*”பக்தன் கிடைப்பான். தொண்டன் கிடைக்கமாட்டான்,”*
என்று ஒரு தொண்டரிடம் அன்னை சொன்னாளாம்.

*”தான் விரும்பியது, அன்னையிடம் கேட்டது கிடைத்தால் தன் பக்தியைத் தொடர்பவன் பக்தன்.”*

*”வேண்டுவது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அம்மா மீது ஈடுபாட்டைக் குறைக்காதவன் தொண்டன்.”*

முதிய தொண்டர் ஒருவர் அம்மாவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அம்மாவிடம் இமைப்பொழுதும் நீங்காத பக்தி கொண்டவர்.

கடுமையான உழைப்பாளி,சிக்கனமானவர். சேர்த்து வைத்த சொத்தைக் கட்டிக் காத்தவர்.ஊழ்வினை வழியே எல்லாம் செல்லும் என்பார்கள். சேர்த்த சொத்தில் சிறிது இழக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அதனால் மிக்க மனவருத்தம்.

முதியவரின் சொந்த ஊர்ப்பக்கம் அம்மா அவர்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார்கள்.அந்த முதியவரின் சொந்தக்காரர் இல்லத்திற்கு அம்மா வருகை தந்தார்கள்.

சொந்தக்காரர்கள் அனைவரும் அம்மாவை வணங்குகிறார்கள். மனத்தில் பாரத்தை, எண்ணற்ற சுமையை வைத்துக் கொண்டு அம்மாவை அவரும் விழுந்து வணங்குகிறார்.

*” நீ யார்? உனது தன்மை என்ன? என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அடிகளாருக்கு உண்டு. ஆனால் சாதாரணமாக எதையும் அவன் வெளிப்படுத்த மாட்டான் “* என அன்னை சொல்லியிருக்கிறாள்.

அம்மா அந்த இல்லத்திலிருந்து கிளம்புகிறார்கள். முதியவரின் சொந்தக்காரர் அனைவரும் அம்மா கார் புறப்படும்வரை அம்மாவோடு செல்கிறார்கள்.முதியவர் மட்டும் பாதி தூரத்தில் ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கிறார்.

அம்மா காரில் ஏறி விட்டார்கள்.காரில் ஏறிய அம்மா திரும்பவும் இறங்குகிறார்கள். முதியவரை அருகில் அழைக்கிறார்கள். *” வாழ்வில் ஏற்ற, இறக்கம், லாப, நஷ்டம் என்பது சகஜம் தானே. இதற்குப் போய் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள்? நான் பார்த்துக் கொள்கிறேன். “* என்று சொல்லிவிட்டு ஆறுதலோடு பார்க்கிறார்கள். கார் புறப்படுகிறது….

*அம்மாவின் அந்தப் பார்வைக்கும், வார்த்தைக்கும் அப்படி ஒரு வலிமை, மகிமை.”*

முதியவருக்கு மனப்பாரம் அத்தனையும் இறக்கி வைத்த உணர்வு. மன வருத்தத்துடனும், மனக்குறையுடனும் ஒதுங்கி நின்றோமே? அம்மா அவர்கள் நம் எண்ணத்தை அறிந்து இத்தனை பேருக்கு நடுவே நம்மை அழைத்து ஆறுதல் கொடுத்தார்களே? அதை நினைத்து மனம் லேசானது.

சிறிது நாட்கள் கழித்து அவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டது. உணவு அளவை குறைக்க நேரிட்டது.உடல் இளைத்தது.

மருவத்தூர் வந்தார். இனி அடிக்கடி மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசிக்க உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்குமா ? நம் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து கொண்டு புற்று மண்டபத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.

அன்றைய தினம் அருட்கோலம் தாங்கி வந்த அன்னை தீபாராதனையை ஏற்றுக்கொண்டு புற்று மண்டபம் செல்லும்போது முதியவருக்கு அருகில் வருகிறாள்.

*”முதியோர் இல்லம் இங்கு தொடங்க இருக்கிறேன். அங்கு உனக்குப் பொறுப்பு தருவேன்.”* என்றுவிட்டு அகன்றாள்.

முதியவருக்கு மட்டில்லா மகிழ்ச்சி. மருவூரில் இருக்கிற வாய்ப்பு, குருவை தினமும் தரிசிக்கிற வாய்ப்பு, ஆயுள் தொடரும், அதோடு நமக்கு அம்மாவின் தொண்டும் தொடரும் என்ற அம்மாவின் வார்த்தைகளுக்கான முழு அர்த்தமும் புரிகிறது.

அவர் வாழ்வில் அம்மா செய்த இந்த இரண்டு சம்பவங்களையும் நினைத்து ,அவள் அருட்கருணையை நினைத்து நினைத்து மனம் ஆறுதல் பெறுகிறது.எத்தனையோ கோடி மக்களில் சிறு துரும்பு போன்ற அவருக்கு அம்மா செய்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி இருக்கிறார்.

தற்போது வாழ்வில் இதுபோதும் என்று உளமாற திருப்தியோடு இருக்கிறார்.

*தெய்வம் மற்ற இடங்களில் பேசுவது கிடையாது.மருவத்தூரில் குரு வடிவில் வந்த அன்னை பேசுகிறாள்.* அதுவே நமக்குக் கிடைத்த பெரும்பேறு.

*வாழ்வில் மிக இன்றியமையாதது அமைதி.அதை எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாது.*

*அம்மாதான் தர வேண்டும். நாம் அதைப் பெற வேண்டும்.*

*அமைதி பெற ஆன்மிகத்தில் தொடர்ந்து ஈடுபடு* என்பது அன்னை அருள்வாக்கு.

*தொடர்ந்து ஆன்மிகத்தில் ஈடுபடுவோம்!*

*மருவத்தூர் மண்ணை மிதிப்போம்!*

*குருவின் பாதங்களைப் பற்றுவோம்!*

*அதன்மூலம் வாழ்வில் நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்! ஆன்ம பலன் பெறுவோம்! நல் அமைதி பெறுவோம்!*

சக்திஒளி 2004 ஏப்ரல்.