“நீ பாலகன் என்றாலும், ஆசிரியர் என்றாலும், அடிகளார் என்றாலும் யார் எந்த நிலையில் நின்று எப்படிச் சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்! அவரவர் மனத்துக்கும் எண்ணத்துக்கும் தக்கவாறு இந்த அவதார நாடகம் நடக்கிறது!” – அன்னையின் அருள்வாக்கு

நம் பக்தர்கள், செவ்வாடைத் தொண்டர்களிலும் இரண்டு வகையினர் உண்டு.

அடிகளாரை வயப்படுத்திக் கொண்டு அருள்நிலையில் அம்மா அருள்வாக்கில் சொல்வதைக் கண்ணும் கருத்துமாகக் கேட்பவர்கள் உண்டு. அதன்படி நடப்பவர்கள் உண்டு. இவர்கள் அடிகளார் சாதாரணமாகச் சொல்கிற வார்த்தைகட்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அருள் நிலையில் வரும்போதுதான் “அம்மா” – என்பது இவர்களின் கருத்து.

இன்னொரு சாரார், அடிகளார் வேறு! அம்மா வேறு அல்ல! நானாக அவன் இருப்பான்! அவனாக நான் இருப்பேன்! என்று அம்மாவே சொல்லிவிட்ட பிறகு இருவரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அடிகளாரை தெய்வமாகவும், குருவாகவும் உங்கட்குக் கொடுத்திருக்கிறேன் என்று எப்போது அம்மாவே சொல்லி விட்டாளோ அப்புறம் வீண் ஆராய்ச்சி எதற்கு? இனி எல்லாம் நமக்கு அடிகளார் தான்! என்று கருதி அடிகளாரையே பற்றிக் கொண்டவர்கள் உண்டு.

சிலருக்கு அருள்நிலையில் அருள்வாக்கு கேட்டால் தான் திருப்தி! சிலருக்கு அடிகளார் சொன்னாலே திருப்தி!

இவர்கள் தவிர, இரண்டும் கெட்டான் என்ற மூன்றாவது ரகமும் உண்டு. இவர்களை அம்மாவும், அடிகளாரும் ஆட்டம் காட்டும் வேடிக்கை இருக்கிறதே அது அலாதியான அனுபவம்!
திண்டுக்கல் அன்பர் ஒருவர் அடிகளாரைத் தரிசிக்கச் சென்று தனது பிரச்சனை பற்றிக் கேட்கும் போது, ‘நீங்கள் அருள்வாக்கில் கேட்டுக்கொள்ளுங்கள் சார்!’ என்று கூறி அனுப்புவது வழக்கம். புற்று மண்டபத்தில் அருள்வாக்கு கேட்கப் போனால், ‘நீ அடிகளாரிடம் கேட்டு அதன்படி நடந்து கொள்!’ என்று அம்மா சொல்லி அனுப்புவது வழக்கம். பொறுத்துப் பார்த்த அவர், ஒருநாள் அடிகளாரிடம் துணிந்து கேட்டே விட்டார்!

‘நீங்கள் அருள்வாக்கில் கேட்டுக்கோ என்கிறீர்கள்! அங்கே போனால், அடிகளாரிடம் கேட்டுக்கோ என்று அம்மா சொல்கிறது! நான் என்னதான் செய்வது? என்று அழாத குறையாகக் கேட்டாராம்.

அது கேட்டு அடிகளார் புன் முறுவலோடு சொன்ன பதில்….

“நாங்கள் இருவரும் இப்படித்தான் விளையாடுவோம்!”

திருமதி அடிகளார் கேட்டது

திருமதி அடிகளார் அவர்கள் ஒருமுறை சக்தி ஒளியில் எழுதியிருந்தார்கள். அது இது!

“ஒருநாள் அம்மாவிடம் அருள்வாக்கில் கேட்டேன்.

நீங்களும் அடிகளாரும் ஒன்றுதானே அம்மா? அம்மாவைக் கேட்க வேண்டும் என்று அடிகளார் ஏன் கூறுகிறார்?

மகனைக் கேட்டு அதன்படி நட என்று ஏன் கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அம்மா கூறினார்கள், “நான் அவனாகவும் அவன் நானாகவும் இருந்தாலும், சில விஷ்யங்களை மகன் கூற வேண்டும். சில விஷயங்களை நான் கூற வேண்டும்.”

ஆகவே, அம்மாவைக் கேளுங்கள் சார்! என்று அடிகளார் கூறுவதை நம்பியும், மகனைக் கேட்டு அதன்படி நட! என்று அம்மா கூறுவதை நம்பியும் அதன்படி நாம் நடக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.

அருள்வாக்கில் அம்மா….

அருள்வாக்கில் அம்மா ஒருவர்க்குச் சொன்னாளாம்.

‘மகனே! அடிக்கடி என்னிடம் அருள்வாக்கு கேட்க வராதே! இனி உனக்கு எல்லாமே அடிகளார் தான்! அடிகளார்! அடிகளார்! அடிகளார்! என்று நீ இருந்தால், உனக்கு எல்லாவற்றையும் அடிகளாரே பார்த்துக் கொள்வான்! உனக்கு வேண்டிய எல்லாம் அவன் மூலமாகவே கிடைக்கும்’ என்றாளாம்.

இவையெல்லாம் இந்த அவதார நாடகத்தில் கேட்டறிந்த தேன் துளிகள்!

ஈரோடு இளைஞர் அணித் தொண்டர் ஒருவர் சொன்னார்!

“எனக்கு இந்தக் குழப்பமெல்லாம் இல்லை! அருட்கூடமும், பாதபூஜையும், பாதபூஜையில் வரும் வார்த்தைகளுமே போதும்! இந்த ஆத்தா மாயக்காரி! ஜாலக்காரி! புற்றுமண்டபத்தில் போய் உட்கார்ந்து அருள்வாக்கு கேட்க வேண்டி நான் அலைய மாட்டேன் என்றார்!

இந்த குரு பக்தியும், குருவின் மீது கொண்ட அபார நம்பிக்கையும் கொண்ட இவரை ஆதிபராசக்தி கைவிட்டு விடுவாளா என்ன…?

“தன் விதி மீறாத் தகையினள் போற்றி ஓம்” – என்று ஒரு மந்திரம் உண்டல்லவா?

தன் பக்தனுடைய ஊழ்வினை முடிச்சு பலமாக இருக்கும் போது அதனைத் தளர்த்த முடியாதபடி தெய்வத்துக்கும் ஒரு தரும சங்கடம் வரும்.

அப்படிப்பட்ட நேரங்களில் தெய்வம், ஒரு குருவையோ, மகானையோ காட்டி, அவனிடம் போ! என்று கைகாட்டி அனுப்பி வைக்கும்.

மகான்கள் வரலாற்றைப் படித்த போது நமது சிற்றறிவுக்கு எட்டிய உண்மை இது!

சில உதாரணங்களைச் சொல்கிறேனே…..

திருவாரூர் தட்சிணா மூர்த்தி சுவாமிகள்

திருவாரூரில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்று ஒருவர் இருந்தார். தஞ்சை மன்னன் சரபோஜி காலத்தில் வாழ்ந்தவர். எப்போதும் நிர்வாணமாகவே சுற்றித் திரிவார். அவர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டு இன்றும் இருக்கிறது. அவர் வாழ்வில் நடந்த சம்பவம் இது!

சித்தூர் மாவட்டம் – சோமநாத முதலியார்

அந்நாளில் சித்தூர் மாவட்டத்தில் சோமநாதர் என்ற பிரபலமான பணக்காரர் ஒருவர் இருந்தார். சிறந்த சிவபக்தர். அவரை நீண்ட நாட்களாக ‘குன்ம நோய்’ எனப்படும் குடல்வலி வாட்டி வதைத்தது. பார்க்காத வைத்தியம் இல்லை. சாப்பிடாத மருந்து இல்லை ஆனாலும் நோய் தீர்ந்த பாடில்லை.

கடைசியாக, சிதம்பரம் நடராசனே கதி! என்று சிதம்பரம் கோயில் வந்தார். அங்கு முறைப்படி நீராடி நடராசப் பெருமான், சிவகாமி அன்னையை விரதம் இருந்து வழிபட்டார். இரண்டு நாள் ஆயிற்று. நோயின் தொல்லை தாங்க முடியவில்லை.

“இன்றைக்கு நடராசர் கோயிலிலேயே தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். கூரான கத்தி ஒன்றை இடுப்பில் செருகிக் கொண்டார்.

அர்த்தசாம பூஜை (நள்ளிரவு பூஜை) சமயம் கோயிலுக்குள் நுழைந்து ஒரு தூண் மறைவில் நின்று கொண்டார்.

பூஜைகள் எல்லாம் நிறைவடைந்தன. கோயில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு தீட்சதர்கள் எல்லோரும் வீட்டுக்கு போய்விட்டார்கள்.

ஒளிந்திருந்த சோமநாத முதலியார் சந்நிதி எதிரில் வந்து, ‘பெருமானே! என் பிரார்த்தனைக்கு இரங்க மாட்டாயா? நீயும் கைவிட்டால் நான் எங்கே போவேன்? என்று சொல்லியபடி கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துக்கொள்ள முற்பட்ட போது….

கருவறையிலிருந்து அசரீரி

அச்சமயம் கருவறையிலிருந்து ஒரு அசரீரிக் குரல் கேட்டது. “அப்பா! மகனே! அங்கே சென்று தட்சிணாமூர்த்தியைக் கண்டு பிரார்த்தனை செய்! அந்தக் கணமே நோய் நீங்கி நலம் பெறுவாய்! என்று குரல் கேட்டது.

அன்றிரவு சிதம்பரம் கோயிலில் தங்கி, விடிந்ததும் யாருக்கும் தெரியாமல் வெளியே வந்தார். திருவாரூர் நோக்கிப் பயணமானார்.

திருவாரூர் தியாகராசர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்குத் தனியாக ஒரு சந்நிதி உண்டு. அங்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, சோமநாத முதலியார் நோய் தீர வேண்டிக் கொண்டார். இரவு தங்கித் தியானம் இருந்தார். அப்படியும் அந்தப் பாழும் நோய் குறையவில்லை. மனம் கலங்கி இரவு தூக்கும் போது தில்லை நடராசப் பெருமான் அவர் கனவில் தோன்றி! “அடே! நான் சொன்ன தட்சிணாமூர்த்தி இதுவல்ல! இந்த ஊரில் தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் ஒரு சித்தன் திரிகிறான். அவனிடம் போ” என்று சொல்லிவிட்டு மறைந்தான்.

விடிந்ததும் எழுந்த சோமநாத முதலியார், தட்சிணாமூர்த்தி சுவாமிகளைப் பற்றி விசாரித்தார்.

ஒரு சிலர் அவரது அடையாளம் சொல்லினர். அவ்வாறே தேடிய போது ஒரு வீட்டு வாசலில் கிடந்த, எச்சில் இலையிலிருந்த உணவைப் புசித்துக் கொண்டிருந்தார் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். அவரைச் சுற்றி ஒரு நாய்க் கூட்டம்.

அவரை அறிந்த சோமநாத முதலியார் அவரது காலடிகளில் விழுந்து வணங்கினார்.

சிதம்பரம் நடேசன் அனுப்பினானோ…

உடனே அவரைப் பார்த்த சுவாமிகள், “சிதம்பரம் நடேசன் உன்னை இங்கே அனுப்பினானோ?” என்று கேட்டு, “இந்தா இதை வாயில் போட்டுக் கொள்!” என்று மிஞ்சியிருந்த எச்சில் இலைச் சோற்றைக் கொடுத்தார். அதுவே தெய்வப் பிரசாதம் என்று நினைத்து, சோமநாத முதலியார் அருவருப்பு இல்லாமல் உண்டார்.

தீராத குடல்நோய் குணமாயிற்று.

வெந்நீர் கலந்து பிசைந்த சோற்றைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளாத அவரது குடல் அதன்பின் எல்லாவித உணவையும் ஏற்றுச் சீரணித்தது.

எல்லாம் வல்ல ஆற்றல் பெற்ற சிவபெருமான், தன் பக்தன் நோயைத் தானே தீர்க்காமல் குரு தட்சிணாமூர்த்தியிடம் கைகாட்டி அனுப்பி நோயைத் தீர்த்தானே ஏன்?

சோமநாத முதலியாரின் நோயைத் தீர்க்க முடியாதபடி வினை முடிச்சு பலமாக இருந்தது போலும்! நடராசனுக்கே தரும சங்கடம் வந்தது போலும்! அதனால்தான் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளிடம் அனுப்பி வைத்தான்.

சித்தப் பிரம்மை அடைந்த பிராமணப் பெண்

அந்த நாளில் திருவொற்றியூரில் பிராமணர் ஒருவர் வசித்து வந்தார். அவர் மகள் துர்த் தேவதைகளால் பீடிக்கப்பட்டுச் சித்தப் பிரமை ஏற்பட்டுப் பைத்தியம் போல் திரிந்தாள். அங்கும் இங்கும் ஓடுவாள். ஆடை நெகிழ்வதும் தெரியாது. ஆடை விலகுவதும் தெரியாது. எதிர்ப்பட்டவர்களைத் திட்டுவாள், அடிப்பாள், பாவம் பைத்தியம்! என்று ஊரார் பொறுத்துக் கொள்வார்கள்.

அப்பெண்ணின் தாய் தந்தையர் வைத்தியர்கள், மந்திரவாதிகள் ஆகியோர் துணைகொண்டு நோய் நீக்க முயன்றார்கள். என்ன முயன்றும் பைத்தியம் தீரவில்லை!

ஒருநாள், அப்பெண்ணின் தந்தை, திருவொற்றியூர் சிவபெருமான் சந்நிதியில் சென்று, “ஐயனே! என் மகளைப் பற்றிக் கொண்டுள்ள துர்த்தேவதைகள் நீங்க வேண்டும். அவள் பைத்தியம் தெளியவேண்டும். இன்னும் 3 நாட்களில் அவள் சுய உணர்வுக்கு வராவிட்டால் அவளுக்கு நானே விஷம் கொடுத்துச் சாகடித்து விடுவேன்! இதனால் வரும் பாவம் எனக்கு அல்ல! உனக்கே! சொல்லிவிட்டேன்” என்று வேண்டிக்கொண்டு உறங்கிவிட்டார்.

அன்றிரவு அந்தப் பிராமணர் கனவில் சிவபெருமான் தோன்றி, “அன்பனே! ஞானசித்தனும் ஜீவன் முத்தனுமாகிய ஒருவன் நிர்வாணமாகக் கடற்கரையில் திரிந்து கொண்டிருக்கிறான். நாளைக் காலையில் பட்டினத்தார் சமாதியின் அருகில் அமர்ந்து ‘நிட்டை’யில் இருப்பான்.

உன் மகளை அழைத்துக் கொண்டு போய், அவன் கண் பார்வை படுமாறு ஓரிடத்தில் உன் மகளை நிறுத்தி வைத்துக் கவனித்தபடி இரு.

அவன் நிட்டை கலைந்ததும் கண் திறந்து உன் மகளை நோக்குவான். அவன் கடைக்கண் பார்வை பட்ட மாத்திரமே அவளைப் பிடித்திருக்கும் பேய்களும் நோய்களும் விலகிவிடும்” என்று கூறிவிட்டு மறைந்து போனான்.

குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அந்நாளில் திருவொற்றியூர் கடற்கரையில் திரிந்து வந்தார்.

கனவில் ஆண்டவன் சொன்ன கட்டளைப்படி அந்தப் பிராமணர், பட்டினத்தார் சமாதி அருகே நின்றபடி, அவர் பார்வை படுமாறு தன் மகளையும் இருக்க வைத்தார்.

சிறிது நேரத்தில் சுவாமிகள் நிட்டை கலைந்து, கண் திறந்து எதிரே நின்ற பிராமணப் பெண்ணைக் கருணையோடு நோக்கினார். அவ்வளவில் அவள் பைத்தியம் தெளிந்தது. சுய உணர்வு பெற்றாள். அவளைப் பற்றியிருந்த தீய சக்திகள் அகன்றன.

சுய உணர்வு பெற்றதும் அந்தப் பிராமணப் பெண், சுவாமிகளிடம் கேட்டாள்.

‘எங்கள் குல தெய்வமே! உங்கள் கடைக்கண் பார்வை பட்டு என் உடல் நோய் நீங்கியது.

துர்த்தேவதைகள் ஆதிக்கமும் அகன்றது. என் பிறவி நோய் நீங்கவும் அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள். அவள் விவரம் அறிந்த புத்திசாலிப் பெண்!

சுவாமிகள் அவளுக்கு உபதேசம் அளித்தார்.

“அறியப் படுவனவாகிய ஜக, ஜீவ, பர கற்பனைகளை விடுத்து, அறியும் அறிவாகவே இருக்கில் உன் பிறவி நோய் நீங்கும்”

-இந்த உபதேசம் புரிகிறதா? புரியவில்லையா? சரி விடுங்கள்! இதனை விளக்க இங்கு இடமில்லை. பிறிதொரு முறை பார்ப்போம்.

குரு தட்சிணாமூர்த்தி ஒரு ஞானசித்தன்! ஜீவன் முக்தன்! அவன் பார்வை படுமாறு உன் மகளை நிறுத்தி வை! என்று அன்று சிவபெருமான் ஒரு பிராமணனுக்கு உளவு சொல்லிக் கொடுத்தான்.
பரம்பொருளான ஆதிபராசக்தி முதன்முதல் மதுரை ஆன்மிக மாநாட்டின் போது, அதே உளவைச் செவ்வாடைத் தொண்டர்கட்குச் சொல்லிக் கொடுத்தாள்.

“மதுரை ஆன்மிக ஊர்வலத்தில் அடிகளார் பார்வை படுமாறு வந்து கலந்து கொள்!” என்று செவ்வாடைத் தொண்டர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

அண்மையில் கடலூர்க்கு ஆன்மிகப் பயணமாக அருள்திரு அடிகளார் வர இருந்தபோது, குறிப்பாக ஒன்றைச் சொல்லி வருத்தப்பட்டார்கள்.

“உம்! நமது மக்களுக்கும் தொண்டர்கட்கும், பக்தர்கட்கும் ஆன்மிக ஊர்வலத்தின் மகிமை தெரியவில்லையே….” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார்கள்.

அருள்திரு அடிகளாரின் பார்வை மகத்துவம் பலருக்கும் புரியவில்லை. ஊர்வலத்தில் கலந்து கொள்வோர்க்கு நயன தீட்சை கிடைக்கிறது என்பது தெரியவில்லை. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இது போன்ற விஷயங்களை நம்மாலும் விளக்கிச் சொல்ல முடியவில்லை. கேட்பவனுக்கும் அவகாசம் இல்லை. இது அவசர யுகமாக இருக்கிறது!

செங்கற்பட்டு ஆன்மிக ஊர்வலம்

செங்கற்பட்டு ஆன்மிக ஊர்வலத்தின் போது தான் கண்ட அற்புதக் காட்சி பற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் என்னிடம் பரவசத்தோடு கூறினார்.

“சார்! ஊர்வலம் முடிந்து, மேடையை விட்டுக் கீழே இறங்குவதற்கு முன்பாகக் கைகளைத் தூக்கி எல்லோருக்கும் வணக்கம் செலுத்துவது போல, எதிரே இருக்கிற மக்களையெல்லாம் அம்மா ஒரு சுற்றுச் சுற்றிப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு இறங்குகிறாளே… அப்போது… அடிகளார் கண்ணிலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு எதிரே இருப்பவர்கள் மேலேயெல்லாம் படர்ந்தது சார். என் மேலேயும் பட்டது சார். அது பட்டவுடன் எனக்கு மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவோமோ என்று தள்ளாடினேன் சார். எப்படியோ விழாமல் சுதாரித்துக் கொண்டேன் சார்.

என் மேல் மட்டுமா அந்த ஜோதி படர்ந்தது?

அந்த மேடைக்கு எதிரே நின்றபடி பீடி பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்த ரிக்சாக்காரன், பஸ் பிடிக்கக் காத்திருந்தவன், கிண்டலடித்தவன் எல்லோருக்கும் அந்த ஜோதி தரிசனம் கிடைத்தது. ஆனால் எனக்கு மட்டும்தான். அது என் கண்கட்குத் தெரிந்தது. மற்றவர்கட்கு அது தெரிந்ததா! இல்லையா? எனக்குத் தெரியாது.

இதெல்லாம் அம்மாவின் அவதார காலத்தில் ஜனங்களுக்குக் கிடைக்கிற சலுகை சார்!” என்று உணர்ச்சி மல்கச் சொன்னார்.

“அடிகளார் பார்வைக்குப் பாவம் போக்கும் சக்தி உண்டு! அடிகளார் பார்வை தீர்க்கமாகப் படுமாறு பார்த்துக் கொள்!” என்று ஆதிபராசக்தியே அருள்வாக்கில் உளவு சொல்லிக் கொடுத்தாள்.

இதெல்லாம் தெரியாமலும், புரியாமலும் அடிகளார் ஆன்மிகப் பயணத்தைப் பற்றி விமர்சிப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!

“ஆன்மிகத்தை உலகமே எதிர்க்கும். அதுதான் கலியுகத்தின் இயல்பு! உன் தொண்டுகளைச் செய்து கொண்டே போ! இறுதியில் ஆன்மிகம்தான் வெல்லும்” என்பது அன்னையின் அருள்வாக்கு

தொடரும்….
சக்தி ஒளி, ஜூலை 2010
பக்கம் (17 – 25)