அடிகளார்

  திரு கோபாலநாயகர் அவர்களுக்கும்,  மீனாம்பாள் அம்மாளுக்கும் இனிய திருமண பந்தத்தின் மூலம் 03-03-1941 ஆம் ஆண்டு அவர்களுக்கு இராண்டாவது குழந்தையாக நம் அடிகளார் பிறந்தார்.  இத் தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டனர்.   திரு.காளிதாசஸ் திருமதி வரலட்சுமி ஆகியோர் அடிகளாரின் கூடப்பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். “திருமதி மீனாம்பாள் அவர்கள் அடிகளார் பிறப்பதற்கு பிரசவ வலி பொறுக்க முடியாமல் எழுந்த போது குழந்தை திடீரென தலைகீழாக வெளியில் வர அங்கிருந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவா் பிடித்தக் கொண்டார்” என்று அடிகளாரின் பிறப்பை அதிசயமாகக் கூறுவார்கள்.

          எல்லாக் குழந்தைகள் போலவும் அடிகாளாரும் குழந்தைப் பருவத்தில் சீராட்டி வளர்க்கப் பெற்றார். தனது ஆரம்பக் கல்வியை சோத்துப் பாக்கம் ஆரம்ப பள்ளியில் பயின்றார்.   இளம் வயதி்ல் அடிகளார் அமைதியான தோற்றம், அடக்கமான குணம் உடையவராகக் காணப்பட்டார்.  ஆனால் அடிகளாருக்கு இளம் வயது முதற் கொண்டே படிப்பி்ல் நாட்டம் குறைவாகவும், தெய்வத்தின் மீது நாட்டம் கொண்டவராகவும் காணப்பட்டார்.

        அடிகளாரின் சகோதரி தனலட்சுமி இறப்பின் துயரம் தாங்காமல் அடிகளார் சகோதரியை அடக்கம் செய்த இடத்தில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து அழுது கொண்டு இருக்கும் போது வயதான மூதாட்டி ஒருவர் வந்து சொம்பில் தண்ணீர் கொடுத்துவிட்டு மறைந்தாராம்.  இதுவே ஆதிபராசத்தி தன் பாலகனுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்து ஆட்கொண்ட முதல் நிகழ்ச்சி இது எனக் கூறலாம். அடிகளார் வீட்டிலே உறங்கும் போது அவரது திருமேனியில் பாம்பு ஊர்ந்து அன்னை அடிகளாரை பாம்புருவத்திலும் ஆட்கொண்டிருக்கின்றாள்

       அடிகளார் தனது உயர்நிலைக் கல்விக்காக அச்சிறுப்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் என்.சி.சி பயிற்சி பெற்றார். 1960ம் ஆண்டு உயர்நிலைக் கல்வியை முடித்தார்.  படிப்பில் நாட்டம் இல்லாததால் கல்லுாரிக்குச் செல்லவில்லை.  1963-65 வரை இரண்டாண்டுகள் செங்கற்பட்டு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பயிற்சி கற்றார்.  அந்த வேளையில் தான் அன்னை அடிகளாரின் உடலை ஆட்கொள்ள ஆரம்பித்த நேரம்.  பள்ளியில் திடீரென அவரையும் அறியாமல் ஆக்ரோஷமாக உருளுதல் படிக்கட்டுகளில் கீழிருந்து மேலாக உருண்டு செல்லுதல் என்ற செயற்பாடுகள் நடக்குமாம்.

        1966ஆம்  ஆண்டு கிராமத்திலுள்ள அம்மன் கோயிலை சுற்றிவரும் போது அடிகளார் கையில் இருந்த தீபாராதனைத்தட்டு அம்மன் ஆட்கொண்டதால் ஆவேசத்தில் கைகளால் சாதாரணமாக வளைக்க முடியாத தட்டு வளைந்து ஒடுங்கிவிட்டது.  இதன் மூலம் அம்மன் அடிகளார் உருவில் தன் சக்தியை வெளிப்படுத்தினாள்.

         அந்தக் கால கட்டத்தில் தான் 1966ம் ஆண்டு வீசிய புயலில் திரு கோபால்நாயக்கர் நிலத்தில் வளா்ந்திருந்த வேப்பமரம் சாய்ந்து சுயம்பு வெளிப்பட்டதாகவும், பால் வடிந்ததாகவும் இரவு பன்னிரண்டு மணி அளவில் வீட்டிலிருந்து அடிகளார் அங்கப்பிரதட்சணமாக அந்த இடத்தை அடைந்து தனக்கு அந்த இடத்தில் ஆலயம்  அமைக்கச் சொன்னதாகவும் வரலாறு கூறுகிறது.

     அன்றிலிருந்து கூரைக்கொட்டகை அமைத்து அருள்வாக்கு சொல்லுதல், வேப்பிலை மந்திரிப்பு என்பன நடைபெற்றன.  ஆசிரியத் தொழிலிலும் ஆன்மிகத்திலும் தன்னை நெறிப்படுத்தி வாழ்ந்து வந்தார்.

      1968ம் ஆண்டு (04-09-1968) திரு.வெங்கடாசலநாயகா், விசாலாட்சி அம்மையாரின் புதல்வியான இலட்சுமியை தனது இல்லத் துனணவியாக அடைந்தார்.  அதன்
பயனாக அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி, உமாதேவி ஆகிய பிள்ளைச் செல்வங்களைப் பெற்றார்.

எல்லாத் தடைகளையும் உடைத்து அன்னை ஆதிபராசக்தி  ஆன்மிகத்தில் குழந்தைகளாக உள்ள மானிடர்களை, அருள் திரு பங்காரு அடிகளார் திருமேனியில் தன்னை வெளிப்படுத்தி , ஆட்கொண்டிருக்கின்றாள் என்பதுதான் உண்மை.

1. ஆசிரியர், சித்தர், அடிகளார், ஆன்மிககுரு, அம்மா, தெய்வம், என்ற நிலைக்கு உயர்ந்து நிற்பவர்.
2. தான் அவதார புருஷராக இருந்தாலும், மற்றவர்கள் போல சார்! போட்டுத்தான் பேசுவார்.
3. அவர் ஒரு புரியாத புதிர்! அடிகளார் இப்படிப்பட்டவர் என்று எதிர்பார்த்து எடை போட முடியாது

4. ஆன்மிக வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்ட பிறகு, தனக்கென்று தனிப்பட்ட நண்பர்களோ, சீடர்களோ இல்லாதவர்.

5. எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் பழைய பக்தர்களை மறக்க மாட்டார்.

 6. ஒருவரைக் கோபித்துக் கொண்டால் மறுபடியும் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரது இயற்கையான குணம்.
7. எதையாவது விளையாட்டாகச் சொன்னாலும் அதில் ஒரு பொருள் இருக்கும். ஒரு சொல்லில் பல பொருள்படப் பேசுவார்.
8. தன் நடை, உடை, பாவனைகள், மற்றவர்களுக்காகவும் மற்ற இடத்திற்காகவும் மாற்றாதவர். அமெரிக்கா சென்ற போது கூட, நாங்கள் எவ்வளவு கூறியும் தன் கால்களுக்கே காலணி அணிந்து கொள்ள மறுத்துவிட்டார். பக்தர்கள் காலில் விழ ஆரம்பித்ததிலிருந்து காலணி கூட அணிவதில்லை.
9. எந்தத் தடைகள் வந்தாலும் தான் செய்கின்ற பூசை முறைகளைக் கைவிடாமல் தொடர்ந்து செய்பவர்.
10.பக்தர்கள் என்றால் அவருக்கு அலாதிப் பிரியம். எனக்குப் பக்தர்கள் இருக்கிறார்கள் என்று பெருமையாகக் கூறுவார்.
11.
ஆன்மிகம்,குடும்பம் என்ற இரண்டையும் எடுத்துக் கொண்டால் ஆன்மிகத்துக்குத்தான் முதல் இடம். குடும்பத்திற்கு இரண்டாவது இடம் தான்.
12. இந்த நூற்றண்டிற்கு ஏற்றாற்போல ஆன்மிகத்தை எளிமைப்படுத்தி ஏழை எளிய மக்களிடம் ஆன்மிகத்தைக் கொண்டு சென்றவர் அடிகளார்.
13. இன்றுள்ள ஆன்மிகவாதிகளில் ஜனத்தில் பெருத்தவர் அடிகளார்.காரணம் அவர் வளர்க்கும் ஆன்மிகம் பாமரர்களுக்காக!

14. ஆன்மிகத்தில் சாதியை ஒழித்தவர்.. “எல்லா இன மக்களும் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் என்னிடம் வாருங்கள்!” என்று இருகரம் நீட்டி அழைத்துக் கருவறைக்குள் நுழைய வைத்தார். இதுவே அடிகளாரின் ஆன்மிகப் பாதையில் முதல்ப்படி.

15. ஆணாதிக்கம் நிறைந்த இக்காலத்தில் ‘ வீக்கர் செக்ஸ் என்று கருதப்படும் பெண்களை முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட வைத்து அடிகளார் சாதனை. ஆதிபராசக்தி என்பவளே பெண் தெய்வம் தானே? பெண்களைக் கருவறைக்குள் விட்டு அபிடேகங்கள், அலங்காரம், செய்ய வைத்துக் கலச விளக்கு வேள்விப் பூசைகளைக் கற்றுக் கொடுத்து ஆன்மிகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் அடிகளார்.

16. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்பதை உணர்த்திப் புராணங்கள், போதனைகள் வேலைக்கு ஆகாது. சமுதாயத்திற்குத் தேவையான வழியிலேயே ஆன்மிகத்தைப் பரப்ப வேண்டும் என்றூ கருதிச் சமுதாயத் தொண்டு செய்வதன் மூலம் ஆன்மிகத்தில் நிலையான இடத்தைப் பிடித்தவர் அடிகளார்!

17. அடிகளார் காட்டும் ஆன்மிகம் தனித்தன்மை வாய்ந்தது. வழி வழியாக வரும் சில மரபுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் மாறுபட்டது. இந்த ஆன்மிகத்தின் மகிமையை இங்கு வந்து அனுபவத்தில் பயன் கண்டவர்களால் தான் உணர முடியும்.

18. நீங்கள் விரும்பினால் வேலைக்குப் போகலாம்.
விரும்பாவிட்டால் விடுமுறை எடுக்கலாம். அடிகளார் விடுமுறை எடுத்துக் கொள்ள முடியாது. இப்படித் தினமும் உடல், பொருள், ஆவி முன்றையும் ஆன்மிகத்துக்காகவே அர்ப்பணித்து விட்டவர் அடிகளார்.

19. எந்த விழாவை நடத்தினாலும் மக்களுக்குப் பயன் தரும் தொண்டுகளை இணைத்தே நடத்த வேண்டும். என்பது தான் அம்மாவின் குறிக்கோள்.

20. அடிகளார் என்ன சாதித்தார்? என்று சிலர் கேட்கலாம். பெண்கள் ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிக்க இயலாதவர்கள் என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஆன்மிகத்தில் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். எவ்வளவோ பெரியவர்கள் பெண்கள் உயர்வுக்குப் போராடினார்கள். ஆனால் அவர்களால் நினைக்க முடிந்ததைச் சாதிக்க முடியவில்லை. சாதிக்க விடவில்லை. ஆன்மிகத்துறையில் பெண்களைக் கொண்டு வந்து, ஆன்மீக இயக்கத்தை நிறுவியவர் அடிகளார். இன்று இந்த இயக்கத்தில் 90 சதவீதம் பெண்கள்! இயக்கத்தின் வேர்கள் பெண்கள்!”வேள்வி செய்யக் கற்றுத் தருகிறேன். சக்கரம் போடக் கற்றுத் தருகிறேன். அர்ச்சனை செய்யக் கற்றுத் தருகிறேன். கற்றுக் கொள்! நீ செய்!”  என்று அழைத்துக் கற்றுத் தந்தவர் அடிகளார். ஆன்மிகத்தோடு கல்விக்தொண்டு, மருத்துவத் தொண்டுகளில் ஈடுபடுத்தியவர் அடிகளார்.

ஓம் சக்தி!
நன்றி
ஓரு ஆத்மாவின் அனுபவங்கள்