பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. குத்துவிளக்கு கத்தி செய்து வைத்து, நெய்யிட்டுத் திரிகளும் போடப்பட்டிருந்தன. பூஜைக்கு வேறொரு பெரியவரும் வந்திருந்தார். அவர் மனதில், “இந்த பொதிச்சுவாமிகளுக்கு என்ன சக்தி உள்ளது? அனைவரும் இவர்களை ஏன் விரும்பி வழிபடுகிறார்கள்?” என்ற ஐயம் ஏற்பட்டது. அதனை உள்ளுணர்வால் உணர்ந்த சுவாமிகள் புன்னகைபுரிந்து, ஏற்றாது இருந்த குத்துவிளக்குத் திரியைத் தம் கரத்தால் எடுத்துத் தமது வாயினுள் விட்டு வெளியே எடுத்தார்கள். என்ன அதிசயம்! அத்திரி நெருப்பு ஏற்றபட்டிருந்தது. அதனைச் சுவாமிகள் குத்து விளக்கில் வைத்துவிட்டு அந்தப் பெரியவரைக் கடைக்கண்ணால் நோக்கினார்கள். அன்னார் உடனே எழுந்து சுவாமிகளின் அடிபணிந்து வணங்கி ஆசிபெற்றார். இதனால் சுவாமிகளின் உள்ளே சதா ஜீவாக்கினி சுவாலைவிட்டு எரிந்த வண்ணமிருக்கும் என்பதை அறிகிறோம்.

“சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடற்றீபம் வைத்தகர்ப்பூ ரம்போல் வயங்கும் பராபரமே”

எனத் தாயுமான சுவாமிகள் கூறியது போல்,

“உச்சிக்கு நேரே உள்நாவுக்குமேல் நிதம் வச்ச விளக்கு எரியுதடி”

எனக் குதம்பைச் சித்தர் கூறியது போல், தமது சிர நடுவில் இருக்கும் உயிர் ஒளியைச் சுவாமிகள் சதா அனுபவித்து மகிழ்ந்தார்கள் என்பது திண்ணம்.

சுவாமிகள் பாதயாத்திரையாய்ப் பல ஊர்கள் சுற்றி வரும்போது ஒரு சமயம் கருவையை அடுத்த பெருமுத்தூர் சாவடியில் தங்கி இருந்தார்கள். அப்போது யாரோ போக்கிரிகள் சுவாமிகளது உடைமைகளைத் திருடிச் சென்று விட்டனர். தமது அத்திமக் காலத்திற்கு சுவாமிகள் சேகரித்து வைத்திருந்த சிறு பொருளும் களவாடப்பட்டது. சுவாமிகள், “இந்தச் சுமையும் தேவையில்லையெனப் பரதேவதாவின் ஆணை போலும்.” என்றெண்ணி வாளாயிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற தவத்திரு பொன்னையா சுவாமிகள் இராஜபாளையத்திலிருந்து பெருமுத்தூர் வந்தார்கள். சுவாமிகளைக் கண்டு பேசி, சமாதானப்படுத்தித் தம்முடன் இராஜபாளையம் அழைத்துச் சென்றார்கள். அது முதல் பொதிச் சுவாமிகள் பொன்னையா சுவாமியுடன் அவர்களது இல்லத்திலேயே இருக்கலானார்கள்.

ஒரு பௌர்ணமி நாளில் பொதிச் சுவாமிகளும், பொன்னையா சுவாமிகளும் ரெங்கசமுத்திரம் என்ற ஊரில் இருந்தார்கள். அன்று இருவரும் கரிவலம் வந்த நல்லூர் கடல்வண்ண நாதரைத் தரிசிக்க வேண்டும். அதற்குப் புறப்படும் பொழுது திடீரெனப் பெருமழை இடிமின்னலுடன் பெய்யத் தொடங்கியது. இவர்கள் போகவேண்டிய வழியோ கரிசல் காடு. போதிய சாலை வசதிகள் இல்லாத பகுதி. மேலும் சேறும், சகதியும் நிறைந்திருக்கும் பூமி! சரியான மாடுகள் பூட்டிய வண்டி இருந்தால் தான் கருவை செல்ல முடியும்.

சுவாமி “இனி நாம்பால் கண்ணனை எப்படித் தரிசிக்க முடியும்?” என்று பொதிச் சுவாமிகளை பொன்னையா சுவாமிகள் வினவினார்.

அதற்குப் பொதிச்சுவாமிகள், கடமைப்பட்ட ஒருவன் வண்டி கொண்டு வருவான். அதிலே நாம் போகலாம். கவலை வேண்டாம், சுவாமி” என்றார்கள்.

அந்த நேரத்தில் மணக்கோலத்திலுள்ள ஒரு வாலிபன் முரட்டுக் காளைகள் பூட்டிய வண்டியுடன் அங்கு வந்து சுவாமிகளை வணங்கி நின்றான். சுவாமிகளின் ஆசி பெற்றதும், “சுவாமி! தங்களைக் கருவையில் கொண்டு விட இதோ வண்டியுடன் வந்துள்ளேன் என்றான்.

“அப்பா நீ மணக்கோலத்தில் இருக்கிறாயே, இந்த வேளையில் நீ எப்படி எங்களைக் கருவையில் விட்டு வருவது?” எனப் பொன்னையா சுவாமிகள் கேட்டார்கள்.

“அந்தச் சேவையைவிட எனக்கு திருமணச் சடங்குகள் பெரிதல்ல. உங்களைக் கருவையில் சேர்த்துவிட்டு வந்து நான் எனது மற்றக் காரியங்களைக் கவனிக்கிறேன். இது என் தாயாரின் ஆணை, சுவாமி”, என விடாப்பிடியாய்க் கூறினான் அந்த வாலிபன். பொதிச்சுவாமிகள் புன்னகைப் புரிந்தார்கள்.

சுவாமிகள் இருவரும் வண்டியில் ஏறி கருவைக்கு மெதுவாகப் பயணமானார்கள். வழியில், “தனது தாயாரின் ஆணை என்று அந்த வாலிபன் சொன்னானே, அதன் அர்த்தம் என்ன, சுவாமி?” எனப் பொதிச்சுவாமிகளைக் கேட்டார்கள் பொன்னையா சுவாமிகள்.

“இவன் உலகில் பிறந்ததே நமது அருளாசியால்தான். எனவே தான் அவனது தாயார் அவ்விதம் கட்டளையிட்டுள்ளாள்” என்கிறார்கள் பொதிச்சுவாமிகள்.

“விளக்கமாய்க் கூறுங்கள் சுவாமி” என்றார்கள் பொன்னையா சுவாமிகள்.

“இவனது தாயார் அப்போது கன்னியாக இரந்த சமயம். ஒரு நாள் இவர்களது வீட்டுத் திண்ணையில் எனது மூட்டைகளுடன் நான் அமர்ந்திருந்தேன். மாதவிலக்காய் இருந்த இவளது தாயார் வீட்டினுள் நீராடினாள். அந்தத் தீட்டு நீர் தண்ணீர்ப் போக்கி வழியாக திண்ணை மீது வடிந்தது. அங்கிருந்த எனது மூட்டைகளை அசுத்தப் படுத்தியது. உடனே நான் அருவருப்புக் கொண்டு “கவனம் இல்லாமல் இப்படியா ஒரு துறவியை அசுத்தப்படுத்துவது?” எனக் கடிந்து அவ்விடத்தை விட்டகன்றேன். என்ன செய்வது? விதி விளையாடியது. அன்றிலிருந்து பருவ மங்கையான இவனது தாயார் தனது தனங்களை இழந்து அலியானாள். என் வழியே நான் சென்று விட்டேன். தன் மகளுக்கு ஏற்பட்ட திடீர்க் கோளாறு கண்டு அவளது தகப்பனார் பதறித்துடித்தார்.

என்னென்னவோ மருத்துவமும், பரிகாரமும் செய்து பார்த்தார். ஒன்றிலும் குணம் ஏற்படவில்லை. இறுதியாய், ஒஒரு சோதிடர் ஆருடம் பார்த்து, “இது மகான் பொதிச் சுவாமிகளுக்கு அறியாமல் செய்த தீங்கால் விளைந்த கோளாறு. எனவே இதை அவர்களால்தான் மாற்றியமைக்க முடியும். எனவே அவர்களின் அருளை நாடுங்கள்” என அறிவுரை கூறினார். அதன்படி அவனது தந்தை பலகாலம் தேடி, என்னைக் கடைசியில் சங்கரன் கோயில் கோமதியம்மன் ஆலயத்தில் கண்டுபிடித்தார். தனது குறையை கூறி அழுதார். “சரி, தீரும் காலம் வந்துவிட்டது. நீ சென்று கோமதியம்மன் அபிஷேக நீர் ஒருகுடமும், கோயில் புற்றுமண் ஒரு பிடியும் எடுத்து வா”, என அவரிடம் கூறினேன். அதன்படி எடுத்து வந்த அவரை அழைத்துக் கொண்டு அவரது இல்லம் சென்றேன். அங்கு இவனது தாயாரை நீராடி அமரச் செய்து, குட அபிஷேக நீரில் புற்றுமண்ணைக் கலந்து, வேப்பிலையை அதில் முக்கி முக்கி, அந்த அபிஷேக நீர் தீரும்வரை அவளது சிரசிலும் முகத்திலும் பரதேவதாவை வேண்டி அடித்து, அக்குறையை மாற்றினேன். அதன்பின் அவளுக்கு நல்ல விதமாய் திருமணமாகிப் பிறந்தவன்தான் இந்த வாலிபன். அந்த நிகழ்ச்சிக்குப் பின் அந்தக் குடும்பத்தாரை நான் காணவில்லை” எனக் கூறினார்கள் பொதிச்சுவாமிகள்.

அதைக் கேட்ட மணக்கோல வாலிபன், “ஆமா சுவாமி! சதா என் தாயார் உங்கள் நினைவாய், உங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாள். உங்களை எங்கு கண்டாலும் வணங்கிச் சேவை செய்து ஆசி பெறவேண்டும் என எனக்குக் கட்டளையிட்டுள்ளான். இன்று காலையில்தான் என் திருமணம் நடந்தது. அது சமயம் தாங்கள் இங்கு வந்திருப்பதாயும், கருவை செல்ல வண்டி தேவைப்படுவதாயும் தகவல் கிடைத்ததும், என் தாயார்தான் என்னை உடனே இந்த வண்டியை எடுத்துச் சென்று உங்களுக்குப் பணிவிடை செய்து ஆசிபெற்றுவரச் சொன்னாள் சுவாமி” என மிக ஆர்வத்தோடும் நன்றியோடும் கூறினான். இவ்விதம் பேசிக்கொண்டு ஒரு விதமாய்க் கருவை வந்து சேர்ந்தார்கள் சுவாமிகளைக் கருவையில் விட்டுவிட்டு அந்த மணக்கோல வாலிபனும் மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றான்.

சுவாமிகள் இருவரும் கருவை வந்தடைய அதிக நேரமானதாகையால் பௌர்ணமி பூசையெல்லாம் முடித்துக் கோவிற் கதவுகளை அடைத்துவிட்டார்கள். அதைக் கண்ட சுவாமிகளுடைய மனம் வருந்தியது. என்ன செய்வது? சுவாமிகள் இருவரும் கோயில் திண்ணையில் படுத்துக்கொண்டார்கள். பொன்னையா சுவாமிகள் பௌர்ணமி பூசை முடிந்துவிட்டதே என்று வருத்தப்படுவதை பொதிச் சுவாமிகள் ஊகித்துணர்ந்தார்கள். இரவு சுமார் மணி பன்னிரெண்டு இருக்கும் பொதிச்சுவாமிகள் பொன்னையா சுவாமிகளை எழுப்பி, “சுவாமி! எழுந்திருங்கள். பால்வண்ண நாதருக்குப் பாலாபிஷேகம் நடக்கப் போகிறது” என்றார்கள். அதுகேட்டுப் பொன்னையா சுவாமிகள் உடனே எழுந்தார்கள். கோயில் கதவுகள் தாமாகத் திறக்க, சுவாமிகள் இருவரும் கோயிலுக்குள் சென்றார்கள். மேள ஒலியும், மணி ஓசையும் கேட்கத் தொடங்கின. மலர்கள் தாமே மாலையாக மாறிப் பால்வண்ண நாதரின் கழுத்திலே விழுந்தன. மந்திரம் ஒலித்தது. ஒரு தட்டிலே சூடம் கொளுத்தப்பட்டு, தீபாராதனை பெருஞ்சுடராய் திகழ்ந்தது. பொதிச் சுவாமிகளின் அருளால் கோலாகலமாய்ப் பூசை நடக்கும் பால் வண்ண நாதரை மிக்க மகிழ்வோடு தரிசனம் செய்தார்கள் பொன்னையா சுவாமிகள். அதன் பின்னர் வெகு விமரிசையாக மேளவாத்தியங்கள் முழங்க, பால்வண்ண நாதருக்குக் குடம்குடமாகப் பாலாபிஷேகம் நடந்தது. யாவும் கண்டு களித்தார்கள். அவர்களுடைய கையிலும் பால் நிறைந்தது. மனமார அருந்தினார்கள். பால்வண்ண நாதரைக் கண்குளிர, மனம் மகிழத் தரிசனம் செய்து திரும்பினார்கள். “என்ன சுவாமி? பாலாபிஷேகம் நடந்ததா? அபிஷேகம் பால் பருகினீர்களா?” என்று பொன்னையா சுவாமிகளைப் பார்த்துப் பொதிச்சுவாமிகள் வினவினார்கள். “ஆமாம், அமிர்தக் கடலில் ஆனந்தத் தாண்டவம் ஆடினேன்” என்றார்கள் புன்முறுவலோடு பொன்னையா சுவாமிகள். பொதிச் சுவாமிகளின் அருள்சக்தியை அவர்கள் அறிவார்கள்.

தாம் திருவருள் பெற்ற திருத்தலமான கருவையிலேயே தமது அந்திமக் காலத்தைக் கழிக்க எண்ணினார்கள் பொதிச்சுவாமிகள். ஆகவே அவர்கள் விருப்பப்படியே பொன்னையா சுவாமிகள் கருவை ஊருக்குத் தென்புறம் முப்பது ஏக்கர் நிலம் வாங்கி, அதில் கருவை சங்கரன் கோயில் சாலையோரம் ஆசிரமம் அமைத்து, பொதிச் சுவாமிகளுடன் தாமும் குடியேறினார்கள். பல ஆண்டுகள் சுவாமிகள் அங்கிருந்து, தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். சங்கரன் கோயில் ஆடிந்தபசிற்குச் செல்லும் பக்தர்களுக்கு நீர்மோரும், பானகமும் அன்புடன் வழங்கி ஆசி கூறினார்கள் பொதிச்சுவாமிகள்.

கருவை ஊரைத் தாண்டி தென்திசையில் ஒதுக்கமாய் தற்போதுள்ள இடத்தைப் பொதிச்சுவாமிகள் தேர்ந்தெடுத்தபோது, பொன்னையா சுவாமிகள், “என்ன சுவாமி, ஊரைவிட்டு இந்தப் பொட்டல் காட்டில் நம் குடியிருப்பை அமைக்கச் சொல்கிறீர்களே, சரிப்பட்டு வருமா? இதுவோ திறந்த வெட்டவெளி. இங்கே அடிக்கிற காற்றிலே விளக்கேற்றினால் அணைந்துவிடுமே!” எனச் சந்தேகப்பட்டுக் கேட்டார்கள் உடனே பொதிச்சுவாமிகள், “சுவாமி இந்த இடந்தான் நமக்கேற்ற வெட்டவெளி. வருங்காலத்தில் இது தோப்புள் போல் விளங்கும். இதைச் சுற்றியே ஊர் பெருகி விருத்தியாகும். இங்கே எந்தக் காற்றிலும் அணையாத் தூண்டா விளக்கு எரியும். கவலை வேண்டாம்” என்றருளினார்கள். அதன்படியே, இன்று கருவைக்கு வடக்கில் நிஷேப நதியும், வயலும் இருப்பதால், ஊரின் வளர்ச்சி தெற்கேதான் ஏற்பட்டு வருகிறது. பொதிச்சுவாமிகளின் சமாதிக் கோயிலைச் சுற்றித்தான் உயர்நிலைப் பள்ளி, மருத்துவமனை ஏனைய அரசு அலுவலகங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்தக் காற்றிலும் எரியும் மின் விளக்கும் வந்துவிட்டது. சுவாமிகளின் அருள்வாக்குப்படி யாவும் நிகழ்ந்து வருகின்றன.

ஒரு சமயம் கருவையில் கொசுக்கடி தாங்கமுடியாது பொதிச்சுவாமிகள் சங்கடப்பட்டார்கள். எனவே மழை பெய்தால்தான் கொசுக்கடிக்குமெனக் கருதி, கருவையிலேயே சில காலம் மழை பெய்யது செய்து விட்டார்கள். பின்னர் அவர்கள் சமாதியடைந்த அன்று அடி மின்னலோடு பெரும் மழை பெய்தது. பஞ்ச பூதங்களும் சுவாமிகளது சித்தப்படி இயங்கின. எப்பொழுதும் பொதிச்சுவாமிகள் தம் பக்கத்தில் பல சுரக்குடுக்கைகள் வைத்திருப்பார்கள். அவர்களைத் தரிசிக்க வரும் பக்தர்கள் அருகில் இருக்கும் சுரக்குடுக்கை ஒன்றில் காலணா, அரையணாவைப் போடுவார்கள் பக்தர்கள் பணம் போடும் போது சுரக்குடுக்கையில் ஒன்றுமிருக்காது. பின், அதே குடுக்கையிலிருந்து சுவாமிகள் நிறைய விபூதியை எடுத்து பக்தர்களுக்குக் கொடுப்பார்கள். காண்போர்க்கு இது ஓர் அ பூர்வ அதிசயமாய்த் தோன்றும்.

தவத்திரு பொன்னையா சுவாமிகளின் மூத்த மகன் டாக்டர் பொன்குருசிரோன்மணிக்கு அப்போது வயது ஆறு. பள்ளிக்கு முறையே செல்லாது படிப்பில் கவனமின்றி, பிடிவாத குணம் மிதமிஞ்சி, சதாத் தொல்லைகள் கொடுத்து வந்தார். அவற்றைத் தாங்கொணாது ஒரு நாள் அவரது தாயார் அவரை மிகவும் கடிந்து அடித்தார்கள். அதைக் கண்ட பொதிச் சுவாமிகள், “அவனை இப்போது யாதொரு தொந்திரவும் செய்யாதீர்கள். அவன் பத்து வயதிற்கு மேல்தான் கவனமாய்ப் படிப்பான். பின்னர் நாட்டில் சிறந்த சித்த வைத்தியனாய் விளங்குவான்”, என்றருளினார்கள். சுவாமிகளின் அருள் வாக்குப்படியே அவர் பத்து வயதிற்குமேல் தான் நன்கு படித்தது மட்டுமின்றி, தமது உடன் பிறப்புக்களையும் நன்கு படிக்குமாறு தூண்டினார். பின்னர் அவர் சிறந்த மருத்துவராகி, தமிழ்நாடு சித்த மருத்துவ இயக்குநராகச் சிறப்புறப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவ்விதம் வரும்பொருள் உரைக்கும் அருங்குணக்குன்று பொதிச்சுவாமிகள்.

ஒரு நாள் சிவகாசி அன்பர் ஒருவர் பொதிச்சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். சுவாமிகளிடம் ஆசி பெற்ற பின், “நீ கொஞ்சம் காத்திரு, பக்கத்துப் பட்டியிலிருந்து இருவர் தமது உறவினர் ஒருவரைப் பாம்பு கடித்து இறந்து விட்டாரென எண்ணித் தூக்கி வருவார்கள். அவர்களிடம் இந்த விபூதியைக் கொடுத்து மாண்டவராய்க் கருதப்படுபவரின் நெற்றியிலும், பாம்புகடித்த வாயிலும் பூசச்சொல். சிறிது நேரத்தில் யாவும் குணமாகி, பாம்பு கடித்த அந்த ஆளும் விழித்தெழுவார். நான் ஓய்வு எடுக்கப் போகிறேன்” எனக் கூறி விபூதியும் அளித்தார்கள். அதன்படியே கொஞ்ச நேரத்தில் மயங்கிய நிலையில் ஒருவரை, இருவர் அழுது புலம்பிய வண்ணம் தூக்கி வந்தனர். அதைக் கண்ட சிவகாசி அன்பர் சுவாமிகள் வாக்குப்படி விபூதியை அளித்துப் பூசச் செய்தார். சிறிது நேரத்தில் சுவாமிகளின் அருள் வாக்குப்படி பாம்பு கடித்த அந்த ஆள் சுகமே விழித்தெழுந்து அமர்ந்தார். சுற்றியிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். என்னே சுவாமிகளின் தீர்க்க தரிசனம்!

முனிசிபல் மனேஜர் திரு.சுப்பையா நாயுடு அவர்கள் ஒரு சமயம் வயிற்றுவலியால் அவதியுற்றார். இரத்தமாய் வயிற்றுப் போக்குக் கண்டு சோர்வுற்றார். சுவாமிகளின் பக்தரானவர் அவர் தனது அன்பர் திரு.வெங்கடராமய்யர் அவர்களுடன் கருவை வந்து, சுவாமிகளிடம் முறையிட்டார். சுவாமிகள் உடனே தன்னருகில் ஒரு தேங்காய்ச் சிரட்டையில் இருந்த பச்சைமிளகாய் துவையலில் மூன்று உருண்டை உருட்டிக் கொடுத்து, அவற்றை உண்ணச் சொன்னார்கள். “இதென்ன சுவாமி, பச்சைமிளகாய்த் துவையலா வயிற்றுப் போக்கிற்கு மருந்து? நாயுடு இதைச் சாப்பிட்டு குணமடையவா அல்லது சாகவா?” எனக் கேட்டார்.

தொடரும்..

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 10 (1982) பக்கம்: 25-30

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here