சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு வெளியே வந்தனர்.

அம்பாளின் தூல வடிவம்தான் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் எனக் காஞ்சி மகா
பெரியவர் கூறியிருக்கிறார். இருந்தும் முன்பெல்லாம் பிராமணர்கள் இந்த ஆலயத்திற்கு வரத்தயங்குவர். இப்பொழுதுதான் தயக்கம் நீங்கி அன்னை ஆதிபராசக்தியை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பத்திருக்கிறார்கள் என்று என் மகனிடம் சொன்னேன்.

பின் பக்கமிருந்து ஒருகுரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. நான் என் மகனிடம் கூறியதைக் கேட்டுவிட்டு எனக்குப் பின்னால் நின்றவர் கூறிய வார்த்தை “ நன்றாகச் சொன்னேள் ! “ இந்த வார்த்தைதான் என்னை அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது.

இன்று பல லட்சம்பேர் அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களாக இருப்பதற்குக் காரணம் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் ஏதாவது நல்லதைச் செய்திருப்பாள். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை!

பின்னால் நின்ற அந்த பிராமணருக்கும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்எதையாவது செய்திருப்பாள். இல்லையென்றால், “ நன்றாகச் சொன்னேள் ! “ என்று கூறியிருக்க மாட்டார் என்று நினைத்து அவர் பக்கம் திரும்பி உங்களுக்கு எந்த ஊர் ? அம்மா இயக்கத்திற்கு எப்படி வந்தீர்கள்? என் இரண்டு கேள்விகள் மட்டும் அவர் முன் வைத்தேன்.

தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் பம்பாயில் ஒரு நிறூவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றிருப்பதாகவும் தற்பொழுது பம்பாயில் மகள் வீட்டில் இருப்பதாகவும் கூறி அவர் தன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைக் கூறினார். அதையும் உங்களிடம் கூறுகிறேன்.

அவருக்கு ஒரு மகள், மகன் பொறியியல் பட்டதாரி. லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபொழுது திடீரென இரண்டு காதுகளும் கேட்கவில்லை. முற்றீலும் செவிடாகி விட்டார்.

அங்குப் பல டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் ஏன் இப்படி திடீரென ஆகிவிட்டது என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்த முடியவில்லை.

அந்த ஆண்டவன்தான் செவிக்கு ஒலி கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களுக்குத் தந்தையும் மகனுமாகச் சென்று வழிபட்டு வந்தனர்.

கடைசியாக வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு வழிபட வந்தவர்களை அவருடைய பால்ய நண்பர் சந்தித்திருக்கிறார். அவரிடம் விபரம் கூறியிருக்கிறார்.

அந்த நண்பரோ….. அருகில் மேல்மருவத்தூர் இருக்கிறது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உருவில் அன்னை ஆதிபராசக்தி அருள்வாக்குச் சொல்கிறாள். பலருக்கும் பல நன்மை கிடைத்திருக்கிறது. நீங்களும் அங்கு சென்று அருள்வாக்குக் கேளுங்கள், நல்ல பலன் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார்.

பல கோயிலுக்குச் சென்றும் பயன் இல்லை. இந்தக் கோயிலுக்கு மட்டும் சென்றால் பலன் கிட்டிவிடவா போகிறது ? என யோசித்திருக்கிறார்.

வயிற்று வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். எப்படியும் குணமானால் சரி ! என்று நம்பிக்கையின்றி மேல்மருவத்தூர் வந்து பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களிடம் அருள்வாக்கு கேட்க உட்கார்ந்தார்.

அம்மா கூறினாள். “மகனே ! பல டாக்டர்களால் குணப்படுத்த முடியவில்லை. பல கோவில்களுக்கும் சென்று வந்தாகிவிட்டது. இவள் மட்டும் எப்படிக் குணப்படுத்தப் போகிறாள் ? என்ற அவ நம்பிக்கையில்தானே வந்தாய் ? “ என்று அம்மா சொல்லவும் அவருக்கு சப்த நாடியெல்லாம் அடங்கி விட்டது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் பேசவில்லை. அந்த ஆதிபராசக்திதான் பேசுகிறாள் என்பதை உணர்ந்தார். பதில் பேசாமல் இருந்தார்.

அம்மா தொடர்ந்தாள். “ மகனே ! உன் மகனுக்குச் செவியில் ஒலி தருகிறேன். ஒரு சொம்பு தேங்காய் எண்ணெய் எடுத்து, அதில் ஒரு டம்ளர் பசும்பால், ஒரு டம்ளர் கண்டங்கத்திரி இலைச்சாறு நன்கு காய்ச்சி நன்றாக வடிகட்டி இரண்டு காதிலும் காலையும் மாலையும் ஊற்றி வா ! அதற்கு முன் மூல மந்திரத்தையும் சக்தி கவசத்தையும் படி ! ஒன்பது நாட்களில் குணப்படுத்தித் தருகிறேன்” என்றிருக்கிறாள்.

நன்றி,
சக்தி. சிவஞானம், விக்கிரமசிங்கபுரம்.
பக்கம் : 20 – 23.
சக்தி ஒளி அக்டோபர் 2009.