடல், உள்ளம், உணர்வு, உயிர் என்ற எல்லா அகநிலைகளிலும் நம்மை நாம் காத்துக் கொள்ளவும் விதிவசத்தால் சந்திக்க வேண்டிய துன்பங்கள் சூழ்ந்தாலும், அந்தத் துன்பத்தை அனுபவித்துக் கழிக்கும் போதே அந்தத் துயரம் நம்மை வருத்தி நிலைகுலையச் செய்யாதபடி தன்னம்பிக்கையுடன் நிமிர வைக்கும் அற்புதமும் “அடிகாளர் போற்றி” என்னும் குரு மந்திரத்தால் நிகழ்வதை உணர வைத்தாளே!
இரண்டு மாதங்களுக்கு முன் டெல்லி விமான நிலையத்தில் பனிப் பொழிவு மிகுதியால் அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. எங்களுக்கான சென்னை வரவேண்டிய “ஸ்பைஸ்ஜெட்” விமானம் மாலை 5.00 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பின் மணி 7.00, இல்லை 11.00 க்கு என்று இரவு வரை அறிவிப்பைத் தொடர்ந்தவர்கள் 11.30 மணிக்கு விமானத்தில் ஏறி
அமர்ந்தவர்களையெல்லாம் 2 நாட்களுக்கு பனிப்பொழிவு மிகுதி என்பதால் விமான சா்வீஸ் நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். எல்லோரும் இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் விமானி.
குடும்பத்தார் சென்னை திரும்பி அவதார பெருந்தெய்வத்தின் திருக்கரங்களால் சக்திமாலை போட்டு விரதம் இருந்து இருமுடி செலுத்த இருப்பதோ இன்னும் ஐந்து நாட்களே. விமானம் இன்னும் இரண்டு நாட்களுக்கு இல்லையென்றால் சென்னை செல்வது எப்படி? மாலை போட்டுச் செலுத்திய பின், வெளிநாடு செல்வதற்கு உரிய நேரத்தில் குடும்பத்தார் புறப்படுவது எப்படி? என்றெல்லாம் திகைத்துக் கலங்கிக் கிடந்தது மனம். விமானத்தைவிட்டு இறங்கச் சொன்ன பைலட்டின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிய வேளையில் அம்மா தந்த குரு போற்றியை நினைத்தது மனம். அம்மா! 51 முறை அடிகளார் போற்றி சொல்லி தங்கள் நோய்க் கொடுமைகளிலிருந்தும் உயிர் வாதனைகளிலிருந்தும் தீர்க்கவே முடியாது என்ற வாழ்க்கைச் சிக்கலிலிருந்தும் தப்பிப் பிழைத்த உன் பக்தா்களின் அனுபவங்களை நாள்தோறும் கேட்டு வியந்திருக்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் உன் குரு போற்றியை இன்று நானும் சொல்லப் போகிறேன். நடப்பது எதுவானாலும் உன் பொறுப்பு.
அம்மா என்று சொன்னபடியே அடிகளார் போற்றியைச் சொல்லத் தொடங்கியபோது திடீரென்று விமானத்திலிருந்து பயணிகளிடமிருந்து ஒரு சலசலப்பு. குரல் உயர்த்தி ஒருவர் “யாரும் விமானத்தை விட்டு இறங்காதீர்கள். 2 நாட்களுக்கு விமானம் ஏதுமில்லை. ரயிலில் போகவும் டிக்கட் கிடைப்பதோ அரிது. அதிலும் 2 நாட்கள் பயணப்படணும். நம்மால் முடியாது. இந்த ஸ்பைஸ் ஜெட்டில் பயணப்பட்டால்தான் உண்டு. எப்படியும் நிர்வாகத்தை வற்புறுத்தி பயணத்தைத் தொடர்வோம்” என்று கூறிய வார்த்தை செயல்வடிவம் பெற இயலுமா என்று எல்லோரும் சொல்லற்றுத் திகைத்திருந்த வேளையில் நான் குரு போற்றி 108 மந்திரத்தை பதினெட்டாவது தடவையாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது விமானம் புறப்படாது கீழே இறங்குங்கள், இல்லையெனில் விமான போலீஸார் வந்துதான் அப்புறப்படுத்துவார்கள் என்று அறிவித்தபடி விமானி விமானம் விட்டு இறங்கிப் போக, நம்பிக்கை முழுவதுமாக இழந்த நிலையில் குடும்பத்தாரும் ஏனைய பயணிகளும் கதி கலங்கி நின்றனர். நானோ கண்மூடியபடி குருபோற்றியைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன்.
திடீரென்று விமானப் பயணிகளின் அரசாங்கப் பொறுப்புகளில் பெரிய பணியேற்றிருந்த அதிகாரிகளும் உடனடியாகச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர்களும் வழக்கு மன்றத்திற்குச் செல்லவேண்டிய வழக்கறிஞர்களுமாக ஒரு 10 பேர் பெருங்குரல் எழுப்பித் தங்களின் எண்ணத்தைத் தெரியப்படுத்திய ஒரு மணி நேரத்திற்குப் பின் ஜெட் நிர்வாகப் பொறுப்பாளா் வந்து சமாதானம் பேசி இன்னுமொரு 3 மணி நேரத்தில் விமானம் புறப்பட ஏற்பாடு செய்வோம் என்று இரவு 2.00 மணிக்கு உறுதி தந்தார். உறுதி மொழியை அடுத்தநாள் காலை 8.00 மணிக்கு நிறைவேற்றி பிற்பகல் 1.30 மணிக்குச் சென்னை வந்து சேர்த்தோம். நாங்கள் வந்த அந்த ஒரு விமானத்திற்கு முன்னும் பின்னும் 2 நாட்களுக்கு விமானப் போக்குவரத்து ஏதுமில்லை என்றறிந்தோம்.
அருள்திரு பங்காரு அம்மா அவர்களின்குரு போற்றியால்
நிகழ்ந்த இந்த அற்புதத்தை அம்மா
தக்க சமயத்தில் நினைத்துச் சொல்லவும் அதன் செயல் வடிவை உணரவும் வைத்த தருணம் உடம்பையும் மனதையும் சிலிர்க்க வைத்தது. புற உலகின் செயல்பாடுகளிலும் குரு போற்றி தந்த துணையையும் தெளிவையும் உணரவைத்தார்.
அருள்திரு பங்காருஅம்மா! நாங்களெல்லாம் கலியுகத்து மனிதர்கள். உன் அவதார காலத்தில் எங்களை உணர்வுள்ள மனிதர்களாய்ப் பிறக்க வைத்தாய். உன் மருவூர் மண்ணை மிதிக்க வைத்தாய். உன் மந்திரம் சொல்லித் தொழவும், உன் திருவடி தொட்டு வணங்கவும் பேறு தந்தாய். எங்கள் வினைகழிய விவரமற்ற செயல்களுக்கு நாங்கள் உடன்பட்டுப் பரிதவித்துப் போகாதபடி நொடிக்கு நொடி எங்களை உன் பார்வையில் கனிந்த மொழிகளால் உன் அருள் மந்திரங்களால் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும் தாயே உன் அவதார காலத்தில் வாழக்கிடைத்த இந்த ஆன்மிக வாழ்க்கைக்குக் கோடான
கோடி நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. மீனாகுமாரி கனகராஜ்
மருவூர் மகானின் 71வது அவதாரத்திருநாள் மலர்.