வேள்வித் தொண்டு

அன்னையின் அருளால் ஈா்க்கப்பட்டு அன்னையின் ஆணைப்படி பிரச்சாரம், ஆலயப்பணி, மன்றப்பணி, குடும்பநல வேள்விப்பணி- போன்ற பணிகளைச் செய்து வருகிறேன்.

ஒருமுறை அருள்வாக்கில் அம்மா கூறினார்கள். “மகளே! ஆன்மிக உலகில் அடி எடுத்து வைத்துவிட்டாய்! இனி நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நீ எடுத்து வைப்பது அல்ல! நான் எடுத்து வைப்பதாகும்!” என்றாள். அந்தத் தைரியத்தில் அம்மா நம்மோடு இருக்கிறார்கள் என்கின்ற முழு நம்பிக்கையில் பயபக்தியோடு வேள்விகளை நல்ல முறையில் செய்து வருகிறேன்.

குடும்பநல வேள்வி செய்யப் போனது

சேலம், செவ்வாய்ப்பேட்டையிலிருக்கும் தொண்டா் ஒருவரின் இல்லத்தில் நாங்கள் குடும்பநல வேள்வி செய்யச் சென்றிருந்தோம். இடமோ மிகவும் குறுகியது.

அம்மா ஏற்கனவே அந்த வீட்டில் தீய சக்திகள் இருப்பதாக அந்தப் பெண்ணுக்கு கூறியிருந்தார்கள். அன்று எங்கள் மன்றத் தொண்டா்கள் சுபாஷ் சந்திரன், கஸ்துாரி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் வேள்விப் பணியில் ஈடுபட்டோம்.

அங்கே வேள்வி நடைபெற்றபோது கரும்புகையும் காரமும் வந்தன. உள்ளே உட்கார முடியாமல் நான் வெளியிலே வந்து உட்கார்ந்து விட்டேன். அன்று மந்திரம் படிப்பவா்களும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பலமுறை திருஷ்டி கழித்தோம். இறுதியில் ஒரு நுாறு மந்திரங்களுக்கு வேள்வித் தீ நன்றாக எரிந்தது. வேள்வியும் நல்லபடியாக முடிந்தது.

அன்று மாலை நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்த பிறகு என்னுடைய இரண்டு கண்களிலும் நீா் சொட்ட ஆரம்பித்தது. நன்றாகச் சிவந்து எரிச்சல் எடுக்கஆரம்பித்தது. இரண்டு கண்களிலும் வலியும் எடுக்க ஆரம்பித்து விட்டது. என்னால் தாங்க முடியாமல் கூடத்தில் உள்ள அம்மன் படத்திற்கு முன்னாலேயே படுக்கையைப் போட்டுப் படுத்துக் கொண்டு புலம்பவே ஆரம்பித்து விட்டேன்.

கிண்டலும் கேலியும்

“அம்மா! என் பணியை நீ செய். உன் பணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாயே..? என் பிரச்சனைகள் ஒன்றும் தீரவில்லையே..?

அந்த மருவத்துாரம்மா உனக்கு என்ன வாரிக் கொடுத்து விட்டாள் என்று செவ்வாடை கட்டிக் கொண்டு அலைகிறாள் இவள்? என்று என் உறவினா்கள் எல்லோரும் கேலி பேசுகிறார்கள். ஆனால் உன் கருணை எனக்கு மட்டும்தான் புரியும்!”

உன் பணி ஒன்றையே உயிர் மூச்சாய்க் கொண்டிருக்கிறேன். அதிலே மட்டும் நிறைவைக் காண்கிறேன். அதைக் கூட செய்ய முடியாதபடி வேள்வி செய்துவிட்டு வந்தும் என்னை இப்படித் துன்பப்பட வைத்து விட்டாயே…

என்னை கருணை கூா்ந்து பார்க்க மாட்டாயா..? உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறேனே..? என்னை இப்படி துன்பப்பட வைக்கிறாயே..? உனக்கு என் மீது இரக்கம் இல்லையா..? என்று கதறவே ஆரம்பித்து விட்டேன். இரவு 10.00 மணி இருக்கும். பிள்ளைகள் இருவரும் துாங்கி விட்டார்கள். கணவா் மட்டும் முன்புறக் கதவு, பின்புறக் கதவுகளைச் சாத்தி விட்டு இரவு அன்னையை வழிபட்டுக் கொண்டிருந்தார். இரவிலே வழிபாடு செய்வது அவா் வழக்கம்.

இதுவரை அறியாத நறுமணம்

திடீரென்று நான் இதுவரையிலும் அறியாத ஒரு நல்ல நறுமணம் வர ஆரம்பித்தது. அந்த மணம் விநாடிக்கு விநாடி அதிகரித்தது.

மருக்கொழுந்து, சம்பங்கி, மல்லி, முல்லை, ரோஜா, தாழம்பூ , மனோரஞ்சிதம், தவனம் போன்ற எல்லா மலா்களின் வாசனையும் மாறி மாறி வீசுகின்றது. எனக்கு அசையக்கூடத் தோன்றவில்லை. படுத்தது படுத்தபடியே கிடக்கிறேன்.

என் கணவரைக் கூப்பிட்டு “ஏதோ வாசனை வருகின்றது” என்று கூறினேன். அதற்க அவா் “நல்ல பாம்பு வந்தால் கூட மணம் வரும் என்று கூறுவார்கள். நான் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு வீட்டின் முன்புறம், கொல்லைப்புறம் எல்லாம் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் எந்த மணமும் இல்லை.

நான் படுத்திருந்த கூடத்தைத் தவிர வேறு எங்கும் எந்த மணமும் இல்லை. நான் படுத்திருந்த இடத்திற்கு சுமார் 3 அடி உயரத்திற்கு மட்டும் அந்த மணம் இருக்கிறது என்று கூறினார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. நான் கட்டுண்டதுபோல் படுத்துக் கிடந்தேன். “சில்” என்ற பனிக்காற்று என்மேல் ஜஸ்கட்டி விழுவதுபோல விழ ஆரம்பித்தது. நல்ல நறுமணத்துடன் புல்லரிக்கும் இனம்புரியாத அனுபவம்.

நான் கண்வலியை மறந்து விட்டேன். எரிச்சலையும் மறந்து விட்டேன். சுமார் 10 நிமிடங்கள் இம்மாதிரி இருந்தது. அதன்பிறகு மெல்ல மெல்ல அந்த நறுமணம் குறைய ஆரம்பித்து விட்டது. குளிரும் போய்விட்டது. சுமார் 10.20 இருக்கும். என் கணவரும் ஏதும் புரியாமல் என் பக்கத்தில் அமா்ந்திருந்தார். இப்போது அந்த மணம் குறைந்து விட்டது என்ற கூறினார்.

அதன்பிறகு10.30க்கு எழுந்து அம்மா படத்தின் முன் விழுந்து வணங்க நினைத்து எழுந்து கண்ணாடியில் பார்த்த பொழுது கண்ணின் வீக்கம் இருந்த இடம் தெரியவில்லை. கண்ணிலிருந்த சிவப்பும் மறைந்தது. பழைய நிலைக்கு வந்து விட்டது. அந்த எரிச்சலும் அகன்று விட்டது.

 நன்றி

அனுசுயா சுந்தரம் (சேலம்)

& அன்னை அருளிய வேள்வி முறைகள் பக்கம்-295-297

r

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here