மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டு வழிபடுகின்ற பக்தர்கள் அனைவரும் சுயம்பு, அன்னையின் விக்கிரகம், அருள் திரு அடிகளார் ஆகிய மூன்று உருவங்களும் சேர்ந்த படத்தை வைத்தே வழிபட்டு வருகின்றனர். பயன் பெறுகின்றனர். வழிபாட்டு மன்றங்களிலும் இந்தப் படமே பூஜைக்கு உரிய படமாக அமைந்துள்ளது. அன்னையின் அருள் வேண்டி நடத்தப்படும் கலச விளக்கு, வேள்விப் பூஜைகளிலும் இந்தப் படமே முன் வைத்துப் பூஜை செய்யப்படுகிறது. விழாக்கால ஊர்வலங்களிலும் இந்தப் படமே பயன்படுத்தப்படுகிறது. அன்னை அருள்வாக்கு உத்தரவுப் படியே
இந்தப் படம் அறிமுகப் படுத்தப்பட்டது.

இதெல்லாம் புரியாமல் சிலபேர் நம் பக்தர்களையும், செவ்வாடைத் தொண்டர்களையும் ஆரம்ப காலத்தில் குழப்பி வந்தார்கள்.

ஆதிபராசக்தி படத்தில் உயிருள்ள மனிதர் ஒருவரை வைத்துக் கும்பிடலாமா? இது சரியா? முறையா? என்றெல்லாம் கேட்டுத் திசை திரும்பினார்கள்.

தொடக்க நாட்களில் அன்னையின் கோயில் கருவறையில் சுயம்பு மட்டுமே இருந்தது. அபிடேகம், அர்ச்சனை முதலியன யாவும் சுயம்புவுக்கே நடத்தப்பட்டன.

அன்னையை வீட்டிலும் வைத்து வழிபாடு செய்வதற்கு ஒரு படம் வேண்டுமே என்று கருதிய, செங்கற்பட்டு வழக்கறிஞர் ஒருவர், அருள்வாக்கில் இது பற்றி அன்னையிடம் முறையிட்டார்.

பொறு மகனே! உரிய நேரம் வரும் போது நானே சொல்வேன் என்றாள் அன்னை.

சில மாதங்கள் கழித்து அன்னை உரிய படம் ஒன்றைச் சொன்னாள்.

“மகனே! சுயம்புவின் அருகில் இந்தப் பாலனை (அடிகளார்) வைத்துப் படம் எடுக்க ஏற்பாடு செய்து கொள் அவ்வாறு படம் எடுக்கும் முன்பு, பாலகனுக்கு நெற்றியில் திருநீற்றை பூச வைத்துப் படம் எடுத்துக் கொள்.

என் சந்நிதிக்கு வருபவர்களில் திரு நீறே பூசாதவர்கள் இரண்டு பேர், அவர்களுள் பாலகன் ஒருவன் (அடிகளார்) மற்றொருவன் இதோ இருக்கிறானே…. இவன் என்று சொல்லிப் புலவர் சொக்கலிங்கத்தை காட்டினாள். அவ்வாறு சுட்டிக்காட்டி, இவன் கையாலேயே திருநீறு பூச வைத்துப் பாலகனைச் சுயம்பிற்கு அருகில் அமர வைத்துப் படம் எடுக்க ஏற்பாடு செய்து கொள்! என்னை வழிபட விரும்புகிற பக்தர்கட்கு இது தான் படம்! என்று அருள்வாக்கில் கூறினாள்.

சுயம்பு அருகே அருள்திரு அடிகளார் இரண்டும் சேர்ந்த படம் தான் ஆரம்ப கால வழிபாட்டுப் படம்.

கருவறையில் விக்கிரகம் நிறுவப் பட்ட பிறகு, சுயம்பு, விக்கிரகம், அருள் திரு அடிகளார் என்ற மூன்றும் கொண்ட படத்தையே வழிபாட்டுக்குரிய படம் என்று கூறினாள்.

புலவர் சொக்கலிங்கம் திருநீறு பூசாததற்குக் காரணம்

புலவர் சொக்கலிங்கம் திருநீறு பூசாததற்குக் காரணம் உண்டு.

புலவர் சொக்கலிங்கம் ஆரம்பத்தில் கடவுளை நம்பாதவர். பின்னர் சித்தர்களிடமும், யோக நெறியிலும் அவர்க்கு ஈடுபாடு வந்தது.

திருவலஞ்சுழி மகான் வள்ளல் பரஞ்சோதி, சாலை ஆண்டவர் ஆகியோரிடம் உபதேசம் பெற்றவர். தூய ஞான மார்க்கத்திலே அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இப்படிக் குருவிடம் உபதேசம் பெற்றவர்கள் எந்த சமயச் சின்னங்களையும் தரிக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். அதனை மீறுவது குருவின் ஆணையை மீறுவது போலாகும் என்று கருதி அவர் திருநீறு பூசுவது இல்லை.

அன்னையின் கேலி

அவர் அன்னையிடம் அடைக்கலமாக வந்து சேர்ந்த பிறகும், அன்னையிடம் இரகசியமான ஆன்மிகச் செய்திகள் பலவற்றைக் கேட்டறிந்த பிறகும் கூட, குருவுக்கு அஞ்சினார். அவ்வாறு அஞ்சுவது நியாயம் என்று கருதினார். ஆகவே ஆலயத்தில் வழங்கப்பட்ட திருநீற்றுப் பிரசாதத்தை பூசுவதற்கும் பயம். கீழே கொட்டவும் பயம். என்ன செய்தார் தெரியுமா? கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டார்; எஞ்சியதை மார்பில் தடவிக் கொண்டார்.

அம்மா, ஒரு நாள் இது பற்றிக் கேலியாகக் கேட்டாள்.

“என் மகனே! என் திருநீறு மார்புக்கு வரலாம்; வாய்க்கு வரலாம்….. மேலே நெற்றிக்கு மட்டும் வரக் கூடாதோ…. என்று கேலியாகக் கேட்டுவிட்டு, என்னிடம் வந்த பிறகு இதிலெல்லாம் ஒன்றுமில்லை மகனே!” என்று சொல்லிய பிற்பாடு தான் நெற்றியில் திருநீறு பூச
ஆரம்பித்தார்.

எது எப்படியோ…. அடிகளார் நெற்றியில் திருநீறு பூசுவதற்கு அன்னை புலவர் சொக்கலிங்கத்தைத் தான் ஏவினாள்.

அவன்! அவள்! அது ! – முப்பொருள் தத்துவம்

இந்தப் படத்திற்குரிய விளக்கத்தைப் பிற்பாடு அன்னையே விளக்கினாள்.

மகனே! என்னை ஆணாக வழிபடுவோர் உண்டு; பெண்ணாக வழிபடுவோர் உண்டு. ஆணாகவும், பெண்ணாகவும் அல்லாமல் ஜோதியாக (அது ) வழிபடுவோர் உண்டு.

நான் ஆணாக இருக்கிறேன் என்பதை உணர்த்த அடிகளாரையும், பெண்ணாக இருக்கிறேன் என்பதை உணர்த்த கருவறைச் சிலையை வைத்திருக்கிறேன். அதுவாக (ஜோதி ) இருக்கிறேன் என்பதை உணர்த்த சுயம்பாக இருக்கிறேன். அந்தப் படம் அவன்! அவள்! அது! என்ற முப்பொருள் தத்துவம் கொண்டதடா! என்றாள்.

ஓம் சக்தி

நன்றி

அவதார புருஷர் அடிகளார்

பாகம் -3

பக்கம் 3-5.