மேல்மருவத்தூரில் உள்ள அன்னைக்கு உவப்பான விழாக்கள் மூன்று. அவை 1. ஆடிப்பூரம் 2. நவராத்திரி 3. தைப்பூசம். இந்த மூன்று விழாக்களையும் கொண்டாடும் வழி முறைகளை அம்மாவே சொல்லி அருளினாள். நவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவும், வருகின்ற பக்தர்கட்கு நலம் புரியவும் அன்னை ஏற்படுத்திக் கொடுத்த முறைகளை ஒட்டியே இந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அகண்ட விளக்கு

ஒன்பது நாள் கொண்டாடுகின்ற இந்த நவராத்திரி விழாவுக்கு முதல் நாளே அன்னையால் அகண்ட விளக்கு ஏற்றப்படும். அந்த அகண்ட விளக்குக்கு முன் அன்னை அமர்ந்து அந்தத் திரியை வாயாலேயே ஊதி ஏற்றுவது உண்டு. மற்றவர்களை ஏற்றச் செய்து அந்தத் திரியிலிருந்து புறப்பட்ட ஒளிப் பிழம்பை வாயால் உறிஞ்சுவது உண்டு. ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் என்ன என்பது நம் சிற்றறிவுக்குப் புரியவில்லை.

நவராத்திரி விழா இறுதிவரை விளக்கு எரிய வேண்டும் நவராத்திரி விழாவிற்கு முதல் நாள் மாலையில் ஏற்றப்படும் இந்த அகண்ட விளக்கு விழா முடியும் வரை தொடர்ந்து எரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது தொண்டர்கள் பொறுப்பு. இதற்காக முறை போட்டு கொண்டு தொண்டர்கள் ஒன்பது நாளும் விழித்துக் கொண்டும் கண் காணித்துக் கொண்டும் இருப்பார்கள்.

கருவறையில் ஏற்றப்படும் இந்த அகண்ட விளக்கைக் கருவறையில் இருந்து அன்னையால் நியமிக்கப்படும் மூவர், குளித்துவிட்டு ஈர உடையோடு அதனைக் கருவறையில் இருந்து எடுத்து வர வேண்டும். கோயில் பிரகாரத்தை சுற்றி ஒரு முறை வலம் வந்த பிறகு மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டுக் கருவறையின் மூலையில் எண்ணெய் நிறைந்த மண்பானையின் மேல் வைக்கப்படும்.

கருவறையை விட்டுப்பிரகாரத்தை வலம் வரும் போது பக்தர்கள் அந்த ஒளியினைக் கையால் ஒற்றி எடுத்து முகத்தில் தேய்த்துக் கொள்வதும், அந்த ஒளியின் அருகில் முகத்தைக் காட்டித் தரிசிப்பதும் பயன் தரும் என்பது அன்னையின் அருள்வாக்கு!

மெளனத்தைக் கடைப்பிடி அகண்ட விளக்கு ஏற்றப்படும் அந்த முதல் நாளின் போது காலை ஆறுமணியிலிருந்து மாலை வரை அந்த விளக்கைத் தரிசனம் செய்யும் வரை சந்நிதியிலிருந்து தங்கி மெளன விரதம் இருக்குமாறு அன்னை சிலருக்கு சொல்வது உண்டு. நமக்கு மட்டும் இப்படியெல்லாம் அம்மா சொல்ல மாட்டேன் என்கின்றாளே என்று அவன் குறைபட்டுக் கொண்டதும் உண்டு. அன்னை எதிர்பார்க்கின்ற மனப்பக்குவம் நம்மிடம் இல்லை. அதனால் தான் நமக்கெல்லாம் இப்படி சொல்லமாட்டேன் என்கிறாள். அவர்களுக்கு இருக்கிற பக்தியும் நம்பிக்கையும் நமக்கு வரவில்லை. அதனால் தான் நம்மைக் கழித்துக் கட்டிவிட்டாள் என்று அவன் கருதிக் கொண்டு அமைதியாகி விடுவது உண்டு.

அம்மாவின் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணத்தைக் கண்டு பிடிப்பதிலும், புதுமையோடு வேடிக்கை பார்ப்பதிலும் அவன் இருந்தானே தவிர பக்தியை வளர்த்துக் கொள்ளவில்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அருள்வாக்குக் கேட்கச் சென்ற போதில் எல்லாம் அன்னையின் அன்பிலோ, கருணையிலோ எந்தவித மாற்றமும் தெரியவில்லை. மாதத்துக்கு இரண்டு முறை மூன்று முறையாவது அருள்வாக்குக் கேட்டால் தான் அவனுக்கு மனம் தெளியும். அந்த அருள்வாக்கு பாட்டரிக்குச் சார்ஜ் ஏற்றிக்கொண்டு வருவது போல இருக்கும். அந்த நாள் எங்கே? இந்த நாள் எங்கே?

அகண்ட விளக்கைத் தரிசிக்க வராமல் போனது ஒருமுறை நவராத்திரி விழாவுக்கு முதல்நாள் அம்மா ஏற்றும் இந்த அகண்ட விளக்கைத் தரிசிக்க அவன் வரவில்லை. மறுநாள் முதற்கொண்டு தானே நவராத்திரி ஆரம்பிக்கிறது! சனி ஞாயிறு நாட்கள் விடுமுறை இடையில் வரும் போது கோயிலுக்கு வந்தால் போயிற்று என்று கருதிக் கொண்டு அகண்ட விளக்கு ஏற்றப்படும்.நாளில் வராமல் நின்று விட்டான்.

அகண்ட விளக்குத் தரிசனம் பற்றி அன்னை நவராத்திரி முடிந்து ஒரு நாள் அருள்வாக்குக் கேட்கச் சென்ற போது “மகனே! அகண்ட விளக்கு ஏற்றப்படும் நாளின் போது தரிசிக்க நீ வந்திருக்க வேண்டும். அந்த விளக்கினைத் தரிசிப்பதால் உன் ஊழ்வினை கொடுமை தணியும் மகனே!” என்றாள் ஆடிப்பூரத்துக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதும், நவராத்திரிக்கு முதல் நாள் அகண்ட விளக்கைத் தரிசிப்பதும் ஊழ்வினைக் கொடுமைகள் தணிவதற்கு உரியவை என்பதனை அவனுக்குத் தான் அம்மா முதலில் புலப்படுத்தினாள். இதன் அருமை பெருமைகள் பிற்பாடு பக்தர்கள் எல்லார்க்கும் எடுத்துரைக்கப்பட்டது.

கால்மண்ணும் கதைபேசும் அப்போதெல்லாம் குறைவான தொண்டர்களே கோயில் பணி புரிய வருவார்கள். பெரும்பாலான தொண்டர்கள் வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள். “அடிக்கடி இந்த மண்ணை மிதித்துவிட்டுப் போ!” என்று அம்மா சொல்வது உண்டு. நீ எத்தனை முறை இந்தச் சந்ததியை மிதித்து விட்டுச் செல்கிறாயோ அத்தனை முறையும் உன் கால் மண்ணும் கதை பேசும் மகனே!” என்று சொன்னது உண்டு. அப்படிப் பத்தாண்டுக்காலம் அந்த மண்ணை மிதித்துப் பெற்ற அனுபவங்கள் தான் இப்படி உங்கட்குக் கதைகளாக வெளிவருகின்றன.

குடும்பத்தோடு சந்நிதிக்கு வா

பணக்கஷ்டம் காரணமாகத் தொண்டர்கள் சிலர் தாம் மட்டும் அடிக்கடி வருவார்கள்; விழாக்காலங்களில் மட்டும் தான் குடும்பத்தை அழைத்து வருவார்கள்! அவர்கள் நிலை அப்படி! ஆனால் அம்மா அதனை ஏற்றுக் கொண்டது இல்லை. “அடிக்கடி குடும்பத்தோடு வந்து சந்நிதியை மிதித்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்கிறேன். ஆனாலும் எவனும் கேட்பதில்லை மகனே! இங்கே அடிக்கடி குடும்பத்தோடு வருவதற்குக் கணக்குப் பார்க்கிறான்!ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் வந்துவிட்டால் பாதிராத்திரியில் எழுந்தோடிப் போய் மருத்துவன் வீட்டுக் கதவைத் தட்டி அவன் கேட்பதை அப்படியே கொடுத்துவிட்டு வருகிறான் மகனே! குறிப்பாகச் சொன்னாலும் புரியவில்லை மகனே”? என்றாள்.
 
புரட்டாதி நவராத்திரி விழா கல்வி, செல்வம்,வீரம் ஆகிய இந்த மூன்றுமே மனிதனுக்குத் தேவைப்படும் செல்வங்கள்.. எனவே அவற்றைக் கொடுக்கும் கலைமகள் , திருமகள் , மலைமகள், ஆகிய மூவர்க்கும் நடக்கும் விழா நவராத்திரி விழா. இந்த ஒன்பது நாட்களிலும் அன்பர்கள் ஆயிரத்தெட்டு மந்திரங்களோடு சிறப்பு அபிடேகம் செய்வது உண்டு. விழா இறுதியில் அன்னை பக்திச் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களை ஆலயச் செலவிலேயே பல தலங்களுக்கு அனுப்பி வைப்பாள்.

                   

]]>