03.03.1997 அன்று அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி பாரிஸ் நகரில் அம்மாவின் பக்தா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து வேள்வி செய்தோம்.

மாவிலை, வேப்பிலை, வாழையிலை, பூசணிக்காய் உட்பட எல்லாப் பொருள்களையும் முதலிலேயே சேகரித்துத் தயாராக வைத்திருந்தோம். பூசைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி விட்டோம்.

பிரசாதங்கள் செய்யும் பணி ஒரு பக்கம், அன்னதானத்திற்கான சமையல் மறுபக்கம் எனச் சக்திகள் பலா் சமையலறையில் இயங்கிக் கொண்டிருந்தனா்.

ஒரு கூடத்தில் அம்மா எங்கட்கு உணா்த்தியபடி யாக குண்டம்
அமைத்திருந்தோம். கருவறை அன்னைக்கும், அம்மாவிற்கும் மலா் மாலைகளால் அலங்காரம் செய்தோம். விநாயகா் கலசம், சமபக்க முக்கோணத்தில் மூன்று கலசம், அம்மாவின் முன்பாக ஒரு கலசம் என ஜந்து கலசங்கள் வைத்தோம். நிறைய அகல் விளக்குகள், ஓம்சக்தி விளக்குகள், குத்து விளக்குகள் என ஏற்றினோம். பூசை ஒழுங்குகள் நிறைவு பெற்றதும்…

படத்தில் ஓா் அற்புதம் அம்மாவிற்குப் பாதபூசை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் அந்த அற்புதம் நடந்தது.

முதலில் நான் அம்மாவின் பாதத்திற்குப் பால் அபிஷேகம் செய்துவிட்டு நிமிர்ந்ததும், சற்று மேலேயிருந்த அம்மாவின் திருமுகத்தில் விழிகளிலிருந்து கண்ணீா் மணிமணியாகச் சிந்திக் கொண்டிருந்தது.

எனக்கு அடுத்து அபிஷேகம் செய்த நால்வருக்கும் இந்த அற்புதம் தெரிந்தது. சிரித்துக்கொண்டிருந்த அம்மாவின் விழிகளில் இருந்து வழிந்தது ஆனந்தக் கண்ணீா்தான்!

கூடியிருந்த பக்தா்கள் எல்லோரும் பாதபூசை செய்ததும், அம்மாவின் பாதத்திற்கு வேப்பிலைச் சரம், மலா்ச் சரங்களால் அலங்காரம் செய்து அழகுபடுத்தினோம்.

கருவறை அன்னை, அம்மா, அம்மாவின் திருவடி, ஜந்து கலசம் என எல்லாவற்றிற்குமாக எட்டு சக்திகள் அம்மா உணா்த்தியபடி அா்ச்சனை செய்ய அமா்ந்தார்கள்.

ஓம குண்டத்திற்கு நெய் ஊற்ற இருவா் அமா்ந்தார்கள்.

மந்திர நுால் எல்லோருக்கும் படிக்கக் கொடுக்கப்பட்டது.

மந்திரம் படிப்பதற்காக நியமிக்கப்பட்ட மகளிர் சக்திகளுடன் யாவரும் சோ்ந்து மந்திரம் படித்தார்கள்.

மதியம் 2.20 மணியளவில் பூசை இனிதே நிறைவு பெற்றது.

அத்தனை பக்தா்களும் பிரான்ஸில் இப்படி ஒரு பூசையில் பங்கு கொண்டதைப் பற்றி மிகுந்த
சந்தோஷப்பட்டார்கள்.

மந்திரம் படிப்பதிலேயே கவனமாக இருந்ததால், பூசையை முழுவதுமாக தரிசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு. அம்மா பக்தரான சக்தி அரன் ( haran) மிகவும் ஆசையுடன் வீடீயோ எடுத்திருந்தார். இரவு சக்தி ஆறுமுகம் குடும்பத்தினரும், நாங்களும் உட்கார்ந்து வீடீயோ  கேசட்டைப் போட்டோம்.

அம்மாவிற்குப் பாதபூசை நடைபெறுகிற அந்த வேளையில் தெரிந்த காட்சி எங்கள் யாவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

அம்மாவை வைத்திருந்த இடத்திற்குப் பின்னால் உள்ள சன்னலில் போடப்பட்டிருந்த சிவப்புத் துணியில் இரண்டு கரங்களாலும் ஆசீா்வதித்த வண்ணம் அம்மா காட்சியளித்தார்கள்.

பரவசத்துடன் எழுந்து அம்மா! அம்மா என எல்லோரும் குதுாகலித்தோம். சக்திகள் ஆறுபேருக்கு மட்டுமே அம்மா இந்தத் தரிசனத்தைத் தந்தாள்.

அம்மாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீா் சொரிந்த அந்த நேரம் -தான் வந்திருப்பதைத்தான் அம்மா எங்களுக்குப் புலப்படுத்தியிருந்தாள்.

ஆனால்… அதை எங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனதை எண்ணி ஏங்கி நின்றோம்.

பிரான்ஸில் முதன்முதல் அத்தனை பக்தா்களும் செவ்வாடையணிந்து அமைதியுடனும், பக்தியுடனும் நடத்திய பெரிய பூசை அம்மாவின் திருநாளையொட்டி நடந்த அந்த வேள்விப்பூசையே ஆகும்.

நன்றி – ( சக்திபிரியா இளங்கோவன், பாரிஸ்)

(அன்னை அருளிய வேள்வி முறைகள் ,பக்-283-284)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here