மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்திரைப் பௌர்ணமி விழாவை முன்னிட்டு, இன்று மதியம் ஒரு மாபெரும் கலச விளக்கு வேள்வி பூசையை பங்காரு அடிகளார் நடத்தினார். 1008 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த வேள்வியில் பங்காரு அடிகளாரின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பெருந்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேள்வியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் P. ஜோதிமணி, P. முருகேசன், B. ராஜேந்திரன்,

T.S சிவஞானம், தென்னக ரயில்வே மற்றும் பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை பொது மேலாளர் M.S. . ஜெயந்த் , I.R.T.S இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்.M.S. சுந்தரராஜன், தமிழக திட்டக்கமிஷன் உறுப்பினர் மற்றும் செயலர் அருண்மொழி இரயில்வே உயரதிகாரி சிவானந்தம் I.R.T.S.தஞ்சையில் உள்ள இந்திய பயிர்பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் K அழகு சுந்தரம் முதலியோர் பங்கேற்றனர். சித்தர் பீட வளாகத்தின் உள்ளே நுழைந்தால் ஒரு நாகபோகத்தினுள் நுழையும் உணர்வு ஏற்பட்டது. ஒரு தலை நாக யாக குண்டங்களும், இரு தலை நாக யாக குண்டங்களும் ஏராளமான அளவில் அமைக்கப்பட்டிருந்தன. சித்தர் பீட உள்பிரகாரம் முழுவதும் திரிசூல வடிவிலான யாக குண்டங்களும், குரு சக்கரம், நவகிரக சக்கரம், உலகச் சக்கரம், காளிச்சக்கர யாக குண்டம் மற்றும் சதுர, வட்ட, ஐங்கோண, அறுகோண, எண்கோண, டைமண்ட் வடிவிலான யாக குண்டம் முதலியவையும் அமைக்கப்பட்டிருந்தன. சக்கரங்களின் மேல் 702 ராஜ ராஜேஸ்வரி கலசங்களும் 10008 கலசங்களும், 10008 விளக்குகளும் வெவ்வேறு சக்கர வடிவங்களில் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.

பகல் 12.10 மணிக்கு கருவறை முன்புறமாக நவாம்ச நிலைகளைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பங்காரு அடிகளார் வேள்வியைத் துவக்கி வைத்ததும், வேள்வியின் சங்கல்பங்களை மகளிர் படித்தனர். மாதா, பிதா, குரு, தெய்வ வழிபாடு செழித்தோங்கவும், ஐம்புலன்களை அடக்கி மக்கள் ஆன்ம வளர்ச்சி பெறவும், இயற்கை வளங்கள் உருவாக்கிய செயற்கை வளங்கள் பெருகவும், உலகில் தர்ம வளங்களும், தாய்மை வளங்கள் பெருகவும், மக்களிடையே மண்ணாசை, அதிகார ஆசை, ஆணவ ஆசை, பிறரை அழிக்கின்ற ஆசை அழியவும், உலக மக்களிடையே செழிப்பையும், அமைதியையும் அருளவும் அன்னை ஆதிபராசக்தியை வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1008, 108 மந்திரங்கள் தமிழில் படிக்கப்பட்டு வேள்வி தொடர்ந்து நடைபெற்றது. பொது மக்களும், யாக வேள்வியில் பங்கேற்க வசதியாக கருவறையின் எதிரில் உள்ள ஓம்சக்தி மேடை மண்டபத்தில் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய சதுர வடிவ யாக குண்டத்தில் பொதுமக்கள் சமித்துகளும், நவதானியங்களும் இட்டு பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற வேள்வி நிறைவுற்றதும், வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் விளக்குகளை தங்கள் வீடுகளில் வைத்து பூசை செய்ய பக்தர்கள் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

வேள்வியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்னதானத்தை சக்தி கோ.ப. அன்பழகன் துவக்கி வைத்தார். பக்தர்களை பாதுகாப்புடன் வரிசைப்படுத்தி உள்ளே அனுப்பி, வெளியே அனுப்பி வைக்கும் பணிகளை ஆதிபராசக்தி இளைஞர் அணி மற்றும் பாதுகாப்புக் குழுவினர் சக்தி. கோ.ப. செந்தில்குமார் தலைமையில் சிறப்பாகச் செய்தனர். விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், தஞ்சை, திருவாரூர், நாகை, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற பக்தர்களும் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்..]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here