இத்தனை காலமாக நம் முன்னோர் கூறிய தொண்டு மனப்பான்மையை நாம் மறந்து விட்டு வெறும் ஆடம்பரம், படோடோபம், என்பவற்றில் பொழுதைக் கழிக்கத் தொடங்கி விட்டோம். இறையன்பு இல்லாமல் வாழ்பவன் விலங்குக்குச் சமமாவான்.ஆனால் இறையன்பை வெறும் பூசை, தூபதீபம் என்பவற்றில் மட்டும் காட்டினால் போதாது. ஒவ்வோர் உயிரும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் அல்லவா? உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்று திருமூலரும் என்னுளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே என்று நாவரசர் பெருமானும் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தேர்ந்தேன் என வள்ளலாரும் பாடிச் சென்றனர். ஒவ்வோர் உடம்பும் இறைவன் உறைகின்ற ஆலயம் என்றால் பிற உயிர்கள் அனைத்தையும் மதித்து நடத்தல் வேண்டும். பிற உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்க முயல வேண்டும். இதனையே வள்ளுவர் அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன்னோய்போல் போற்றாக் கடை. எனவே மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் தலையாய கடமை யாது எனில் பிற உயிர்களின் துன்பத்தை போக்க முயல்வதே ஆகும். அதுவே பெரும் பூசையாகும். அதனைச் செய்பவன் வேறு பூசையில் ஈடுபடவேண்டாம். அவன் வாழ்நாள் முழுவதும் இருபத்திநான்கு மணி நேரமும் அவன் பூசை செய்ததாகவே கருதப் பெறும். உழைப்பே இறைவனை அடையும் வழி என்று தானே கண்ணனே கூறுகிறான். இடைக்காலத்தில் நாம் மறந்துவிட்ட இந்த மாபெரும் தத்துவத்தை அன்னை ஆதிபராசக்தி ஓயாமல் நினைவூட்டுகிறாள். கோவிலில் சென்று வழிபடவும் வேண்டும். அதனைவிட அதிகமாகப் பிறருக்கு உழைக்கவும் வேண்டும். ஏழைகளின் துயர்துடைக்க முன்னிற்பவன் வேறு பூசைகளில் ஈடுபடக்கூடத் தேவை இல்லை. அன்னை வலியுறுத்திக் கூறும் இந்தக் கருத்தை இரவீந்திரநாத் தாகூர் தம் கீதாஞ்சலி என்ற நூலில் மிக விரிவாகக் கூறுவதைக் காணலாம். மந்திரங்களை முணுமுணுப்பதையும், பாடல்கள் பாடுவதையும் உருத்திராட்ச மாலை உருட்டுவதையும் சற்று நிறுத்துங்கள். இந்த இருண்ட தனி அறையில் கதவுகளை மூடிக்கொண்டு யாரை நினைத்துப் பூசை செய்கிறீர்கள்? உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். நீங்கள் வழிபடும் தெய்வம் அங்கே இல்லை என்பதை அறிவீர்கள். ஏர் உழுபவன் கடினமான தரையை எங்கெங்கே உழுகின்றானோ… சாலை போடுபவன் எங்கே கற்களை உடைக்கிறானோ, அங்கே உள்ளான் நீங்கள் காண விரும்பும் கடவுள். வெயிலிலும், மழையிலும் தூசு படிந்த உடையுடன் அவர்களுடன் இருக்கிறான் ஆண்டவன். உங்கள் மடியான ஆடையைக் களைந்துவிட்டு உங்கள் ஆண்டவனைப் போலவே நீங்களும் புழுதி படிந்த தரைக்கு வாருங்கள். விடுதலையா? எங்கே இருக்கிறது அந்த விடுதலை? நாம் வணங்கும் நம் ஆண்டவனே கூடப் படைப்புத் தொழிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளானே! நம்முடன் இன்றைக்கும் என்றைக்கும் தொடர்பை ஏற்றுக் கொண்டுள்ளானே அவன்! கண்மூடிச் செய்யும் தியானத்தில் இருந்து வெளியே வாருங்கள். பூவையும், நறும்புகையையும் சற்று விட்டு வாருங்கள். உங்கள் உடைகள் கிழிந்து கறைபட்டால் என்ன ஆகிவிடும்? உங்கள் ஆண்டனைச் சந்தித்து அவன் பின்னேயே நெற்றி வியர்வை நிலத்தில் விழநில்லுங்கள். (கீதாஞ்சலி பா 11) அன்னை அன்பர்களுக்கு செய்யும் உபதேசத்தை கவிஞர் தாகூர் தம் கவிதையில் பிழிந்து தந்துள்ளார். அருள்வாக்கு நடைபெறும் நேரங்களில்கூட ஏழைகள்தான் முதலில் வரவேண்டும் என்று கட்டளை இடுகிறாள் அன்னை. அவர்களுக்காக அவள் காட்டும் பரிவு அளவிடற்கரியது. *பழைய நம்பிக்கைகள் தடையாக உள்ளன!* ஆன்மிக வழிகளை நாடி வருபவர்களிடம் அன்னை வழிகாட்டாமல் விடுவதில்லை. இதில் தொல்லை எங்கே வருகிறது என்றால் வருபவர்கள் சில அடிப்படையான பழைய நம்பிக்கைகள், கொள்கைகள் என்பவற்றில் அளவுகடந்த உறுதிப்பாட்டுடன் வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆன்ம முன்னேற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட வழியில்தான் இருக்க முடியும் என்று நம்புகின்றனர். எனவே அன்னை வேறு ஏதாவது ஒரு வழியைக் கூறியவுடன் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக வருகின்ற நம்பிக்கைகளை அவ்வளவு சுலபமாக எறிந்து விடுவதும் கடினம்தான்.

]]>