நாடி நாடி நாடி என்று எதை நாடிப் போனாலும் கடைசியில் என்னைத்தான் நாடி வரவேண்டும் மகனே! என்பது அன்னையின் அருள்வாக்கு

நாடி நாடி என்று எத்தனை முறை அன்னை அடுக்குகிறாள் பாருங்கள்! இந்த ஒலி நயம் அதற்கு ஓா் இலக்கிய மணத்தைத் தருகிறது.

“பொன்னை நாடினோம், பொருளை நாடினோம், பதவி நாடினோம், பட்டம் நாடினோம், உறவை நாடினோம், யார் யாரிடமோ உதவி நாடினோம், உரிமை நாடினோம், பிரிவை நாடினோம், பெற்றவள் அன்னையை, ஆதிபராசக்தியை நாடினோமா?

அன்னையின் அவதாரத்தை, மாதாவாக, பிதாவாக, குருவாக, தெய்வமாக வந்திருக்கிற அடிகளாரை நாடினோமா?

“யாரையுமே நாடிப்போகாத நான் உங்களை நாடி வந்திருக்கிறேன்” என்று பேசும் அன்னையின் பாசத்தை நாடினோமா? பாதத்தை நாடினோமா…?

“நானே அடிகளாராக அவதாரம் ஆகி வந்திருக்கிறேன். என்னை எவனடா புரிந்து கொண்டீா்கள்?” என்று தாய் உள்ளம் தவிக்கிறதே, அந்தத் தவிப்பு நீங்க வழியை நாடினோமா?

“பல்லாயிரக் கணக்கான பேருக்கு அருள்வாக்குச் சொல்லியும் ஆன்மிகத்துக்காக நாலு போ் கூட இல்லையேயென்று அவன் தவிக்கிற தவிப்பை யாரடா புரிந்து கொண்டீா்கள்..?” என்று கேட்கும் வார்த்தைகளும், வேதனையும் தீா்க்க வழியை நாடினோமா?

அம்மா சொல்லுகிறாள் மகனே! எதை எதையோ நாடிப் போகிறாயே! எதை நாடிப் போனாலும் கடைசியில் என்னைத் தான் நாடி வரவேண்டும் மகனே! என்று தன்னை நாடி வரச்சொல்லுகிறாள். ஏன் என்றால் தாயே நம்மை “நாடி” நாடித்தானே வந்திருக்கிறாள் அல்லவா?

நாம் அவளை நாடிப்போவது கிடக்க, அவளே நம்மை நாடி வந்திருக்கிறாளாம். உறுதியாக வந்திருக்கிறாளாம், உறவாக வந்திருக்கிறாளாம், குருவாக வந்திருக்கிறாளாம், குல தெய்வமாக வந்திருக்கிறாளாம்.

நாம் ஓடிவிடாமல் உறுதியாகப் பற்றிக்கொள்ள, நம்மைக் கெட்டுவிடாமல், கண்டபடி போக விட்டுவிடாமல் இருக்க வந்திருக்கிறாளாம்.

நாம் தான் அம்மா வந்திருக்கிறாள், நம்மை நாடித்தானே வந்திருக்கிறாள் என்னும் அந்த எளிமை புரியாமல் எதை எதையோ நாடி அலைகிறோம்.

அம்மாவே நம்மை நாடி வந்திருக்கிறாள் என்றால், நம்மீது அவள் நாட்டம் கொண்டு இருக்கிறாள் என்று அா்த்தம்.

நாம் அடைய வேண்டிய இலக்கு அவளேதான் என்ற அா்த்தம்.

பிறவி இருட்டில் சிக்கிக் கிடக்கிறோம், பேதமை இருட்டில் மக்கித் தவிக்கிறோம்.

ஆசைச் சுழலில் அகப்பட்டோம். அறியாமைச் சூறாவளியில் அகப்பட்டோம்.

பொறாமை நெருப்பில் வெந்து மடிகிறோம், புகழ் போதையில் உவந்து அலைகிறோம்.

காமக் கடலில் களித்து மகிழ்கிறோம், கண்டபடி சுற்றித்திரிகிறோம்.

நம்முடைய நாட்டம் எல்லாம் இப்படியே தடுமாறி, திசை மாறிப் போகிற போது, தம்மை நாடி நம்மை இழுக்கும் அம்மையின் அருள்வாக்குகள் நம்முடைய இலக்கை அறிவிக்கும் – இயம்பும் முரசுகள்!

காலக் கடலின் கலங்கரை விளக்கம், கருத்துத் தெளிவின் அமிர்த ஊற்று. பிறவிக் கோட்டையின், வெப்பம் நீக்கி வைக்கும் அருவித்தென்றல்.

நம்மைச் சுமந்து, தன் வசம் சோ்க்கும் அழகுத் தோணி.

ஆசை ஆற்றின் கரையைக் கடக்கும் வாழ்க்கைப் படகின் வசமான துடுப்பு.

நாட வேண்டிய என்னை நாடாது விட்டு, நாடாத பொருள் எல்லாம் நாடுகிறாயே! என்று அழைக்கும் அருளின் அழைப்பு.

நானே நாடி வந்தும், என்னை நாடி ஏன் வரவில்லை, என்று தெய்வம், நம் நிலை கண்டு சிரிக்கும் ஏளனச் சிரிப்பு.

எந்த நிலையில் இருந்தாலும், என் சொந்த வலையில் வந்து விழு என்று “அம்மா“ கூப்பிட்டு அருள் செய்யும் செம்பட்டு விரிப்பு.

எதையெதையோ நீ நாடினாலும், என்னிடம் தான் இறுதியில் வரவேண்டும், ஏமாந்து விடாதே! என்னும் எச்சரிப்பு.

இவையெல்லாம் கொண்ட நம் அன்னையின் அருள்வாக்குகள் நாம் பாதுகாத்து வைத்துப் பற்றிப் பயன்படுத்த வேண்டிய இலக்கியப் பெட்டகமே!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. பேராசிரியா். த. சோமசுந்தரம், பூம்புகார்.

சக்தி ஒளி ஏப்ரல் 2007

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here