வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு; அப் பிரச்சனைகளுக்கு மௌனத்தால்தான் தீர்வு காண வேண்டும்.

“பொறுமையாக இருந்தால் பெருமைஅவசரப் பட்டால் அவஸ்தை”

“நீ பொறுமையாக இரு உனக்கு எல்லாம் பெருமையாகச் செய்து தருகிறேன்” என்ற அம்மாவின் வழிகாட்டி உரைகளை உணர்வு பூர்வமாக உணரும் வாய்ப்பு சமீபத்தில் என் வாழ்வில் ஏற்பட்டது. அது எனது தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், சரியானால் சக்தி ஒளிக்கு எழுதுவதாக வேண்டுதல் வைத்த காரணத்தால் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நான்கு வருடங்கள் என்னோடு திருமண வாழ்க்கை நடத்திய என் கணவர் திடீரென்று எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாமல் வீட்டிலிருந்து சென்றுவிட்டார். தொலைபேசி வாயிலாக என் தாய் தந்தையரிடம் ‘இனிமேல் உங்கள் மகளோடு வாழ விருப்பமில்லை. அவளைப் பற்றிய பொறுப்பு உங்களுடையது’ என்று குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி விட்டுச் சென்று விட்டார்.

அதிர்ச்சியடைந்த நிலையில் நேராக குருநாதரிடம் ஓடினேன். செய்தியை அழுதுகொண்டே கூறினேன். அப்பொழுது அம்மா சொன்னது, “நீ கம்முன்னு (மௌனமாக) இரு; நான் அவனை வர வைக்கிறேன்” என்றார்கள்.

சொந்த பந்தம், சுற்றம் நட்பு என்று பலவகையிலும் பலப்பல நெருக்கடி கொடுக்கப்பட்ட நிலையிலும், நான் அம்மாவிடம் வேண்டிக்கொண்டது (இப்போதும், எப்போதும் வேண்டிக் கொள்வது) ஒன்றே ஒன்றுதான். “அம்மா! அடியேன் எப்போதும் உங்கள் வழிநடத்தலுக்குக் கீழ்ப்படிந்து நடக்க அருள் செய்யுங்கள்” என்பதேயாகும்.

மேலும், அருள்வாக்கில் அம்மா, “பொறுமையாக இரு” என்று வலியுறுத்தினார்கள்; குருவை மட்டும் நம்பியிரு; குரு இருக்கும்போது நீ எதற்குக் கவலைப் படுகிறாய்; கவலைப்படாதே மகளே” என்று கல்லும் கரைந்து விடும் கருணையோடு கூறினார்கள்.

நானும் அவளருளால் அவளை நினைத்தபடி, அவளது தொண்டுகளைத் தொடர்ந்தபடி வாழ்ந்து வந்தேன். விவாகரத்து செய்யுமளவுக்கு மலையளவு உயர்ந்த பிரச்சனைகளைக் கண்டு பெற்றாரும், உற்றாரும் செய்வதறியாது மலைத்து நின்றார்கள்.

அம்மா சொன்னதுதான் இறுதியில் நடக்கும் என்ற முழு நம்பிக்கையோடு அவளருளால் அவள் திருவடியில் சரணாகதி அடைந்துவிட்டேன். என்னைத்தவிர கிட்டத் தட்ட அனைவரும் இனிமேல் ஒன்று சேர்வது என்பது நடக்கவே நடக்காது என்றே முடிவு செய்து விட்டார்கள். அம்மாவோ மறுபடி மறுபடி என்னிடம், “வாயை மூடிட்டு கம்முன்னு இரு; பேசாதே; அவன் வந்திருவான் பாரு” என்று கூறி வந்தார்கள்.

10 மாதங்கள் எவ்வளவோ அவமானப்படுத்தினார்கள்; கேட்கக்கூடாத கேள்வி மேல் கேள்விகேட்டு புண்படுத்தினார்கள். அம்மாவையே எண்ணிக்கொண்டு அத்தனையையும் அவள்ருளால் பொறுமையாகத் தாங்கிக்கொண்டு மௌனமாகவே இருந்தேன்.

இதோ அம்மா சொன்னபடி என் கணவர் அவராகவே வந்துவிட்டார். அம்மா கூறுவதுதான் நடக்கும் என்பது சத்தியமான உண்மை.

ஓம் சக்தி!
சக்தி ஒளி – ஆகஸ்ட்டு 2015
(பக்கம் 14-15)